DMK

பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு தி.மு.க மகளிரணி பேரணி - கைக்குழந்தையுடன் பங்கேற்ற பெண்!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி தி.மு.க மகளிரணி சார்பில் நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

"பெண்கள் பாதுகாப்பு வேண்டும்" என்ற வாசகம் அடங்கிய முகக் கவசம் அணிந்து நாடு முழுவதும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு எரியூட்டும் வகையில் பேரணியை ஒளி ஏற்றி துவங்கி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

பேரணி துவங்குவதற்கு முன்பு பேசிய தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, “உத்தர பிரதேசத்தில் பயங்கரமான பாலியல் வன்கொடுமை நடத்துள்ளது. தலித் பெண்ணின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். அங்குள்ள அரசாங்கம் அந்தச் சம்பவத்தை மூடி மறைத்துக்கொண்டுள்ளது.

எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தார்கள். பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. நிர்பயா உயிரிழப்புக்குப் பின்னர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க பல சட்டங்கள் வந்துவிட்டன. ஆனாலும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது.

பாரத் மாதா கி ஜெய் என்று கூறும் உத்தர பிரதேசத்தில் இந்த பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. அங்கு பதவியில் இருக்கும் முதல்வர் பெண்களை பாதுகாக்க மறுக்கிறார். இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது” எனப் பேசினார்.

பின்னர் உரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

தலித் இனத்தைச் சேர்ந்த அப்பாவி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது மட்டுமல்லாமல் இறந்த பெண்ணின் உடலை பெற்றோருக்கும் காட்டாமல் அவசர அவசரமாக எரித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை தடுத்து கீழே தள்ளி இருக்கிறார்கள். ராகுல் காந்தியை தள்ளி இருக்கிறார்கள் என்று எண்ணக்கூடாது ஜனநாயகத்தையே தள்ளி இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டிருக்கும் அகில இந்திய தலைவராக இருக்கக்கூடிய ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது பெண்கள் பாலியல் பலாத்காரம் அதிகமாக நடைபெறும் மாநிலம் உத்தர பிரதேசம். அடுத்ததாக தமிழ்நாடு. இந்தக் கோலத்தில்தான் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்து இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். குற்றவாளிகள் ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் இதுவரை இதற்கு நீதி நியாயம் வழங்கப்படவில்லை.

இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காரணத்தால் ஒரு பெண்ணின் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள் இதுதான் இன்றைக்கு நடைபெறும் கொடிய நிலை.

உத்தரபிரதேசம் இன்று ரத்த பிரதேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இதுபோன்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே சி.பி.ஐ விசாரணை நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள், நியாயமாக நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தபின் உடனடியாக தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு முறையாக வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதுபோன்ற வழக்குகளுக்கு உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்தார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்ட தி.மு.க மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டித்து நடைபெற்ற இப்பேரணியில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் பங்கேற்றது கவனம் பெற்றுள்ளது.

Also Read: உ.பி கொடூரம் : பா.ஜ.க அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் முழக்கம்! #Video