DMK

நீட் விவகாரத்தில் அ.தி.மு.க அரசு கபட நாடகம் ஆடுகிறது - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆளும் கட்சியினர் நீட் தேர்வில் நாடகம் நடத்தி வருவதாகவும் நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசிற்கு போதுமான அழுத்தம் தரவில்லை எனவும் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள், இரங்கல் தீர்மானத்துடன் நிறைவு பெற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், "மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர் ஏற்காதது கண்டிக்கத்தக்கது."

மேலும், " இரண்டு நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவது போதாது என்று ஏற்கனவே தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கோரிக்கை வைத்திருந்தார். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இரண்டு நாட்களில் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப போதாது" எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்," நீட் பிரச்சனை குறித்தும், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்ப உள்ளோம்" என்றார். ஆளும் கட்சியினர் நீட் தேர்வில் நாடகம் நடத்தி வருவதாகவும், இதுவரை நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை, வலியுறுத்தவில்லை என்றும், போதுமான அழுத்தம் தரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.