DMK
“அனைவரும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்” - இணையவழி மாரத்தான் நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (7-9-2020) சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற்ற - சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சைதை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடத்திய, "சர்வதேச இணைய வழி மாரத்தான் ஓட்டத்தின்" நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு :
“மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை மாவட்டச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் மிகச் சீரிய வகையில் எல்லோரும் பாராட்டும் வகையில் - நிலையில் இந்த நிகழ்ச்சியினை அமைத்துத் தந்திருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் முதல், முதியவர்கள் வரை, மாணவர்கள் - மாணவிகள் பலர் பங்கேற்கக் கூடிய வகையில் இந்த மாரத்தான் பந்தயம் நடைபெற்றிருக்கிறது என்பதை, தொடக்கத்தில் அவர் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்.
இந்தப் போட்டியினை கடந்த 6-ஆம் தேதி இதே இடத்தில் தொடங்கி வைக்கும் வாய்ப்பினை நான் பெற்றேன். அது வெற்றிகரமாக நடைபெற்று, ஏறக்குறைய 27 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் பங்கேற்கக் கூடிய வகையில் நடந்து முடிந்துள்ளது.
அதனைப் பாராட்டும் வகையில், அந்தப் பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் விருதுகள் வழங்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியை இப்போது மா.சுப்பிரமணியன் நடத்திக் காட்டியிருக்கிறார்.
எப்போதும் மா. சுப்ரமணியன் ஓடிக்கொண்டே இருப்பார். அது மாரத்தான் பந்தயம் மட்டுமல்ல; கழகப் பணியாக இருந்தாலும், பொதுப் பணியாக இருந்தாலும், எந்தப் பணியாக இருந்தாலும் ஓடிக்கொண்டே இருப்பார். இப்போது எல்லோரையும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால், மிரட்டியே அனைவரையும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறார். அது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பதையும் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதையும் மறந்து விடக்கூடாது. அதுவும் இன்றைய சூழலில் நாடு முழுவதும் கொரோனா நோய் பரவி எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
நாம் அனைவரும் இப்போது மாஸ்க் அணிந்து கொண்டே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இது தற்காப்புக்காக, நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, நம்மால் பிறருக்கு நோய் ஏற்பட்டு விடக்கூடாது - தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பின் காரணமாக நாம் இந்த மாஸ்க் அணிந்து கொண்டுள்ளோம்.
கொரோனா என்கிற இந்தத் தொற்று நோய்க்கு மருந்து கிடையாது. இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிப்போம், கண்டுபிடிப்போம் என்ற செய்திதான் வந்து கொண்டிருக்கிறது. தடுப்பு ஊசியோ அல்லது தடுப்பு மருந்தோ இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதற்காக மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, அதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கிறதா என்றால் இல்லை.
அதை வைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் தமிழ்நாட்டில் இருக்கிறதே தவிர; கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வழியில்லாமல் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை அமைந்து இருக்கிறது.
கடந்த 5, 6 மாதங்களாக நான் அறிவாலயத்தில் கட்சிப் பணிகளை ஆற்றமுடியவில்லை. வரக் கூடியவர்களைச் சந்திக்க முடியவில்லை அதற்குரிய சூழ்நிலை இன்னும் அமையவில்லை.
அதனால்தான் ஐந்தாறு மாதங்களாக காணொலிக் காட்சி மூலம் நம்முடைய கழகத்தைச் சார்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, மாவட்டச் செயலாளர்களாக இருந்தாலும் சரி, நகரக் கழக, ஒன்றியக் கழக, பேரூர்க் கழக நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, கட்சி உடன்பிறப்புகள் யாராக இருந்தாலும், காணொலிக் காட்சி மூலம்தான் சந்திக்கக் கூடிய சூழ்நிலை அமைந்து இருக்கிறது என்பதை நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கட்சித் தோழர்கள் மட்டுமல்ல; அனைத்துக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் சரி; இந்த கொரோனா நோய் சம்பந்தமாக ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் மருத்துவ நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், சிறு, குறுந்தொழில் வணிகர்கள் ஆகியோரிடம் காணொலிக் காட்சியின் வழியாகத்தான் சந்தித்து உரையாட வேண்டியிருக்கிறது.
நான் காணொலிக் காட்சியில் சந்திக்கும்போது எல்லாம் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
என்னவென்று கேட்டால், உடல்நலத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், கொரோனா ஒருவேளை நம்மைத் தாக்கினாலும், அதைத் தாங்கக்கூடிய எதிர்ப்புசக்தி வேண்டும். ஆகவே நடைப்பயிற்சி செய்யுங்கள், நேரம் கிடைக்கும்போது யோகா செய்யுங்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
சொல்லிக்கொண்டிருப்பது மட்டுமல்ல; தொடர்ந்து செய்துகொண்டிருப்பவன் நான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இங்கே இருப்பவர்களிடமும் அதையே சொல்ல விரும்புகிறேன்.
உளப்பூர்வமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டீர்கள் என்றால், நாளையில் இருந்தாவது நீங்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலையில் ஒருமணி நேரம் ஒதுக்கி, உங்களுக்கு என்ன வசதியிருக்கிறதோ அதைக்கொண்டு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மா. சுப்பிரமணியன், இந்த மாரத்தானை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் பதிவு செய்யப்பட்டதன் மூலம் சேர்ந்த தொகை ஏறக்குறைய 23 லட்ச ரூபாய் என்று சொல்லியிருக்கிறார். நாளைய தினம் இந்தத் தொகையை அரசின் கொரோனா நிவாரண நிதியாக ஒப்படைக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதற்காக என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.”
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!