DMK

“அருந்ததியினர் உள்ஒதுக்கீடு: முத்தமிழறிஞர் கலைஞர் முடிவுக்கு கிடைத்த வெற்றி” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

"அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனத் தீர்ப்பளித்து அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தி.மு.க. சார்பில் நன்றி!"

"தி.மு.கழகத்தின் சமூகநீதிக் கொள்கைக்கும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பதால், இத்தீர்ப்பை இதயபூர்வமாக வரவேற்று இறும்பூது எய்துகிறேன்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு” என்று மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட அரசியல் சாசனச் சட்ட அமர்வு இன்று (27.8.2020) அளித்துள்ள மிக முக்கியமான தீர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிக் கொள்கைக்கும் - குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பதால், இதயபூர்வமாக வரவேற்று இறும்பூது எய்துகிறேன்.

இத்தீர்ப்பினை வழங்கி, அருந்ததியின சமுதாயத்தின் வாழ்வில் ஏற்றப்பட்ட ஒளி – என்றும் அணையா விளக்காக, குன்றின் மேலிட்ட விளக்காக, விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருக்கும் சமயங்களிலும், ஆட்சியில் இல்லாத நேரங்களிலும் 'சமூகநீதி' என்ற ஒரே சிந்தனையுடன் ஒருமுகமாகச் செயல்படும் பேரியக்கம். தமிழக சமூகநீதி வரலாறு அதை எப்போதும் எடுத்துச் சொல்லும்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7.6.1971-ல் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த 16 சதவீத இடஒதுக்கீட்டை 18 சதவீதமாக உயர்த்தினார். பிறகு 1990-ல் அந்த 18 சதவீதத்தையும் முழுமையாகப் பட்டியலின மக்களுக்கே உரித்தானதாக ஆக்கி, தனியாக ஒரு சதவீத இடஒதுக்கீட்டை 22.6.1990 அன்று பழங்குடியின மக்களுக்கு மட்டும் அளித்து - பட்டியலின, பழங்குடியின இடஒதுக்கீட்டை 19 சதவீதமாக உயர்த்தியதோடு - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இடஒதுக்கீட்டையும் சேர்த்து - தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டு வரலாற்றை உருவாக்கி - சமூகநீதியின் பிறப்பிடமாக இந்தியாவில் தனித்துவம் பெற்று நிற்கிறது தமிழகம் என்பதை அனைவரும் அறிவர்.

இந்தச் சூழ்நிலையில்தான் 23.1.2008 அன்று கழக ஆட்சியின் ஆளுநர் உரையில், “சமூக பொருளாதாரத்தில் அடித்தளத்தில் அருந்ததியினர் இருப்பதால், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தனியாக உள்ஒதுக்கீடு வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது” என அறிவித்து - அதற்காக 12.3.2008 அன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டி ஆலோசனை செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். நீதியரசர் திரு. ஜனார்த்தனம் அவர்களின் பரிந்துரை, அனைத்துக் கட்சியினரின் ஆலோசனை ஆகியவற்றைப் பெற்று அருந்ததியினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 27.11.2008 அன்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவைத் தலைவர் கலைஞர் அவர்களே தாக்கல் செய்ய முடிவு செய்து - உடல் நலக்குறைவு காரணமாக அவைக்கு வர இயலவில்லை என்பதால் - அந்த சட்ட முன் வடிவின் அறிமுக உரையைத் தன் கைப்படவே எழுதி என்னிடம் கொடுத்து அனுப்பினார். அந்தச் சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்த தலைவர் கலைஞர் அவர்களின் உரையை உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் அவையில் எடுத்துரைத்தேன்.

அதில், “இந்த நாள் அவர்கள் வாழ்நாளில் எந்த அளவிற்கு முக்கியமான நாளாக விளங்குமோ, அது போலவே என்னுடைய வாழ்வில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்குக் காரணமானவன் நான் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. என் முதுகுத்தண்டில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, காயம் பரிபூரணமாகக் குணம் ஆனதில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றேனோ, அதைவிட அதிக அளவிற்கு அருந்ததிய சமுதாயத்திற்காக நடைபெற்றுள்ள சமூகநீதி அறுவை சிகிச்சையில் இன்று முதல் அந்த சமுதாயமே பெரிதும் நலம் அடையப்போகின்றது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சி அடைகிறேன்” என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சமூகநீதி வரிகள் இன்றைக்கும் என் நெஞ்சில் நிறைவாகப் பதிந்துள்ளது.

பிறகு 29.4.2009 அன்று அருந்ததியினர் சமுதாயத்திற்கான உள் ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு- இன்றைக்கு அருந்ததியினர் சமுதாயத்தினரின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னேற்றத்தில் அந்த உள் ஒதுக்கீடு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

ஆகவே திராவிட முன்னேற்றக் கழக அரசும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சமூகநீதிப் பார்வையும் - ஏன், ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் சங்கநாதமாக இருந்து வரும் அடித்தட்டு மக்களைக் கைதூக்கி விட வேண்டும் என்ற முழக்கத்திற்கும் - அருந்ததியினர் இடஒதுக்கீட்டை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆக்கமும், ஊக்கமும், உத்வேகமும் அளிப்பதாக அமைந்திருக்கிறது.

கழக அரசு கட்டி எழுப்பிய சமூகநீதி எனும் தேக்குமரத் தூணைச் சுற்றி - அசைக்க முடியாத ஒரு நிரந்தரத் தன்மையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு என்ற அக மகிழ்ச்சியுடன், அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்!