DMK
"பத்தாண்டுகால படுபாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்டாக வேண்டும்" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (19-08-2020) மாலை, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் (மறைந்த) முன்னாள் அமைச்சரும் மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் துணைச் செயலாளருமான கு.லாரன்ஸ் அவர்களது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு :
“முன்னாள் அமைச்சரும், கழகத்தின் மாநிலச் சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் துணைச் செயலாளருமான, அருமைச் சகோதரர் கு.லாரன்ஸ் அவர்களின் திருவுருவப்படத்தை இப்போது நான் திறந்து வைத்துள்ளேன்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கொரோனா காலமாக இல்லாமல் இருந்திருந்தால், குமரி கிழக்கு மாவட்டக் கழக அலுவலகத்துக்கே நான் வந்திருப்பேன்.
கொரோனா காலமாக இருந்தாலும், அருமைச் சகோதரர் கு.லாரன்ஸ் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்வதை தள்ளிப் போடக்கூடாது என்பதால் காணொலிக் காட்சி மூலமாக இன்றைய தினம் அவரது படத்தைத் திறந்து வைத்துள்ளேன்.
ரோம் நகரத்தில் இருந்த ஏழு திருத்தொண்டர்களில் ஒருவர் செயிண்ட் லாரன்ஸ். திருச்சபையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசன் சொன்னபோது, அச்சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தவர் செயிண்ட் லாரன்ஸ்ஸ் என்று அவரைப் பற்றிய வரலாறு சொல்கிறது.
அத்தகைய லாரன்ஸ் பெயரைத் தாங்கிய நம்முடைய லாரன்ஸ் அவர்களும் ஏழைகளுக்கு உதவும் இரக்க குணம் கொண்டவராக வாழ்ந்து மறைந்துள்ளார். பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்துள்ளார்.
அதனால் கழகத்தில் மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் துணைச்செயலாளர் பதவி தரப்பட்டது. அமைதியாக - அதேநேரத்தில், சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்தார் லாரன்ஸ்.
அவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு வருந்தினேன். முன்னாள் அமைச்சரும் மாவட்டக் கழகச் செயலாளருமான சுரேஷ் ராஜனிடம் போன் செய்து கேட்டுக் கொண்டும் இருந்தேன். ஆனால் அவரை இழக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டோம்.
அன்றைய தினமே அவரது மகன் சேவியர் தயானந்த்தை தொடர்பு கொண்டு பேசி எனது ஆறுதலைச் சொன்னேன்.
லாரன்ஸ் அவர்களது மறைவு என்பது தக்கலைக்கோ, அல்லது பத்மநாபபுரம் தொகுதிக்கோ மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல; ஒட்டுமொத்த குமரி மாவட்டத்துக்கே ஏற்பட்ட இழப்பாகும்!
மொத்த மாவட்ட மக்களுக்காகவும், மாவட்ட வளர்ச்சிக்காகவும் தான் அவர் உழைத்தார். சிறுபான்மைப் பிரிவில் இருந்து செயல்பட்ட அவர், அனைவரின் உள்ளார்ந்த நட்பைப் பெற்றவராக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டாலும் அனைத்துக் கட்சியினரும் அன்புகாட்டும் மனிதராக அவர் இருந்துள்ளார். அதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்த அனைத்துக் கட்சியினரும் வந்ததாகக் கேள்விப்பட்டேன். முன்னாள் அமைச்சராக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து நெருங்கிப் பழகக் கூடியவராக இருந்துள்ளார் லாரன்ஸ்.
அரசியலைப் போலவே விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார் லாரன்ஸ். பேட்மின்டன் அவருக்குப் பிடித்தமான விளையாட்டாக இருந்துள்ளது. தேசிய அளவில் துப்பாகிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். வழக்கறிஞர் – அரசியல்வாதி - விளையாட்டு வீரர் - துப்பாக்கிச் சுடும் வீரர் - சமூக சேவகர் என பன்முக ஆற்றலாளராக லாரன்ஸ் அவர்கள் இருந்துள்ளார்.
இப்படி பன்முக ஆற்றல் கொண்டவர்களைப் பார்ப்பது கடினம். அத்தகைய அரிதான மனிதரை நாம் இழந்துள்ளோம்.
கு.லாரன்ஸ் அவர்களின் துணைவியார் ஜேசுராஜம் அவர்களுக்கும், மகன்கள் ஆண்டோ ஸ்டாலின் அவர்களுக்கும், டாக்டர் சேவியர் தயானந்த் அவர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து கழகத்துக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும், குறிப்பாக குமரி மாவட்டத்துக்கும் சேவையாற்றி இருக்க வேண்டிய லாரன்ஸின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
இந்தப் படத்திறப்பு விழாவின் மூலமாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அனைவரும் உங்கள் உடல்நலத்தில் கவனமாக இருங்கள் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். கொரோனா வைரஸ் பரவலை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறிய மத்திய - மாநில அரசுகள், அந்த வைரஸ் பரவிய பிறகும் போதுமான அளவுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நாளுக்கு நாள் வைரஸ் பரவல் அதிகமாகித்தான் வருகிறது.
பரிசோதனை செய்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் தெரிந்துவிடும் என்பதால் பரிசோதனைகளையே நிறுத்திவிட்டார்கள். மரணங்களையே மறைத்துவிட்டார்கள். பாதிக்கப்படுவோர் தொகையையும் மரணம் அடைவோர் எண்ணிக்கையையும் பாதி அளவுக்குக் குறைத்துத்தான் காட்டுகிறார்கள். மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று மக்களை அரசாங்கம் கைகழுவி விட்டது.
இந்தச் சூழலில், நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு மக்களையும் காப்பாற்றி, கழகப் பணியையும் ஆற்றவேண்டிய மிக முக்கியமான மூன்று கடமைகள் உங்களுக்கு இருக்கிறது. அதில் மிக முக்கியமானது உங்களது உடல்நலத்தைக் கவனித்துக் கொள்வது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை நாம் இழந்துள்ளோம். மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து விட்டார்கள். எனவேதான் கவனமாக இருக்கவேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
இனிமேல்தான் நமக்கு அதிகமான வேலைகள் இருக்கிறது. மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்பாடுகளைத் தடுத்தாகவேண்டும். சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரப்போகிறது. பத்தாண்டுகால படுபாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்டாக வேண்டும்.
தமிழகம் இழந்த பெருமையைத் திரும்பப் பெற வேண்டும். அப்பணிகளுக்குத் தயாராக உங்கள் உடலையும் உள்ளத்தையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அருமைச் சகோதரர் லாரன்ஸ் அவர்களின் புகழ்வாழ்க எனக் கூறி விடை பெறுகிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!