DMK

"தளபதியை செதுக்கிய கலைஞர்” - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம்!

இந்தியாவின் முதுபெரும் அரசியல் வித்தகரான முத்தமிழறிஞர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “1949 இல் தொடங்கப்பட்ட தி.மு.கழகத்தை 1969 வரை தலைமையேற்று வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா! அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, 1969 முதல் இறுதி வரை (2018) தலைமையேற்று வழிநடத்தியவர் கலைஞர்! அண்ணா தலைமையேற்றுச் செயல்பட்ட காலத்திற்கும் கலைஞர் தலைமையேற்றுச் செயல்பட்ட காலத்திற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் ஒத்ததாகும்!

அண்ணாவின் காலத்தில் கருத்து மோதல்கள் ஆரோக்கியமாகவும், அரசியல் நாகரிகத்தோடும் இருந்தது. ஆனால், கலைஞரின் காலத்தில் கருத்து மோதல்களுக்குப் பதிலாக அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள், பழிவாங்கும் படலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இத்தகைய சூழலை எதிர்கொண்டு அரசியல் பேராண்மையோடு கலைஞர் செயல்பட்டார்.

தமிழகத்தில் நடைபெற்ற 14 சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் 13 இல் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ‘சட்டமன்றப் பொன்விழா’ கண்டவர் கலைஞர்! அரசியலில் ஏற்ற இறங்கங்களைப் பார்த்தாரே தவிர, தேர்தலில் தோல்வியைக் கண்டவர் அல்லர்!

ஏறத்தாழ 42 ஆண்டுகாலமாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகவும் பாதுகாப்பாக வழிநடத்தி வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! குறிப்பாக 1972 இல் எம்.ஜி.ஆர். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிளவை எதிர்கொண்டு -அரசியல் நடத்தி, மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க.வை அரியணையில் ஏற்றி சாதனை படைத்தவர் கலைஞர். அதற்காக அவர் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம்!

1969 முதல் தமிழக அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால், கலைஞருடைய அரசியல் முடிவுகள் அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததை எவரும் மறுக்கமுடியாது. குறிப்பாக, 1972 இல் நடைபெற வேண்டிய சட்டமன்றத் தேர்தலை ஓராண்டுக்கு முன்பாக 1971 இல் நடக்க இருந்த நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தி, வெற்றியை ஈட்டியது அவரது சிறந்த ராஜதந்திரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு! ஒருமுறை தந்தை பெரியார் திட்டக்குடியில் பேசும்போது (1967), “கருணாநிதியின் உழைப்பும் முயற்சியும் இல்லாவிட்டால், கழகத்தின் செல்வாக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது!” என்று கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது. எவரையும் எடைபோடுவதில் வல்லமை பெற்றவரல்லவா பெரியார்!

1949 முதல் 1967 வரை தி.மு.கழகத்தையும் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தவர் பெரியார். ஆனால், 1967 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்ற உடனே மார்ச் 2 ஆம் நாள் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் ஆகியோர் ஆளுநரைக் காலை 10 மணிக்குச் சந்தித்துவிட்டு, நேராகத் திருச்சிக்குச் சென்று தந்தை பெரியாரிடம் வாழ்த்துப் பெற்ற அரசியல் நாகரிகத்தை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இந்தச் சந்திப்பின்போது, தந்தை பெரியார், “நீங்களெல்லாம் இங்கே வருகை புரிந்து, என்னைக் கூச்சப்பட வைத்துவிட்டீர்கள்” என்று தமக்கே உரிய பாணியில் கருத்து கூறினார். என்ன இருந்தாலும், பெரியாரின் குருகுலத்தில் பயிற்சி பெற்றவர்கள் அல்லவா!

ஐந்துமுறை முதலமைச்சராக இருந்து, தமிழக முதலமைச்சர்களிலேயே அதிக நாட்களாக- 6,863 நாட்கள் முதலமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கலைஞர். இதன்மூலம் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கை முறையை மாற்றிய பெருமை இவருக்கு உண்டு! கலைஞரின் நடவடிக்கைகள் அனைத்தும் சமூகப் பார்வை கொண்டதாகவே இருந்தது. இவர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலராக விளங்கியவர். மிக மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவர் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து போராடி சமூக நீதி காத்தவர்.

தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது, சாமான்ய, ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியவர் கலைஞர்! முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம், கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்சா வழங்கும் திட்டம், ஊனமுற்றோர் நலவாழ்வுத் திட்டம், ஆதிதிராவிடர் இலவசக் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குத் தனித்துறை போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். இப்படிக் கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட்டால், அதற்கு முடிவே இருக்காது!

தமிழக அரசில் குடிசை மாற்று வாரியம், குடிநீர் – வடிகால் வாரியம், சுற்றுலா வாரியம் எனப் புதிய துறைகளைத் தொடங்கி வைத்தவர் கலைஞர்! சமூகத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லத கொடுமையைப் போக்குவதற்காகத் தனிச்சட்டம் இயற்றிய பெருமை இவருக்கு உண்டு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இயற்றி கோயிலில் ஜாதி ஒழிப்பை தொடங்கியவர் கலைஞர். முதலமைச்சராகப் பதவி வகித்தால் தலைமைச் செயலகத்திற்குச் செல்வார்! எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் முரசொலி அலுவலகத்திற்குச் செல்வார்! ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதி மக்கள் பணி செய்வதே தமது கடமை என்று ஓய்வறியாமல் உழைக்கும் உழைப்பாளி கலைஞர் என்று வரலாறு சொல்லும்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையாயக் கொள்கை- சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீடு. அதை நிறைவேற்றுவதற்காக வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளில் 20 சதவிகித தனி இடஒதுக்கீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் கலைஞர்! விவசாயிகள் மின்சாரத்தைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் செய்துவந்த காலகட்டத்தில் – அதற்குரிய கட்டணத்தைக் கட்டுவதற்கு அவர்கள் படும் வேதனையை உணர்ந்த கலைஞர், இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தார்! அந்தத் திட்டம் அறிமுகம் செய்யாத காலத்தில் விவசாயிகளுள் பெரும்பாலானோர் ஒவ்வொரு மாதமும் 21 ஆம் தேதி மின் கட்டணத்தைச் செலுத்த, அடகுக் கடையில் நிற்கவேண்டிய அவலம் தொடர்கதையாக ஆகியிருக்கும், அதற்கு வாய்ப்பில்லாமல் செய்தவர் கலைஞர்!

மக்களுக்காகத் திட்டங்களை அறிவித்து – அதற்கான நிதியை ஒதுக்கி அதனுடைய பலன்கள் மக்களுக்கு முழுமையாகப் போய் சேருகிற வகையில் அதிகார வர்க்கத்தை முடுக்கிவிடுவதில் இவரை எவரும் மிஞ்சமுடியாது. அந்த அளவுக்குத் திட்டங்களின் பயன்கள் இடைத்தரகர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து செயல்பட்டவர் கலைஞர்.

தேசிய அளவில் மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக அன்னை சோனியா காந்தியின் கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியில் முதலில் ஈடுபட்டவர் கலைஞர். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்குவதில் முன்னணிப் பங்கு வகித்தவரும் கலைஞர்தான்!

இதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியின் சாதனைகளின் அடிப்படையில் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைந்து. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மிகச்சிறப்பாகச் செயல்பட்டு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடைபோடுவதற்கு உறுதுணையாக இருந்தவர் கலைஞர்.

அன்னை இந்திரா காந்தி கூறியதைப்போல, தி.மு.கழகத்தைப் பொருத்தவரை, ஆதரிப்பதிலும் எதிர்ப்பதிலும் உறுதியாக இருக்கும் என்ற நம்பகத்தன்மையின் காரணமாக மத்தியில் நிலையான ஆட்சி தொடர்ந்து நடத்திட முக்கியப் பங்கு வகித்தவர் தி.மு.கழகத்தின் தலைவர் கலைஞர்! அதன் மூலம் மத்திய அமைச்சரவையில் தமிழகத்திலிருந்து முக்கிய துறைகளில் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்று, அதிக நிதியை பெற்று தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றினர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தோடு எத்தகைய நம்பகத்தன்மையுடன் உறவுகளை வைத்திருந்தாரோ, அதை போலவே உறவுகளை தொடர்ந்து வைத்திருப்பவர். தி.மு.கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின். கலைஞர் அவர்களிடம் 45 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பயிற்சி பெற்றவர் தளபதி. தி.மு.கழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை துணை முதலமைச்சராக 2009 இல் நியமித்தார். இந்த பொறுப்பில் வருவதற்காக தளபதி உழைத்த உழைப்பு சாதாரணமானதல்ல. இதற்காக 35 ஆண்டுகாலம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இளமைப்பருவம் முதல் கடுமையாக உழைத்திருக்கிறார். பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்திருக்கிறார்.

திராவிட முன்னேற்ற கழகத்தில்தமது கடுமையான உழைப்பின் மூலம் படிப்படியாக பல்வேறு பதவிகளை பெற்று இறுதியாக கலைஞர் நலிவுற்ற காலத்தில் ஜனவரி 2017 இல் தி.மு.கவின் செயல் தலைவராக பொறுப்பேற்றார். ஆகஸ்ட் 7, 2018 இல் முத்தமிழறிஞர் கலைஞர் மறைவிற்கு பிறகு தி.மு.கழகத்தின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டார்.

தி.மு.கழகத்தின் தலைவராக இருந்து கலைஞர் அவர்கள் எப்படி கட்சியை இயக்கினாரோ, அதேபோலவே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இத்தகைய ஆற்றலும், திறமையும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பதற்கு காரணம் இவர் கலைஞர் அவர்களால் அணு, அணுவாக செதுக்கி வளர்க்கப்பட்டவர். அதனால் தான் இன்றைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் கலைஞர் மறைவிற்கு பிறகும் சிறிய சேதாரம் கூட இல்லாமல் கட்டுக்கோப்பாக கம்பீரமாக பீடுநடை போட்டு வருகிறது. எந்த இயக்கத்தை மறைந்த கலைஞர் அவர்கள் தனது உயிரினும் மேலாக நேசித்து, தனது வாழ்நாளை அர்பணித்தாரோ, அந்த தி.மு.கழகத்தை கட்டி காப்பாற்றுகிற ஆற்றல் மிக்க பணியை சிறப்பாக செய்வதே மறைந்த கலைஞருக்கு தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் செலுத்தும் நினைவு அஞ்சலியாக இருக்கமுடியும்.

முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்கட்டும், ஒளிரட்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நினைவு நாளில் போற்றுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “கல்லக்குடியில் களமாடி தமிழ்க்குடி காத்த தலைவன்” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவுநாள் சிறப்புக்கட்டுரை !