DMK

“கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் மாரத்தான் 2020” - துவக்கி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

முத்தமிழறிஞர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சர்வதேச மெய்நிகர் மாரத்தான் வலைதளத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த இணையவழி மாரத்தான் ஓட்டத்தை, சட்டமன்ற உறுப்பினரும் மாரத்தான் சாதனையாளருமான மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். துவக்க நிகழ்ச்சிக்கு முன் பேட்டியளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

“உலகத் தமிழர்களிடையே ஒப்பற்ற ஆளுமையாக 95 ஆண்டு காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்து, 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் சிறந்து, அறுபது ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் பணியாற்றி பல்வேறு சிறப்புகளை உடைய முத்தமிழறிஞர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தி.மு.க தலைவரால், "கலைஞர் மெமோரியல் இன்டர்நேஷனல் விர்ச்சுவல் மாரத்தான்" துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.kalaignarmarathon.com என்கின்ற பெயரில் இந்த இணையம் இருக்கும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளுக்கு உட்பட்டு அந்தந்த நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வயது வித்தியாசமின்றி எங்கே வேண்டுமானாலும் ஓடலாம் என்கின்ற வகையில் போட்டி நடைபெறும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு ஓடலாம்.

ஐந்து கிலோ மீட்டர், பத்து கிலோமீட்டர், 21 கிலோ மீட்டர் என்கிற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஓடிப் பழக்கம் இல்லையே என்று கூறுபவர்கள் கூட, 25 நாட்கள் நடைபறவுள்ள இந்தப் போட்டிக்கு பத்து நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு பதினோராவது நாள் முதல் ஓடலாம்.

கலைஞர் மாரத்தான்.காம் தளத்திற்குச் சென்றால் இதில் பதிவு செய்வது தொடர்பான எல்லா விவரங்களும் கிடைக்கும். 300 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டால், இந்த 25 நாட்களில் என்றைக்கு வேண்டுமானாலும் ஓடலாம்.

பதிவு கட்டணம் முழுவதும் செப்டம்பர் மாதம், கொரோனா பேரிடர் சம்பந்தமான மருத்துவ உபகரணங்கள் வாங்கி சென்னையில் ஏதேனும் ஒரு அரசு பொது மருத்துவமனைக்கு தி.மு.க தலைவரால் ஒப்படைக்கப்படும்.

ஊரடங்கால் முடங்கிக் கிடப்பவர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப ஓடி, மன வலிமையையும் உடல் வலிமையையும் பெருக்கிக் கொள்ள ஏதுவாக இந்தத் திட்டம் இருக்கும்.

உலக நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் இதில் பங்கேற்க முன்வந்திருக்கின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருப்பவர்களும் இதில் பங்கேற்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பின் குழு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும்.

கலைஞர் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கங்கள், கொரியர் மூலம் பங்கேற்பாளர்களுக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பங்கேற்பவர்களில், தினந்தோறும் 10 பேரை தேர்ந்தெடுத்து, அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று உற்சாகப்படுத்தும் வகையில் சான்றிதழும் அளிக்கப்படும்” என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

"Kalaignar memorial international virtual marathon 2020" இணையதள துவக்க நிகழ்ச்சியின்போது தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து பங்கேற்றனர்.

Also Read: “கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்!