DMK
“இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் காவி கும்பல்; தி.மு.க குறித்து அவதூறு” : ஆர்.எஸ்.பாரதி
முருகன் குறித்து கருப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனல் தெரிவித்த கருத்துகளுக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் கருத்து தெரிவித்ததாக போலியான தகவலை காவிக் கும்பல் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் தவறான பிரச்சாரங்களைச் செய்வதற்கு தமிழகத்திலே ஒரு கூட்டம் அண்மைக்காலமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மக்களிடையே நாளுக்கு நாள் பெருகி வரும் பேராதரவைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வகையில், நேற்று தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கை உருவாக்கி அதன் மூலமாக முருகனை இழிவுபடுத்திப் பேசியிருக்கும் கருப்பர் கூட்டம் குழுவுக்கு தி.மு.க ஆதரவு தெரிவிக்கும் என்கிற ரீதியில் பொய்யான ட்விட்டர் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற செயலைச் செய்வோரை தி.மு.கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவெ, சைபர் க்ரைம் போலிஸாரிடம் போலி கணக்குகள் தொடர்பாக புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
முருகனை பழித்துப் பேசிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் செயலை தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற அமைப்புகள் கண்டித்துள்ளன. தி.மு.க தலைவரும் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளார்.
மதப்பாகுபாடுகளற்று அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க-வின் பின்னால் அணிதிரண்டிருப்பதை அறிந்துள்ளது மத்திய அரசு. தேர்தல் வரவிருக்கும் நேரத்தில், இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த காவி கூட்டத்தினர் முயற்சிக்கின்றனர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க-வை உருவாக்கியபோதே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். அதன் அடிப்படையில்தான் கடந்த 70 ஆண்டுகளாக தி.மு.க பணியாற்றி வந்திருக்கிறது. அனைத்து மதத் தலைவர்களுடன் தி.மு.க அணுக்கமான உறவையே பேணி வந்திருக்கிறது.
கலைஞரின் ஆட்சிக் காலத்தில் இந்து கோயில்கள் பாதுகாக்கப்பட்டன; சீரமைக்கப்பட்டன. தி.மு.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபிறகு கும்பகோணத்தில் மகாமகம் நடத்தியது. ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்தது தி.மு.க ஆட்சியில்தான்.
கபாலீஸ்வரர் கோயில் குளத்தை முதன்முதலில் தூர்வாரும் பணியில் தலைவர் கலைஞரே தலைப்பாகை கட்டிக்கொண்டு தூர்வாரினார். தி.மு.கவில் இருப்பவர்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்கள் இந்து மதத்தினர்.
திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற இயக்கம். இதை திசைதிருப்பக்கூடிய வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது தி.மு.க சட்டத்துறை சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம். இதில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட தி.மு.க தயாராக இருக்கிறது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!