DMK
“கருணையில்லா அதிமுக அரசுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏற்றுவோம்; கண்டன முழக்கமிடுவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!
“கறுப்புக் கொடி ஏற்றுவோம்; கண்டன முழக்கம் எழுப்புவோம்!” என நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவனாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
“கொரோனா பரவலை முழவதுமாகக் கட்டுப்படுத்தி, சிகிச்சை அளித்து மக்களைக் காப்பாற்றும் திறனும் செயலும் அற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நோய்த் தொற்று பரவி பாதிப்பு ஏற்படக் காரணமானதுடன், தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையையும் உருக்குலைத்துப் பாழ்படுத்திவிட்டது. 100 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கு-அந்த ஊரடங்குக்குள் ஊரடங்கு-முழு ஊரடங்கு-அரைவேக்காடு ஊரடங்கு - டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் - என அடுத்தடுத்து புதுப்புதுக் குழப்பத்துடன் எடுக்கும் அரைகுறை முடிவுகளால் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை ஆளும் அதிகாரத்தில் அ.தி.மு.க. இருந்தாலும், மக்களின் மனதில் நம்பிக்கைக்குரிய இயக்கமாக இருப்பது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதனால், மக்கள் பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் முதல் குரல், தி.மு.கழகத்திடமிருந்தே வெளிப்படுகிறது; தீர்வுக்கான வழிமுறைகளையும் முன்வைக்கிறோம். அதனை செவிமடுக்கும் அரசியல் பக்குவமின்றி, மிச்சமிருக்கும் பதவிக்காலத்தில் சொச்சமிருக்கும் கஜானா இருப்பை எப்படி கரைத்துச் சுரண்டிக் கொழுக்கலாம் என்பது மட்டுமே இந்தக் கொரோனா கொடுங்காலத்திலும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒற்றைக் கொள்கையாக இருக்கிறது.
மரம் சும்மா இருந்தாலும் காற்று விட்டுவைப்பதில்லை என்பதுபோல எதிர்க்கட்சியான நமக்குப் பணிகள் மிகுந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பும் வளர்ந்துவருகிறது. அதனால்தான் கழக நிர்வாகிகளின் திருமுகங்களை அன்றாடம் காணொலி வாயிலாக ஆர்வத்துடன் கண்டு, அவர்களுடனான நேரடி சந்திப்பு என்பதைப்போல, உரையாடி வருகிறேன். பல துறை வல்லுநர்களிடமும் கலந்துரையாடுகிறேன். அதனடிப்படையில், ஜூலை 16ஆம் நாள் காணொலி வாயிலாக நடைபெற்ற கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினனர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பயன்தரும் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பறித்திருக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள் கிருமிநாசினி வரை ஊழல் செய்வதில் முனைப்பாக இருப்பதைக் கைவிட்டு, மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிட வேண்டும்.
மத்திய தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இதர பிற்படுத்த சமுதாயத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கும் நிலையினை மாற்றி, அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்-மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டு, வரும்காலத்தில் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளித்திடும் முறையை ஒழித்திட வேண்டும்.
-நகர்ப்புற ஏழை-எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை இந்த கொரோனா காலத்தில் நடத்துவதை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் கொண்டு வந்து, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும். தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளம் வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலைய சித்ரவதையால் படுகொலையானதற்கு விரைந்து நீதி கிடைத்திடும் வகையில் விசாரணை நடைபெற்று, குற்றம் செய்த எவரும் தப்பிக்காதபடி தாமதமில்லாமல் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மாநில அரசின் உரிமைகளைப் பறித்து-விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020 உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழகத்தின் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் மத்திய பா.ஜ.க. அரசின் அவசர சட்டத்திற்கு மவுன சாட்சியாக அ.தி.மு.க அரசு இருக்கின்ற நிலையிலிருந்து மீண்டு, கூட்டுறவு நகைக்கடன்களை வழங்கக்கூடாது என்கிற வாய்மொழி உத்தரவின் பின்னணியை விளக்கி, விவசாயத் தொழிலாளர்களை மீட்டிடும் வகையில் ஏற்கனவே உள்ள நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும்.
கொரோனா பாதிப்பு உச்சக்கட்ட நிலையில் உள்ளதால் பல்கலைக்கழகங்களின் இறுதி செமஸ்டர் உள்ளிட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்திடவேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை பலவீனப்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.கவினர் வெற்றிபெற்று பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதியினைக் கூட வழங்காமல பறக்கணிக்கும் போக்கிலிருந்து அ.தி.மு.க. அரசு திருந்திடத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நிலத்தை ஆக்கிரமிக்கும் கும்பலை எதிர்த்து மக்கள் நலனுக்காகச் செயல்பட்ட திருப்போரூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, உண்மைக் குற்றவாளிகளை நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டிக்கும் வகையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த 9 தீர்மானங்களைத் தொடர்ந்து, 10வது தீர்மானமாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை வஞ்சித்து-கொள்ளையடிக்கும் மின்கட்டண முறைக்கு எதிரான தீர்மானம் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களின் விரிவான ஆலோசனையுடன் நிறைவேற்றப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்களுக்கும் அபராதம் விதிப்பு-வாகனங்கள் பறிப்பு எனத் தண்டனை வழங்கி வரும் அ.தி.மு.க .அரசு, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களிடம், மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியதாக பல மடங்கு கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு முழுவதும் மின்சார ‘ஷாக்’கைவிட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
மின்சாரக் கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட குளறுபடிகள்-அவற்றைப் பகுப்பதில் ஏற்பட்ட கோளாறுகள் எல்லாமும் சேர்ந்து மக்கள் மீது அதிக சுமையை ஏற்றியிருப்பதை தனது சொந்த அனுபவத்தில் வாயிலாக பல துறைச் சார்ந்த பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாதாரண சாமான்யர்கள் வரை பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த மின்கட்டணக் கொள்ளையை பிடிவாதமாக நியாயப்படுத்தும் அ.தி.மு.க. அரசு, பழி முழுவதையும் மின்நுகர்வோரான மக்கள் மீதே சுமத்துகிறது.
ஊரடங்கினால் தொழில்கள் முடக்கப்பட்டு, வணிகம் பாதிக்கப்பட்டு, அன்றாட வேலைவாய்ப்புகள் அற்றுப் போயுள்ள நிலையில், கொரோனா காலத்தை சிறப்பு நேர்வாகக் கருதி மின்கட்டணச் சலுகை அளிக்கவேண்டிய அ.தி.மு.க அரசோ, நாங்கள் முறையாகக் கணக்கீடு செய்துள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்து, அதனையே செய்திக்குறிப்பாகவும் வெளியிட்டு, மக்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. நுகர்வோருக்கு நியாயமான மின் கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என வலியுறுத்தும் மின்சார சட்டத்தின் கீழ்தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை வாரியம் இயங்கி வருவதை இந்த அரசு மறந்துவிட்டது. மத்தியபிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா கால மின்கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு மட்டும் மின் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்று சுமையை ஏற்றுவது கருணையற்ற போக்காகும்.
இதனைக் கண்டிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “ரீடிங் எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு- ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாக செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் 21-7-20202 செவ்வாய்க்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து விடுகளின் முன்பும் கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது’ எனத் தீர்மானிக்கப்பட்டது.
கழகம் அறிவித்துள்ள போராட்டத்தின் அடிப்படை நியாயத்தை, மின் கட்டணக் கொள்ளையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர். அதனால்தான் தன்னிச்சையாக அவர்களிடமிருந்து ஆதரவுக்குரல்கள் பெருகி வருகின்றன. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தி.மு.கழகம் போராட்டம் அறிவித்திருப்பது போல கயிறு திரிக்கிறார்கள். மின் கணக்கீடு குறித்த தமிழக அரசின் நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம், இதில் நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல்களை அரசும் மின்வாரியமும் தீர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும், பிழைகளையும் நீக்கி, கொரோனா காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் வருமானம் குறைந்துள்ள சூழலில் மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வலியுறுத்தியும் வெகுமக்கள் பக்கம் நின்று கழகம் போராடுகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு பற்றி கழகத்திற்கு வகுப்பெடுக்க நினைக்கும் இதே அ.தி.மு.க. அரசுதான், கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டபோது, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம்வரை சென்றது. டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பது தங்களின் கொள்கை முடிவு என வாதாடி, மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குக் காரணமாக இருந்தது. டாஸ்மாக் விற்பனைக்காக கொள்கை முடிவு எடுக்கும் அ.தி.மு.க அரசு, மக்களை வதைக்கும் மின்கட்டணக் கொள்ளையைத் தவிர்க்க கொள்கை முடிவு ஏதேனும் வைத்திருக்கிறதா? அல்லது கொள்ளைக்கணக்கு ஒன்றை மட்டுமே முடிவாகக் கொண்டிருக்கிறதா? என்பதே மக்கள் எழுப்பும் வினா.
மக்களின் அந்தக் கேள்விக்குப் பக்கபலமாக, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பாலமாக, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஜூலை 21ஆம் நாள் நடத்துகின்ற கறுப்புக்கொடி அறப்போரில், கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கற்பதுடன், பொதுமக்களிடமும் அதற்கான ஆதரவைத் திரட்டும் வகையில் துண்டறிக்கைகளை வழங்கிட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி பறந்திடும் வகையில் மக்களின் பங்கேற்பு அமைந்திட வேண்டும்.
போராட்டத்தின் நோக்கம்- அதில் எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு மாவட்டக் கழகத்திற்கும் தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்காதே கொள்ளையடிக்காதே
கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்காதே!
குழப்பாதே குழப்பாதே
ரீடிங் எடுப்பதில் குழப்பாதே!
வயிற்றில் அடிக்காதே வயிற்றில் அடிக்காதே
மின் கட்டணம் என்ற பேரால் வயிற்றில் அடிக்காதே!
சலுகை வழங்கு சலுகை வழங்கு
மின் கட்டணத்தில் சலுகை வழங்கு!
தவணை வழங்கு தவணை வழங்கு
மின்கட்டணம் செலுத்த தவணை வழங்கு!
கால அவகாசம் கொடு கால அவகாசம் கொடு
மின் கட்டணம் செலுத்துவதில் கால அவகாசம் கொடு!
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
கருணையில்லாத எடப்பாடி அரசைக் கண்டிக்கிறோம்!
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
கொரோவை விட கொடூரமான அரசைக் கண்டிக்கிறோம்!
சலுகை தருகிறது கேரளா!
தமிழக அரசால் முடியாதா?
சலுகை தருகிறது மகாராஷ்டிரா!
தமிழக அரசால் முடியாதா?
சலுகை தருகிறது மத்தியப்பிரதேசம்!
தமிழக அரசால் முடியாதா?
வேண்டும் வேண்டும்
மின் கட்டணத்தில் சலுகை வேண்டும்.
வேண்டாம் வேண்டாம்
மக்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம்!
என்கிற இந்த முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பிட வேண்டும்.
கொரோனா கால ஊரடங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தனி மனித இடைவெளியுடனும் முகக்கவசம்-சானிடைசர் போன்ற பாதுகாப்பு வசதிகளுடனும் பொதுமக்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் அறப்போரில், அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கும் வகையில், இல்லங்கள் தோறும் கறுப்புக்கொடிகள் பறக்கட்டும்! அனைத்துத் திசைகளிலும் கண்டன முழக்கங்கள் அதிரட்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!