DMK

“இது பதிலறிக்கையா? பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி!

""கமிஷன்" என்ற “கரன்சி மழையில்” குளிர் ஜூரம் வரும் அளவிற்கு நனைந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நல்லாட்சி நடத்திய தி.மு.கழகம் குறித்தோ "உள்ளாட்சியில் நல்லாட்சி" கண்ட எங்கள் கழகத் தலைவர் குறித்தோ விமர்சிக்க எவ்வித தார்மீக உரிமையோ அருகதையோ இல்லை!" என சட்டப்பேரவை தி.மு.க கொறடாவும் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., பதிலடி கொடுத்துள்ளார்.

வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் அ.தி.மு.க அரசின் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய தி.மு.க தலைவருக்கு பதில் அறிக்கை என்ற பெயரில் அமைச்சர் வேலுமணி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர.சக்கரபாணி விடுத்துள்ள அறிக்கையில்,

“ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் பற்றி உண்மைக்குப் புறம்பான புள்ளிவிவரங்களைச் சொல்கிறார்” என்று எங்கள் கழகத் தலைவர் பற்றி விமர்சனம் செய்து, தனது துறையில் அரங்கேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் 2,264.74 கோடி ரூபாய் திட்ட ஊழலை மறைக்க உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி படாத பாடு பட்டிருப்பதை அவரது 10 பக்க அறிக்கையில் காண முடிகிறது.

எங்கள் கழகத் தலைவர் எழுப்பிய எந்தப் புள்ளிவிவரத்தையும் அவரால் அந்த அறிக்கையில் மறைக்க முடியவில்லை. “பதில்” என்ற பெயரில் ஏதோ உளுத்துப்போன வாதங்களையும், பொய்யாகி, பொது வெளியில் தோற்கடிக்கப்பட்ட “பழங்கதைகளையும்” எடுத்து வைத்து, தன்னை ஊழலில் இருந்து தற்காத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ் 10.6.2020 அன்று வெளியிட்டிருக்கும் செயல்முறை ஆணையில் 2,264.74 கோடி ரூபாய்தான் “வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும்” பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரின் அறிக்கையில் 2,374.74 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரி ஆணை பிறப்பித்து 30 நாட்களுக்குள் திடீரென்று 110 கோடி ரூபாய் எப்படி உயர்ந்தது?

எங்கள் கழகத் தலைவர், “குடிநீர்க் குழாய் வழங்கும் பணிகள் ஊராட்சி மன்றத்தின் பொறுப்பாக இருக்கின்றபோது அதற்கான நிதியை ஏன் ஊராட்சி மன்றத்திடம் கொடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் “10 லட்சத்திற்கு மேலான நிதி செலவில் உருவாகும் திட்டங்களை மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையின் மூலமே வழங்க வேண்டும். அதனால்தான் மாவட்ட அளவில் டெண்டர் கோருகிறோம்” என மூக்கைச் சுற்றி பதில் சொல்லியிருக்கிறார். “ஊராட்சி மன்றத்திடம் நிதியைக் கொடுங்கள்” என்று எங்கள் தலைவர் கேட்டதற்கும் மின்னணு ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம்? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் ஏன் ஒரு “பதிலறிக்கை”?

மின்னணு ஒப்பந்தம் என்றால் “ஏற்கனவே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் எடுத்து வேலை செய்தவர்கள்தான் இதில் ஒப்பந்ததாரர்கள் ஆக முடியும். அதனால்தான் மாவட்ட அளவில் டெண்டர் விடுகிறோம்” என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் தெரிவிப்பதன் மர்மம் என்ன?

ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தில் நடைபெறவிருக்கும் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி வாரியாக மின்னணு டெண்டர் விட்டு, ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் கடந்த காலங்களில் கான்டிராக்ட் எடுத்த எந்த ஒப்பந்ததாரர் வேண்டுமானாலும் டெண்டர் போடலாம் என்று வெளிப்படையாக அமைச்சர் அறிவிக்கத் தயாரா?

“வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டப் பணி ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கையெழுத்துப் போட வேண்டும்” என்று அமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். மாவட்ட அளவில் வெளியிடப்படும் டெண்டருக்கான ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கையெழுத்திட வேண்டும். ஆனால் நிதியை மட்டும் ஊராட்சி மன்றத்திற்குக் கொடுக்கமாட்டேன் என்பது என்ன வகை அராஜகம்?

ஊராட்சி மன்றத் தலைவர்களை நம்பவில்லை என்றால், இந்த டெண்டர் ஒப்பந்தங்களில் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் கையெழுத்திட வேண்டும் என்று கூறிட அமைச்சருக்குத் துணிச்சல் இருக்கிறதா?

அமைச்சர் தனது அறிக்கையில் இன்னொரு விளக்கமாக, “ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சித்துறைப் பொறுப்பு அதிகாரி, ஒப்பந்ததாரர் ஆகிய மூவரும் பார்வையிட்ட பிறகே பணிக்கான நிதி விடுவிக்கப்படும்” என்கிறார். “நிதியையே ஊராட்சி மன்றத்திற்கு நேரடியாக ஒதுக்க மாட்டேன்” என்கிற உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏன் ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு கையெழுத்துப் போட வேண்டும் என்கிறார்?

அதற்குப் பதில் மாவட்ட ஆட்சித் தலைவரே பணிகளைப் பார்வையிட்டு, அவரே கையெழுத்திட்டு வேலைக்குரிய பணத்தைக் கொடுத்து விடலாம் என்று உத்தரவிடலாமே!

ஆகவே, “மாவட்ட அளவில் டெண்டர் விடப்படும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். ஊராட்சி மன்றத் தலைவர் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும்; பணியைப் பார்வையிட்டு கையெழுத்துப் போட வேண்டும்; ஆனால் நிதியை மட்டும் நேரடியாக ஊராட்சி மன்றத்திற்கு ஒதுக்கீடு செய்ய மாட்டோம்” என்று கூறுவதைத்தான் எங்கள் கழகத் தலைவர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரானது; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களை அவமதிக்கும் போக்கு மட்டுமல்ல; உள்ளாட்சி மன்றங்களின் நிதி ஆதாரத்தையும் அபகரிக்கும் போக்கு மாவட்ட அளவில் ஒரே இடத்தில் “கமிஷன்” அடிக்கும் ஊழல் தந்திரம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்கு முறையான பதிலை அளிக்க முடியாத உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, “கமிஷன்” ஒன்றையே மனதில் வைத்து தனது “கரப்ஷனை” மறைத்திருப்பது பதிலறிக்கை அல்ல; பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை!

ஆகவே, ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிக்கு அந்தந்த ஊராட்சி மன்றத்திற்கு நிதியினை வழங்கிட வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவர் கூறியதை நிறைவேற்றவில்லை என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடும் என்பதில் சந்தேகம் இல்லை. “ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணி செய்தவர்தான் இந்த டெண்டரில் பங்கேற்க முடியும்” என்று “சப்பை”க் காரணம் கூறி, அ.தி.மு.க ஆட்சியில் “முறைகேடுகளின்” மொத்த உருவமாக மாறிவிட்ட மின்னணு டெண்டரை காரணம் காட்டி மாவட்ட அளவில் விடுவதைக் கைவிட வேண்டும். ஏறக்குறைய 10 வருடமாக தமிழகத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளும் வகையில் கொள்ளையோ, கொள்ளையென்று அடித்துக் கொண்டிருக்கின்ற ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.

ஊழலுக்காகவே பெங்களூரு நீதிமன்றத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்ட ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. நாடே கேவலமாகப் பார்த்த கூவத்தூர் “கொண்டாட்டம்” மூலம் நடைபெறும் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.

இந்த ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும்- குறிப்பாக “கமிஷன்” என்ற “கரன்சி மழையில்” குளிர் ஜூரம் வரும் அளவிற்கு நனைந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கும் நேர்மையுடன்- நிர்வாகத் திறமையுடன் நல்லாட்சி நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தோ, வெளிப்படையான நிர்வாகத்தை அளித்து “உள்ளாட்சியில் நல்லாட்சி கண்ட எங்கள் கழகத் தலைவர்” குறித்தோ விமர்சிக்க எவ்வித தார்மீக உரிமையும் அருகதையும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “தவிக்கும் வாய்க்கு தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கொள்ளையடிக்கத் துடிப்பதா?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!