DMK
“சொந்த தொகுதி மக்களையே காப்பாற்ற தவறிய ஜெயகுமாரின் போலிச் சிரிப்பை மக்கள் அறிவார்கள்”- தி.மு.க MLA சாடல்!
“சொந்தத் தொகுதி மக்களையே காப்பாற்றத் தவறிய அமைச்சர் ஜெயகுமாரின் போலிச் சிரிப்பையும், பொய்யான வேடத்தையும் மக்கள் புரிந்து புறக்கணிப்பார்கள்” என சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் மாதவரம் எம்.எல்.ஏவுமான சுதர்சனம் அறிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பமான நாள் முதல் இன்று வரை, தி.மு.க தலைவர் அவர்கள் தமிழக அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை மக்களின் நலன் கருதி தொடர்ந்து அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி எங்களையும் ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தி வருகிறார்.
மேலும், ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையிலும், அவர்கள் பசியைப் போக்கும் வகையிலும் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அந்தத் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏழை -எளிய மக்களின் பசியைப் போக்கிடவும், அவர்களது அடிப்படைத் தேவைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் எடுத்து வந்தார்.
கழகத் தலைவரின் அறிவுரைக்கேற்ப ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் இன்றுவரை மாதவரம் சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுடன் சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு மக்கள் நலப் பணிகளை எங்கள் கழகத் தோழர்களும் நாங்களும் தொடர்ந்து செய்து வருகிறோம் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
குறிப்பாக மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து மாநகராட்சி வார்டுகளிலும் மற்றும் ஊராட்சிகளிலும், சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஏழை எளிய மக்களுக்குத் தேவையான நோய்த்தடுப்பு உபகரணங்களான கிருமிநாசினி, முகக்கவசம், சோப்பு மற்றும் அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினோம். மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்குவதற்கான 60 நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதேபோல் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் எங்கள் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாதவரம் திருவெற்றியூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் சுமார் 11,000 குடும்பத்திற்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளைச் செய்துள்ளோம்.
அதுமட்டுமின்றி, கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாதவரம் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரில் வந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் இன்று வரை மக்களுக்கு உதவி செய்யும் எங்கள் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
அதேபோல் இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி ‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மூலம் 4,000 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும், கழக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களின் முயற்சியால் சுமார் 2,000 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன. அத்துடன் கழக நிர்வாகிகள் மூலம் ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் இன்று வரை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பூர் ஆர்.கே. நகர் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாங்கள் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். மக்களுக்கான இந்த உதவிகள் அனைத்தும் எங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வழங்கப்பட்டவை ஆகும்.
ஆனால் தொடர்ந்து அமைச்சராக பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமைச்சர் ஜெயக்குமார், தனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை நிரூபிக்க முடியுமா ?
‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல்’ அரசாங்கப் பணத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் நடத்திவிட்டு, ஏதோ தன் சொந்தப் பணத்தில் கொடுப்பதுபோல் நாடகம் ஆடுவதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
மாதவரம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, பொது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் நிவாரணம் வழங்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்ந்து நான் பங்கேற்று வருவது, பொது மக்களுக்கு மட்டுமல்ல, ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் .
தி.மு.கழகத்தின் மக்கள் பணியினையும், மக்களுடன் எங்களுக்கு உள்ள தொடர்புகளையும் கண்டு பொறுக்க முடியாத அமைச்சர் ஜெயக்குமார், தினமும் வாய்க்கு வந்தபடி பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் .
கொரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளில் மாதவரம் மற்றும் ராயபுரம் மண்டலத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெயக்குமார் இதுவரை எத்தனை முறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார் என்பதை விளக்க முடியுமா?
மக்களைக் காக்கும் தடுப்பு நடவடிக்கைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், தனது சுய விளம்பரத்திற்காகப் பெயரளவிற்கு ஒரிரு கூட்டத்தை மட்டும் நடத்திவிட்டு வாய்கிழியப் பேசுவது எந்த வகையில் நியாயம்?
மாதவரம் மண்டலத்தில் இவர் பொறுப்பேற்பதற்கு முன்பு அதாவது ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை 73 நாட்களில் மாதவரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 431. இதில் இறந்தவர் எண்ணிக்கை 1 மட்டும்தான்.
ஆனால், எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் வாய்ச்சவடால் அமைச்சர் ஜெயக்குமார் மாதவரம் மண்டலத்தில் பொறுப்பேற்றதற்குப் பிறகு அதாவது ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூலை 8ஆம் தேதி வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,875 ஆக அதிகரித்து, மொத்தத்தில் 2,306 ஆக உயர்ந்தது.
இவர் பொறுப்பேற்ற இந்த 34 நாட்களில் மட்டுமே இறந்தவர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இப்படி மாதவரம் மண்டலத்தில் குறைவாக இருந்த நோய்த்தொற்றை அதிகமாக உயர்த்திக் காட்டிய பெருமை அமைச்சர் ஜெயக்குமாரையே சேரும்!
மாதவரம் பால்பண்ணையில் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டபோதும், ஒருவர் இறந்த போதும் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உடனடியாக நேரில் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் , தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். அதிகாரிகளைச் சந்தித்துக் கோரிக்கையும் வைத்தேன். அப்போதெல்லாம் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்காத அமைச்சர் ஜெயக்குமார், இப்பொழுது திடீரென முளைத்த காளான் போல் வந்து பத்திரிகைச் செய்திக்காக பார்வையிடுவது போல் நடிப்பதை மக்கள் நன்கு அறிவார்கள் .
இவரது கபட நாடகத்தை அறிந்த மாதவரம் மக்கள் இவரது பொய்யான, மக்களைத் திசை திருப்பும் போக்கினை நிச்சயம் நன்கு அறிவார்கள்.
தன்னைத் தேர்ந்தெடுத்த இராயபுரம் தொகுதி மக்களை மறந்து, தொகுதியை விட்டு வெளியே சாந்தோமில் சொகுசு வாழ்க்கை வாழும் அமைச்சர் ஜெயகுமாருக்கு மாதவரம் சட்டமன்றத் தொகுதியிலேயே வசித்தும், மாதவரம் சட்டன்றத் தொகுதி மக்களில் ஒருவனாக தினந்தோறும் அவர்களோடு கலந்து பழகிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி அவதூறாக பேச எந்தத் தகுதியும் கிடையாது.
கொரோனா பிடியில் சிக்கி மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், தான் வகிக்கக்கூடிய பொறுப்புக்குரிய பணியினைச் செய்யாமல் , தன்னைத் தேர்ந்தெடுத்த இராயபுரம் தொகுதி மக்களைக் காப்பாற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் , தன்னை ஏதோ பெரிய அதிமேதாவி போல் நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். தன்னை 5 முறை தேர்ந்தெடுத்த இராயபுரம் தொகுதி மக்களுக்கு செய்த நற்செயல் என்ன தெரியுமா?
அமைச்சர் ஜெயக்குமார் தனது இராயபுரம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய இராயபுரம் மண்டலத்தில் (ஐந்தாவது மண்டலத்தில்) சிறப்புப் பார்வையாளராக பொறுப்பேற்று ஜூன் 5ஆம் தேதிக்கு முன்பு அதாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை இராயபுரம் மண்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3,224 - ஐ தொட்டிருந்தது. மேலும் இறப்பு 31 ஆக இருந்தது.
அமைச்சர் பொறுப்பேற்றதற்கு பிறகு ஜூன் 5ம் தேதி முதல் ஜுலை 9-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்குள் 6,018 நபர்கள் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 9,200 ஐ தாண்டியுள்ளது, இறந்தவர்கள் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. அதாவது இவர் இராயபுரம் மண்டலத்திற்கு பொறுப்பிற்கு வந்ததற்குப் பிறகு 34 நாட்களில் (ஜுன் 5 ந்தேதி முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை ) 6,018 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 135 நபர்கள் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களை விடவும், ஏன், இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களை விடவும் இராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமானதாகும்.
தொகுதியின் அமைச்சராகவும் தற்போது இராயபுரம் மண்டல கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு சிறப்புப் பார்வையாளராகவும் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் நோய்த் தொற்றைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்காமல், இந்திய அளவில் மோசமான நோய்த் தொற்றுக்கு ஆளான பகுதி என்ற பெயரை இராயபுரத்திற்கு வாங்கிக் கொடுத்த பெருமை அமைச்சர் ஜெயக்குமாரையே சேரும்.
அவர் சிறப்புப் பார்வையாளராகப் பொறுப்பேற்றது முதல் இராயபுரம் மண்டலத்தில் ஓரிரு முறை மட்டும் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அத்தோடு தன் பணி முடிந்தது என்று சென்றவர்தான், இது வரை தொகுதி பக்கமோ, இராயபுரம் மண்டலம் உள்ள அலுவலகம் பக்கமோ இதுவரை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
ஆனால் நோய்த்தடுப்பு பணிகளான, தொற்று கண்டறியப்பட்டவர்களின் வீடுகள்,மற்றும் அந்த பகுதிகளில் தடுப்பு அமைக்கும் பணி, தூய்மைப் பணியாளர்கள் சுகாதார ஊழியர்கள் மற்றும் நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல், தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் கிருமி நாசினி தெளிக்க வாகனங்கள் அமர்த்துதல் என அனைத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஆளும் அ.தி.மு.க அரசும், அமைச்சர் ஜெயக்குமாரும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்
அதுமட்டுமின்றி, இவரது தொகுதியிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு போதிய சிகிச்சை இல்லாமலும் சரியான உணவு கிடைக்காமலும் இறந்தவர்கள் சடலங்களுக்கு நடுவே கொரோனா நோய்க்கு பயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலை மிகவும் வேதனைக்குரியது.
இதையெல்லாம் கவனிக்க நேரமில்லாத, அமைச்சரும் இராயபுரம் மற்றும் மாதவரம் மண்டலங்களின் சிறப்புப் பார்வையாளருமான அமைச்சர் ஜெயக்குமார் ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்ற சொல்லுக்கேற்ப, விவரம் இல்லாமல் தொடர்ந்து பேசி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மைக் கிடைத்தால் போதும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணத்தை அமைச்சர் ஜெயக்குமார் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இனியாவது பொய்களைப் பேசி மக்களை ஏமாற்றாமல், வீட்டில் இருந்து ஓய்வு எடுக்காமல், அதிகாரிகளை முடுக்கிவிட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இராயபுரம் தொகுதி மற்றும் இராயபுரம் மண்டலத்திலுள்ள மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்.
அதைவிடுத்து ஊருக்கு உபதேசம் செய்வது என்ற பெயரில் பொய்யை மட்டும் பேசி மக்களைத் திசை திருப்ப முயற்சிப்பதும், போலிச் சிரிப்பு சிரித்து மக்களை ஏமாற்றி மீண்டும் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்புடன் செயல்படுவதுமாக இருந்தால், உங்களை இராயபுரம் தொகுதி மக்கள் வரும் தேர்தலில் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.
உங்களின் போலி சிரிப்பில் உள்ள விஷத்தன்மையை மக்கள் நிச்சயம் உணர்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!