DMK

"மருத்துவக் கல்லூரி அமைய போராடியவருக்கே அழைப்பில்லை” : கள்ளக்குறிச்சி எம்.பி-யை அவமதித்த அ.தி.மு.க அரசு!

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நேற்று கானொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திப் பேசிவந்த கள்ளக்குறிச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணியை கூட இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்காமல் அவமதித்துள்ளது அ.தி.மு.க அரசு.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் தமிழக அரசிற்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "நேற்று (4.7.2020) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வழியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்ததாக செய்திகள் வழியாக அறியக் கிடைத்தது. சென்னை தலைமைச் செயலக நிகழ்ச்சியில் முதல்வர், சட்டத்துறை அமைச்சர், மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் கள்ளக்குறிச்சி நகரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மருத்துவக் கல்லூரி வேண்டும் என பல முறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த எனக்கு இது குறித்த எந்தத் தகவலோ, அழைப்போ அனுப்பப்படவில்லை.

மேலும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவலோ , அழைப்போ அனுப்பப்படவில்லை. இந்த அப்பட்டமான நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பு அவமதிப்பு கடுமையான கண்டனத்திற்குரியது. அரசு விதிகள் மற்றும் முறைமைகளின்படி (PROTOCOL) நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட வேண்டுமென்பது கட்டாயம். ஆனால் இந்த அ.தி.மு.க அரசு, எந்த விதிகளையும், மரபுகளையும் பின்பற்றுவதில்லை என்பது இப்போதைய விதியாகவே மாறிவிட்டது என்பதுதான் அவமானம்.

மருத்துவக் கல்லூரிக்காக நாடாளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ந்தேதி நடைபெற்ற குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி கள்ளக்குறிச்சியில் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்திப் பேசினேன். எனது தொடர் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு , மருத்துவக் கல்லூரிக்கான அரசாணை வெளியானதும், அது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு ஹர்ஷவர்தன் அவர்களே, அந்தத் தகவலை 23.1.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாக எனக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

அதன் பின்னர் பிப்ரவரி 12ந் தேதி அன்று மாண்புமிகு ஹர்ஷவர்தன் அவர்களை நேரில் சந்தித்து நன்றிக் கடிதத்தையும், இந்த ஆண்டே மருத்துவக் கல்லூரிப் பணிகள் துவங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி கடிதத்தை கொடுத்தேன். மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாகவும் வெளியானது.

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி உருவாக இத்தனை முயற்சிகள் எடுத்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு குறைந்தபட்ச தகவல் கூட இல்லாமல், நேற்றைய அடிக்கல் நாட்டு விழா நடந்தது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள மாண்பை அவமதிப்பது, அவர்களுக்கான உரிமைகளை மீறும் செயலாகும். நாடாளுமன்ற உறுப்பினர் தனிமனிதரோ அல்லது கட்சி சார்ந்த மனிதரோ அல்ல, அவர் மக்களின் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை பிரநிதித்துவம் செய்பவர். எனவே எம்.பி-யை அழைக்காமல் நிகழ்ச்சியை நடத்துவது மக்களை அவமதிக்கும் நடவடிக்கையே. இந்திய அரசியலமைப்புச் சட்டவிதிகளை அறிந்தே மீறியது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே, மேற்படி செயலுக்கான தக்க விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கவேண்டும்.

மேலும் இதுதொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையையும் , அனுமதியையும் பெற்று மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கழகத் தலைவர் அவர்களின் அனுமதி பெற்ற பின் கள்ளக்குறிச்சியில், இந்த அவமதிப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதேபோல் தலைவரின் அனுமதியோடு நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்படும் என எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: கொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி வாலைச் சுருட்டிக் கொள்ளவும் -ராஜேந்திர பாலாஜிக்கு திமுக MLA பதிலடி