DMK
“மக்கள் பணியில் இன்னுயிர் ஈந்த மாவீரன் ஜெ.அன்பழகன்” - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (14.6.2020), மாலை 5 மணி அளவில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஜெ.அன்பழகன், அம்பலவாணன், பேராசிரியர் மகள் மணமல்லி, மின்வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-
மக்கள் பணியில் இன்னுயிர் ஈந்த மாவீரன். ஜெ.அன்பழகனின் தியாகத்தினைப் போற்றிடுவோம்.
சென்னை மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஜெ.அன்பழகன் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் தன் உடல் நிலையைவிட மக்களின் பசிப்பிணி நீக்குவதே முதன்மையானது என்கிற சீரிய பொதுநல சிந்தனையுடன், என்றென்றும் தலைமையின் வழிகாட்டுதலை சிறிதும் வழுவாமல் நிறைவேற்றுபவராகக் களப்பணியாற்றி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 10-6-2020 அன்று மறைவெய்தி, கழகத்தினர் அனைவரையும் கண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சென்னை மாவட்ட தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கி- மிசா சிறைவாச சித்திரவதைகளை நமது தலைவர் தளபதி அவர்களுடன் ஏற்றுக்கொண்டு கழகத்தைக் கட்டிக்காப்பதில் உறுதியாக விளங்கிய தனது தந்தை பழக்கடை ஜெயராமனின் அடியொற்றி, ஜெ.அன்பழகன் அவர்களும் இளம் வயது முதலே கழகப்பணியில் மிகுந்த ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தலைவர் கலைஞர் அவர்களைத் தனது தந்தையின் இடத்தில் வைத்துப் போற்றியவர். தியாகராயர் நகர் பகுதியிலும், ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டத்திலும், பிறகு சென்னை மேற்கு மாவட்டத்திலும் கழகத்திற்குச் சிறப்பாக வலுவூட்டியவர்.
தலைவர் தளபதி இளைஞரணிச் செயலாளராக இருந்த காலம்தொட்டே அவரது நம்பிக்கை மிகுந்த உடன்பிறப்பாக, கொள்கைத் தோழனாக, இயக்கத்தின் இலட்சிய சகோதரன் என்கிற உணர்வுடன் நெருங்கிப் பழகி, உரிமையுடன் கருத்துகளை எடுத்துரைக்கக்கூடியவர் ஜெ.அன்பழகன். 2001, 2011, 2016 என 3 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி உறுப்பினராக பேரவையில் மக்கள் நலன் குறித்து முழங்கியவர். தலைவர் கலைஞர் குறித்து ஆளுங்கட்சியினர் அவதூறாகப் பேச முனைந்த போதெல்லாம், நொடிகூட தாமதிக்காமல் எழுந்து நின்று, எரிமலையாய்க் குமுறி எதிர்ப்பினைப் பதிவு செய்தவர்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் உள்பட தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளை மிக பிரம்மாண்டமான முறையில், எழிலையும் எழுச்சியையும் கூட்டி, நடத்திக்காட்டி அனைத்து உடன்பிறப்புகளின் உள்ளங்களிலும் உயர்வான இடம் பெற்றவர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவினையும், அதனையொட்டி இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தினையும், அகில இந்தியத் தலைவர்கள் பலரும் வியந்து போற்றிடும் வண்ணம் நடத்திக் காட்டியவர்.
கழக ரத்தம் பாய்ந்த கட்டுடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற கடமை உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றம் கட்டுப்பாடு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் கனிவு கலந்த துணிவு, மனதில் பட்டதை ஒளிக்காமல் எடுத்துரைக்கும் மாண்பு என கண்ணியமும் உண்மையும் மிக்க உடன்பிறப்பாக கடைசிமூச்சுவரை கழகத்தை முன்னிறுத்திச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.
கழகத் தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் உடன்பிறப்பாக, மக்கள் நலனில் மாறாத அக்கறை கொண்டு செயலாற்றும் பொதுநலவாதியாக, தன் உயிரைவிட பட்டினிச்சாவினால் உயிரிழப்புகள் ஏற்படாதபடி காப்பதே முதன்மையானது என்கிற இலட்சிய உறுதியுடன் சளைக்காமல் களப்பணியாற்றி, கழகம் என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை, தன்னுடைய உயிரை ஈந்து தமிழ் மண்ணுக்கு நிரூபித்துள்ள தியாகச்சுடர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு இந்தக் கூட்டம் வீரவணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்திற்குக் கழகம் என்றும் துணை நிற்கும் என்ற உறுதியுடன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்கார இரத்தினசபாபதி மறைவு
முத்தமிழறிஞர் கலைஞர் - பேராசிரியர் பெருந்தகை ஆகியோர்தம் பேரன்பைப் பெற்றவரும், தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளருமான திரு சிங்கார ரத்தினசபாபதி அவர்கள் முதுமையில் உடல்நலக்குறைவால் மறைவெய்தியது கழகத்திற்கு பேரிழப்பாகும்.
தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் திறம்படப் பணியாற்றிய ரத்தினசபாபதி அவர்கள், மின்வாரிய ஊழியர்களின் நலன்களுக்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
கழக ஆட்சியில் மின் ஊழியர்களுக்கு, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு பெறுவதற்குக் காரணமாக இருந்தது, மத்திய- மாநில அரசு ஊழியர்களுக்கு இணையான 40 சதவீத ஊதிய உயர்வு இருமுறை கிடைத்திட துணை நின்றது, மின்வாரியத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கழக ஆட்சியில் நிரந்தரத் தொழிலாளர்களாக்கியது எனத் தன் வாழ்க்கையை மின் வாரிய ஊழியர்களுக்காக விருப்பமுடன் அர்ப்பணித்தவர் சிங்கார ரத்தினசபாபதி அவர்கள்.
அதிமுக ஆட்சியில் மின் ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தியவர் மட்டுமின்றி- 2.57 சதவீத ஊதிய உயர்வை போராடிப் பெற்றுக் கொடுத்தவர். மின்வாரிய ஊழியர்களுக்கான நலனில் காட்டிய அதே ஆர்வத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிப் பணிகளிலும் காட்டிய சிங்கார ரத்தினசபாபதி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் பாசத்தை நிரம்பப் பெற்றிருந்தவர். கழகத் தலைவர் தளபதி அவர்களிடம் மிகுந்த அன்பு பாராட்டியவர்.
மின்வாரிய ஊழியர்களுக்காகவும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்ட சிங்கார ரத்தினசபாபதி அவர்களின் நினைவையும், தொழிற்சங்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும் போற்றி, இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றுறுதியும் கொண்டவரான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் மறைவு
தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றுறுதியும் கொண்டவரான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவர். தமிழக சட்டமன்ற மேலவையில் ஆசிரியருக்கான தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய பெருமைக்குரியவர். ஆசிரியர்களின் உரிமைகளைக் காப்பதற்காகக் கணப்பொழுதும் களைத்திடாமல் தொடர்ந்து போராடிய களச் செயற்பாட்டாளர். அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஆட்சியாளர்களுக்கு எதிரான வலுவான வாய்மையான போராட்டக் களத்தை உருவாக்கியவர். மேடையில் சொற்பொழிவாற்றுவதிலும், ஏடுகளில் கவிதைகளைத் தீட்டுவதிலும், திராவிட இயக்கத்தின் தீந்தமிழ் அடையாளமாக விளங்கிய பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் மறைவுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அ.அம்பலவாணன் மறைவு
நாகை மாவட்டத்தில் கழகம் வளர்த்த முன்னோடிகளில் ஒருவரும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்பைப் பெற்றவரும் - ஒன்றுபட்ட நாகை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தவருமான நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அ.அம்பலவாணன் அவர்களின் மறைவுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இனமானப் பேராசிரியர் அவர்களின் மகள் மணமல்லி மறைவு
இனமானப் பேராசிரியர் அவர்களை இழந்த துயரமே இன்னமும் இதயத்தை விட்டு நீங்காத நிலையில், அவரது மனம் நிறைந்த அருமை மகள் மணமல்லி அவர்கள், உடல்நலக் குறைபாட்டால் இயற்கையெய்தியது பெரும் துயரம் அளிக்கிறது. கழக உணர்வும் கொள்கைப் பற்றும் கொண்ட குடும்பத்தின் வழித்தோன்றலான மணமல்லி அவர்களின் மறைவுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!