DMK

“மானமிகு சுயமரியாதைக்காரனின் நினைவிடத்தில் சுயமரியாதைத் திருமணம்” - நடத்தி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், கழகத் தொண்டர் அசோக் குமார் - மகாலட்சுமி இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து, மணமக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

சுயமரியாதை திருமணங்களுக்கு தி.மு.க ஆட்சியில்தான் முதன்முதலாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சுயமரியாதை திருமணங்களை பதிவு செய்யவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இத்திருமணங்கள் தி.மு.க-வினராலும், திராவிட இயக்கங்களாலும் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டன.

இன்று மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தொண்டர் ஒருவரின் திருமணத்தை நடத்தி வைத்து பரிசளித்து வாழ்த்தினார்.

இதுகுறித்து தி.மு.க விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு :

“இன்று (03-06-2020) தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை, கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டிகாலனியில் உள்ள அவரது இல்லங்கள் மற்றும் முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க தொண்டர் அசோக் குமார் - மகாலட்சுமி இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து, மணமக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "மூத்த தமிழினத்தின் முழு உருவமே! எங்களின் உயிரின் உயிரே!" - மு.க.ஸ்டாலின் உருக்கம்! #Kalaignar97