DMK
“கோவை மாநகராட்சி என்பது ஒன்றும் தனியார் நிறுவனம் அல்ல” : முறைகேடு குறித்து கார்த்திக் எம்.எல்.ஏ ஆவேசம்!
“தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இந்தக் காலத்திலும், மிகப்பெரிய அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக, ஒரு இணையதளத்தை கூட மேம்படுத்த முடியவில்லை என்று ஆணையாளர் அவர்கள் கூறுவது 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது' போல உள்ளது”
என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல் ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் (சென்னை மாநகராட்சி தவிர) Urban Tree Information System என்ற புதிய மென்பொருளுடன் மாநகராட்சிகளுடைய இணையதளங்களை இணைக்க தரவுகள் மாற்றும் பணிகள், சொத்துவரி மறுசீராய்வு தொடர்பான பணி, வார்டு மறுவரையறை பணிகள் ஆகியவற்றின் காரணமாக மாநகராட்சி இணையதளம் உபயோகிக்க இயலாத அளவிற்கு செயலிழப்பு ஏற்பட்டதால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் மேற்கண்ட பணிகள் முடிவடைந்து, தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும், இன்றைய தேதி வரை, அந்தந்த மாநகராட்சியின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாநகராட்சியின் இணையதளத்தில் மட்டும்தான் தீர்மானங்கள் பதிவேற்றப்படாமல் உள்நோக்கத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இந்தக் காலத்திலும், மிகப்பெரிய அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு ஒரு இணையதளத்தை கூட மேம்படுத்த முடியவில்லை என்று கூறுவது “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது” போல உள்ளது. அப்படியென்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக இணையதளத்தை மேம்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா? எதற்கும் கையாலாகாத, முடங்கிப்போன, நிர்வாகத் திறமையின்மையை கோவை மாநகராட்சியே ஒத்துக் கொள்கிறதா?
அமைச்சரின் ஆய்வு, ஆணையாளரின் ஆய்வு உள்ளிட்ட மாநகராட்சியின் அன்றாடப் பணிகளை உடனுக்குடன் பதிவேற்றி, விளம்பரப் படங்கள் போல வெளியிடும்போது மட்டும் மாநகராட்சியின் இணையதளம் செயலிழக்கவில்லையா?
தீர்மானங்களை பதிவேற்றம் செய்யும்போது மட்டும் இணையதளம் செயலிழந்து விடுமா? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் மக்களை ஏமாற்ற முடியும்? மேலும், ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் தனிப்பட்ட சொந்த விவரங்கள் என்பதால் அவைகளை வெளிநபர்களுக்கு வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவது; எந்த வேலை, எங்கு - எவ்வளவு தொகைக்கு செய்யப்பட்டுள்ளது போன்ற ஒப்பந்தப்பணிகள் பற்றிய விவரம்தான்.
நாங்கள் எந்த ஒப்பந்தப் பணிகள் பற்றிய விவரங்களையும் வெளிநபர்களுக்கு தர மாட்டோம்” என்று சொல்வதற்கு, கோவை மாநகராட்சி என்பது ஒன்றும் தனியார் நிறுவனம் அல்ல.
மேலும், தீர்மானங்கள் ஒப்பந்ததாரர்களின் சொந்த விவரங்களை உள்ளடக்கியதாக உள்ளதால், இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகளில் மட்டும் எப்படி ஒப்பந்தப்பணிகள் பதிவேற்றம் செய்யப்படுகிறது?
கோவை மாநகராட்சியில் மட்டும்தான், தீர்மானங்கள் ஒப்பந்ததாரர்களின் சொந்த விவரங்களை உள்ளடக்கியதாக உள்ளதா? கேட்பதற்கே சிறுபிள்ளைத் தனமாக உள்ளது
ஒப்பந்தப்பணிகளில் மக்கள் வரிப்பணம் சூறையாடப்படுவது தடுக்கப்படுவதுடன், அனைத்து அரசு ஒப்பந்தப் பணிகளிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். அரசின் ஒப்பந்தப் பணிகள் பற்றிய விவரங்களை மக்கள் சபையில் வைப்பதுதான் மரபு. இதில் பணிகளைப் பற்றி மட்டும் பேசாமல் , ஒப்பந்ததாரர்களின் விவரங்கள், தனிப்பட்ட சொந்த விவரங்கள் என்று பேசுவது எதனால்?
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவகத்தில், மாண்புமிகு முனைவர் சோ. அய்யர், இ.ஆ.ப ( ஓ ) அவர்கள் முன்னிலையில் ( முறையீட்டு மனு எண் – 073 / நாள் 20.08.2018 ) நடைபெற்ற விசாரணையில் அளிக்கப்பட தீர்ப்பின், நான்காம் பத்தியில் “உதவிக்கணினி அமைப்பாளர் இணையதளத்தை அப்டேட் செய்வதற்கும் தீர்மானங்களை பதிவேற்றம் செய்வதற்கும் சம்பந்தமில்லை என நாளிதழ்களுக்கு தெரிவித்ததையும் விசாரணையின் போது குறிப்பிட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆணையாளர் அவர்கள் மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும், இதே கருத்தை தற்போதும் கூறியுள்ளார். யாருடைய அழுத்தத்தில் இவ்வாறு கூறுகிறார்?
மாநகராட்சி செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. அரசு சுற்றறிக்கை, வரி விதிப்பு, குடிநீர் 'டிபாசிட்' உயர்த்துதல், மத்திய - மாநில அரசுகளால் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது; எவ்வளவு செலவு செய்யப்பட்டது; ஒப்பந்ததாரர் யார் என்ற விவரம் மறைக்கப்படுவதால், மாநகராட்சி நிர்வாகம் மீது சந்தேகம் எழுகிறது.
ஆகவே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, இனியும் காலந்தாழ்த்தாமல் , வெளிப்படைத் தன்மையுடன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை ,3 ஆண்டுகளாக பல்வேறு ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக, மாநகராட்சி தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் கோவை மாநகராட்சியின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !