DMK
“மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து நாளை கருப்புச் சின்னம் அணிவோம்” : தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறைகூவல்!
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. சென்னையைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்க உள்ளன. ஆனால் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறக்கக் கூடாது என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
தமிழக அரசின் முடிவை கண்டித்து அனைத்து தரப்பினரும் கருப்பு சின்னம் அணியுமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மக்களிடையே ஏற்படுத்திவரும் பாதிப்பு, இழப்பு அச்சம் தருவதாக உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதே கதியில் தொடருமானால், அது எங்கே போய் முடியுமோ என்று எண்ணிப்பார்க்கவே இதயம் படபடக்கிறது.
ஆனால் மாநில அரசின் அணுகுமுறைகளையும், முடிவுகளையும் - நடவடிக்கைகளையும் பார்த்தால் கொரோனா குறித்து முழுமையான பார்வையும், ஏழை - எளிய நடுத்தர மக்களின் எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பும் போதிய அளவில் இல்லை என்று தோன்றுகிறது.
கொரோனா கடுமையாகப் பரவிவரும் நிலையில், ஏதேதோ புள்ளிவிவரங்களைச் சொல்லி, சமாதானப்படுத்தும் முயற்சி தெரிகிறதே தவிர அடிப்படையான உண்மைகளை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு, அனைவரையும் உணரச் செய்து, ஒத்துழைப்பைக் கோரி உடன் அழைத்துச் செல்லும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
கொரோனாவை எதிர்கொள்ளத் தேவைப்படும் மருத்துவ கட்டமைப்பை உருவாக்கிடக் கிடைத்த வாய்ப்பினைக் கைநழுவ விட்டர்கள்; தொடக்கத்திலேயே, தலைநகரத்திலும் ஏனைய மாவட்டங்களிலும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் தீவிரமாகப் பாதிக்கப்படப்போகும் பகுதிகளை அடையாளப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் போதுமான கவனம் செலுத்தவில்லை.
இது மறைமுக எதிரியுடன் நடத்தப்படும் போர். கோர்க் காலத்தில் அடி முதல் நுனி வரை ஒருங்கிணைப்பும், கடமையும், பொறுப்பும் இவற்றைப் பரவலாக்குவதும் அவசியம்.
அ.தி.மு.க அரசிடம் அறிவியல்பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லை; அதிகாரத்தை மையப்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. போர்க்காலத்தில் அரசியலுக்கு இடமில்லை. ஆனால், அ.தி.மு.க அரசு அரசியல் கணக்குப் போட்டு, பல தரப்பிலிருந்தும், குறிப்பாக, எதிர்க்கட்சிகள் - ஊடகங்கள் - வல்லுநர்கள் மற்றும் சான்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலனை செய்யும் மனநிலையில் இல்லை.
தாமதமாகவேனும் உணரும் நிலைமை இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் காணப்படவில்லை என்பது வருந்துதற்குரியது. ஊரடங்கை அரசு படிப்படியாக ரத்து செய்து, அதன் வலிமையைக் குறைப்பது என்பது அப்பாவிப் பொதுமக்களை நாட்டாற்றில் கைவிடுவதற்கு ஒப்பாகும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அ.தி.மு.க அரசு அலட்சியம் காட்டுகிறது. எனவே, தமிழக மக்கள் அணியபோகும் கருப்பு சின்னம் அ.தி.மு.க அரசின் கண்களை திறக்கட்டும். டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதால் சமூக தொற்று மேலும் பரவலாகும். தடுப்பு பணியில் உள்ளோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததைக் கண்டிக்கிறோம்.
அலட்சியமும், ஆணவமும் கொண்ட தமிழக அரசுக்கு, கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் பெரும் பாதிப்பை உணந்த்திடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழக மக்கள் அணியப் போகும் கருப்புச் சின்னம், அ.தி.மு.க. அரசின் கண்களைத் திறக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்