DMK

“மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வாருங்கள்” - மு.க.ஸ்டாலின் கடிதம்! #CoronaLockdown

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (1-5-2020) மும்பை வாழ் தமிழர்கள் மற்றும் மும்பையில் பணிபுரியும் தமிழர்களிடம் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது, கொரோனா பேரிடர் காரணமாக அவர்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுடைய தேவைகள் குறித்து விசாரித்தறிந்ததோடு, இத்தகைய இக்கட்டான நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்குப் பக்கபலமாக விளங்கும் என்று உறுதியளித்தார்.

பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்று, அவர்களை தமிழகம் அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி, பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர். மிஸ்ரா இ.ஆ.ப., அவர்களுக்கு கடிதம் எழுதினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அக்கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

“அன்புடையீர், வணக்கம். மகாராஷ்டிராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் இன்று நான் நடத்திய காணொளிக் காட்சி ஆலோசனையில், அங்கு வாழும் நம் மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும், தமிழகம் திரும்ப விரும்புவதாகத் தெரிவித்தனர். ஆகவே, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்களை சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில், மகாராஷ்டிராவில் இருந்து அவர்களை தமிழகம் அழைத்துவந்து, தமிழகத்தில் அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் செய்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தி, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அ.தி.மு.க உறுப்பினர் அட்டையை கிழித்தெறிந்தேன்”- மு.க.ஸ்டாலினுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ பயனாளி எழுதிய கடிதம்!