DMK

“தற்புகழ்ச்சியை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்” - எஸ்.பி வேலுமணிக்கு திமுக எம்எல்ஏ பதிலடி!

"அமைச்சர் வேலுமணி தன்னைத் தானே புகழ்ந்து அறிக்கை விடுவதைத் தவிர்த்து களத்தில் இறங்கி பணியாளர்களின் தேவை குறித்து விசாரித்து அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், “கோவையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு, மருத்துவர்கள், காவல் துறையினர், வருவாய் துறையினர், சுகாதார துறையினர், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர், மனித இனத்திற்கு எதிரான இந்த கொரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு பகல் பாராமல் அயராது போராடிக் கொண்டிருக்கிறார்கள். தன்னலம் பாராமல் பிறர்க்காக போராடும் இவர்களின் சேவையால்தான் பொதுமக்கள் பயமின்றி உள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், N95 முகக்கவசம் மற்றும் PPE என்று கூறப்படும் பாதுகாப்பு உடைகளை கட்டாயம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவையில் உள்ள நகர ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு போதுமான PPE எனப்படும் பாதுகாப்பு உடைகள் மற்றும் N95 முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனாவை விரட்டியடிக்கும் போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்கள் மருத்துவர்கள். அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் அது கொரோனா சிகிச்சையையும் பாதிக்கும். அவர்கள் ஆரோக்கியத்துடன் பணி செய்தால்தான் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்களுக்கு அரசு உறுதுணையாக இருந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து உதவ வேண்டும் என நான் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன்.

என்னுடைய அறிக்கையினை வெளியிட்ட சிம்ப்ளிசிட்டி இணையதளச் செய்தி நிறுவன நிர்வாகி ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியனை கைது செய்தது அமைச்சர் வேலுமணியின் கைப்பாவைகளாக மாறியுள்ள கோவை காவல்துறை.

அரசின் நிர்வாகத் தவறுகளை சுட்டிக்காட்டினால், ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகையாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்கிற "இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்" என்று சொல்லும்படியான கொடுங்கோல் ஆட்சி கோவையில் மட்டும் நடைபெறுகிறதா?

இந்த அநியாயத்தை - ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து மாண்புமிகு கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் வெளியிட்ட அறிவார்ந்த அறிக்கையை கண்டு ஆத்திரத்திலும் ஆற்றாமையிலும் பல பிதற்றல்களோடு, தன்னைத் தானே புகழ்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தன் முதுகை தானே சொறிந்துக் கொண்டுள்ளார் அமைச்சர் 'தொட்டால் சிணுங்கி' வேலுமணி.

அந்த அறிக்கையில் “இந்தக் காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறை மூலம் எவ்வளவு பணிகள் நடக்கின்றன, தேவைகள் என்ன போன்றவற்றை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறேன் என்றும், சென்னை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை எவ்வளவு தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்திருக்கிறேன் என்பதை மக்களும் அனைத்து ஊடகங்களும் அறிவார்கள்" என்றும் தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறார்.

ஆனால் உண்மை நிலை என்னவென்றால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒருமாத காலம் கடந்தப் பின்னரும், கோவையில் உள்ள பெரும்பாலான இடங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தேவையான முகக்கவசம், கையுறை உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு - பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாக பல பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இவர்களுக்கு போதுமான முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பெயரளவில் தான் மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. மற்றும் தன்னார்வலர்கள் தான் அவர்களுக்கு போதுமான உணவு, முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறார்கள்.

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் களப் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை, உணவு, குடிநீர் கூட கிடைப்பதில்லை என்று ஆங்காங்கே போராடும் அவலம் இருப்பது கூட தெரியாமலும், இந்த பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் சில இடங்களில் ஏற்பட்டிருப்பது கூட தெரியாமலும், “பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாகி விட்டது என்று நினைத்துக் கொள்வதைப் போல” ஏசி அறைக்குள் அமர்ந்து கொண்டு ஆய்வுக் கூட்டங்கள் மட்டும் நடத்தினால், களத்தில் பணியாற்றுபவர்கள் படும் சிரமம் குறித்து என்ன தெரியும்? களத்தில் இறங்கினால் தானே அவர்களது தேவைகள் பற்றி அறிந்து பூர்த்தி செய்ய முடியும்?

Also Read: #Corona : "செயல்படாத அ.தி.மு.க அரசு" : செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் கைது - போலிஸார் அராஜகம்!

அமைச்சர் மட்டும் விலை உயர்ந்த முகக்கவசம் அணிந்து கொள்கிறார். அவருடைய பாதுகாப்பை மட்டும் உறுதி செய்து கொண்ட அவர், ஏன் அந்த துறையை சார்ந்த தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை? வெறும் 3 மணி நேரம் மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய முகக்கவசங்களை அவர்களுக்கு கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு செல்கிறார்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் காலை 5.30 மணிக்கே பணிக்கு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு காலை 11.00 மணியானாலும் கூட மாநகராட்சியால் உணவு வழங்கப்படுவதில்லை. ஊரடங்கு உத்தரவினால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒவ்வொரு தினமும் தேவையான, பாதுகாப்பான உணவுக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

அவர்களுக்குக் கைக்கு தடவும் கிருமி நாசினி கொடுக்கப்பட்டதா? மாற்று உடைகளை கொடுத்துள்ளனரா? அவர்களுக்கோ, அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் முன்னால் நின்று தினமும் போட்டோ எடுத்துக்கொண்டால் மட்டும் போதுமா? கிருமி நாசினி தெளித்து, குப்பை அள்ளும், சாக்கடையை சுத்தம் செய்ய பணியாற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் துணை நிற்க வேண்டாமா?

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, களத்தில் நின்று இந்த கொரோனா எதிர்ப்புப் போரில் நேரடியாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களான மருத்துவர்கள் , காவல்துறையினர் , வருவாய் துறையினர், சுகாதாரத் துறையினர், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் எந்த அளவுக்கு பாதுகாப்போடு இருக்க வேண்டும்? அவர்களுக்கு எத்தனை முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது? அவர்கள் மருத்துவப் பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது?

இப்படி பொறுப்பான மக்கள் பிரதிநிதியாக நான் எழுப்பிய கேள்விகள் எல்லாம் விடையற்று நிற்கிறதே?

விடை கூற வேண்டிய அமைச்சரோ, நாகரிகமற்ற சொற்களைக் கொட்டி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை வெற்று விளம்பரம் என்று உண்மையான கள நிலவரம் புரியாமல் அரைவேக்காட்டுத் தனமாக கூறியுள்ளார். மாண்புமிகு கழகத் தலைவர் அன்புத் தளபதி அவர்கள் "ஒன்றிணைவோம் வா" என்ற 5 அம்ச முன் முயற்சிகள் மூலம் கழகத்தினரை ஒன்றிணைத்து, இந்தப் பேரிடர் காலத்தில், தமிழகம் முழுவதும் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான ஏழை – எளிய மக்கள் மற்றும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கடந்த 5 நாட்களாக, அரிசி, காய்கறி, உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்.

இந்தப் பேரிடர் காலத்தில், தமிழக மக்களுக்கு, களத்தில் உதவி செய்து கொண்டிருப்பவர்கள் யார்; எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்ணை மூடிக் கொண்டு நடிப்பவர்கள் யார்? என்பதை மக்களும் அனைத்து ஊடகங்களும் அறிவார்கள்.

ஆகவே, கோவையில் மனித இனத்திற்கு எதிரான இந்த கொரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு, பகல் பாராமல் அயராது போராடிக் கொண்டிருக்கின்ற மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களுக்கும், இதுபோன்று பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுவதை தடுத்து, இந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை , முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைவருக்கும் முறையாக வழங்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு அறிக்கை விடுவதைத் தவிர்த்து, களத்தில் இறங்கி பணியாளர்களின் தேவை குறித்து விசாரித்து அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அதிகார அத்துமீறல் வேண்டாம்; ஊடகத்தினரை சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!