DMK
“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகத்தானே பொருள்?” - தி.மு.க எம்.எல்.ஏ கிடுக்கிபிடி கேள்வி!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மக்களுக்காக சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் பேசிவருகின்றனர்.
இந்நிலையில்,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி கொறடா சக்கரபாணி உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.
அப்போது சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பேசுகையில், “சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் 2010ம் ஆண்டு தி.மு.க மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் அந்த பணிகள் அப்படியே முடங்கி கிடக்கிறது. 2020ம் ஆண்டு வந்துவிட்டது. ஆனால் இன்னும் அப்பணிகள் தொடங்காமல் இருக்கிறது.
அதேபோல கோவை தொழில் நகரம் என்பதால் தி.மு.க ஆட்சி காலத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது அந்தப் பணிகள் நடைபெறாமல் உள்ளது.
2010ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 43 உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அப்போது குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாரிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அரசு தெரிவித்திருந்தது. இருந்தபோதும் பலர் பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதால் அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
அதேபோல், தூத்துக்குடி நகரத்திற்கு முதன்முதலில் குடிநீர் கொண்டு வந்த குருஸ்பெர்னான்டோ நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும். சிறப்பு மிகுந்த நகர திட்டங்கள் பல நகரங்களிலும் கொண்டுவருவதற்காக திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவை, மதுரையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக செய்தித்தாள்களில் வந்தாலும் நடைபாதை - பூங்கா அமைப்பது போன்ற பணிகள் முறையாகச் செயல்படுவதில்லை. இப்பணிகள் செய்யும்போது முறையாக வல்லுனர்களைக் கொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்தவேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தினோம். ஆனால் எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. சிறப்பு மிகுந்த நகர திட்டப்படி முறையாக செய்யவில்லை.
2018ம் ஆண்டு சொத்துவரி வீடுகளுக்கு 50 சதவீதமும், வாடகை கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வீடுகள் இல்லாத வணிக வளாகங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி உயர்த்தினார்கள். சொத்து வரி உயர்வை அறிவித்த போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, தி.மு.க சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம்.
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இருந்திருந்தால் சொத்து வரி உயர்வை அறிவித்தபோது அதைத் தடுத்திருக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தவுடன் அமைச்சரவையை கூட்டி தற்காலிகமாக சொத்து வரி உயர்வை நிறுத்துவதாக அறிவித்தீர்கள். உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே நீங்கள் சொத்து வரியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக இந்த சட்ட மன்றத்தில் பதிவு செய்கிறேன்.
தண்டராம்பட்டு உள்ளாட்சித் தேர்தல் மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 28 பேர் உறுப்பினர்களில் தி.மு.க உறுப்பினர்கள் 17 பேர். அ.தி.மு.க-வில் 11 பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மாவட்ட தேர்தல் அதிகாரி 3 முறையும் சட்ட ஒழுங்கு சீராக இல்லை என்கிறார்.
தண்டராம்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகத்தானே பொருள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !