DMK
“பேராசிரியரின் பெயரைச் சொன்னால் அப்பாவுக்கு கோபம் வரும்” - கலைஞரின் மகள் செல்வி பகிரும் நினைவலை!
தி.மு.க. பொதுச்செயலாளரும், இனமான பேராசிரியருமான க.அன்பழகன் மார்ச் 7-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பேராசிரியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதற்கிடையே பல்வேறு அரசியல் தலைவர்கள், பேராசிரியரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
தமிழன் புது வாழ்வு பெற வேண்டி ‘புது வாழ்வு’ என்ற பத்திரிகையை ஏற்று நடத்தியவர். தமிழர் இனம் பறை சாற்றும் படி, தமிழர்களின் சிறப்புக்கு முக்கியத்துவம் அளித்தவர். மேலும், பேராசிரியர் பல்வேறு நூல்களை இயற்றியிருந்தாலும், ‘தமிழர் திருமணமும், இனமானமும்’ என்ற பெயரில் அவர் எழுதிய நூல்தான் அவரை ‘இனமான பேராசிரியர்’ என அழைக்கக் காரணமாகவும் அமைந்தது.
ஏனெனில், சங்க காலத்து தமிழ் மரபினாலான திருமணங்களை ஒழித்து வைதீக கலப்பில் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட திருமண முறை எப்படி ஏற்பட்டது என்பது விரிவாக பேராசிரியரின் அந்நூலில் விளக்கப்பட்டிருக்கும். அதற்கு பிறகு சுயமரியாதை திருமணம் குறித்த நடைமுறைகள் வெகுவாக அறியப்பட்டன. ஆகவே அவரை இனமான பேராசிரியர் என இதுகாறும் அழைக்கப்படுகிறது.
பல பத்தாண்டுகளாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் உற்றத் தோழனாக இருந்தவர் பேராசிரியர் பெருந்தகை. தலைவர் கலைஞருக்கு பேராசிரியரின் பெயரை தவறுதலாகக் கூட எவரேனும் கூறிவிட்டால் கோபமடைந்து விடுவார் என முன்னொரு சமயத்தில் பகிர்ந்திருந்தார் கலைஞரின் மகள் செல்வி.
இது தொடர்பாக அவர் பேசிய போது, “இனமான பேராசிரியரை பேச்சுவாக்கில் கூட எவரேனும் தவறுதலாக அன்பழகன் என சொன்னால் அப்பாவுக்கு கோபம் வந்துவிடும். அய்யா, அண்ணா, நாவலர் அந்த வகையில் அவரை பேராசிரியர் என்றுதான் அழைக்க வேண்டும் என தலைவர் கலைஞர் கூறுவார்.
ஏனெனில், இந்த அய்யா, அண்ணா, நாவலர், பேராசிரியர் ஆகியவையெல்லாம் வெறும் அடைமொழிக்காகவோ, பட்டப்பெயர்களோ அல்ல. தமிழுக்காகவும், தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் எழுச்சிக்காகவும் அவர்கள் ஆற்றிய பணிகளுக்கும், இனமானம் காத்த சுயமரியாதைக்கான அடையாளங்கள் என போற்றியிருக்கிறார் தலைவர் கலைஞர்” என செல்வி குறிப்பிட்டிருந்தார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்