DMK

மிகஅதிக ஆண்டுகள் ஒரே சின்னத்தை தக்கவைத்திருக்கும் பேரியக்கம் தி.மு.க - ஒரே சின்னத்தில் வென்றவர் கலைஞர்!

1949ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் நாள், சென்னை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவால் தி.மு.க என்னும் இயக்கம் துவக்கப்பட்டது. 1957-ல் அண்ணா தலைமையில் தி.மு.க முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்தது.

அந்தத் தேர்தலில் தி.மு.க வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டது. இதில் அதிகமான இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது தி.மு.க. பேரறிஞர் அண்ணாவும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

இத்தேர்தலில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் வெற்றி பெற்று முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குச் சென்றார் கலைஞர். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தது தி.மு.க.

பின்னர், தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து, 1958 மார்ச் 2ம் தேதி தி.மு.க மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு ‘உதயசூரியன்’ தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.

அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க ’உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. பல சோதனைகளைக் கடந்து இன்றுவரை சுமார் 53 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தை தக்கவைத்திருக்கிறது தி.மு.க. இந்தியாவிலேயே ஒரே சின்னத்தை இத்தனை ஆண்டுகளாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஒரே கட்சி தி.மு.க தான்.

இந்தச் சாதனை குறித்து 2017-ஆம் ஆண்டு கலைஞரின் சட்டப்பேரவை பொன்விழா கொண்டாட்ட நிகழ்வின்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

அதில், “சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13 முறை போட்டியிட்டவர். 13 முறையும் வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாதவர். அத்தனை தேர்தல்களிலும் அண்ணா கண்ட ஒரே இயக்கம், அண்ணா தந்த ‘ஒரே சின்னம்’ என தி.மு.கழகத்தையும் உதயசூரியனையும் வரலாற்று அடையாளங்களாகக் கொண்டு களம் கண்டு வெற்றிகளைக் குவித்தவர். இந்தப் பெருமை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடையாது என்பது தனிச் சிறப்பு.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “லட்சியக் கனவுகளை மட்டுமே விரும்புகிறேன்” - மனம் திறந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! #ThrowBack