DMK
"அரியலூர் மாவட்டத்தை வேளாண் மண்டலத்தில் இணைக்க வேண்டும்” - தி.மு.க மாவட்ட செயலாளர் வலியுறுத்தல்!
அரியலூர் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார், அரியலூர் தி.மு.க மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.எஸ்.சிவசங்கர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் விவசாயத்தை நம்பி இருக்கும் மாவட்டம். மாவட்டத்தில், சிமென்ட் ஆலைகள் நிறைய இருந்தாலும், அதனால் மாவட்ட மக்களுக்கு எந்தவித பயனும் கிடையாது. விவசாயம் தான் இந்த மாவட்டத்தின் உயிர்நாடி.
அதில் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள திருமானூர், தா.பழூர் ஒன்றியங்கள் முழுதும் விவசாயத்தை நம்பி இருப்பவை. ஏற்கனவே இவை டெல்டா பகுதிகளாக அரசால் கருதப்பட்டு வந்தவை. அதற்கான பலனை விவசாயிகள் அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்தச் சட்டத்தின் பயன் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அது ஒரு புறம். இன்னொரு புறம், அரியலூர் மாவட்டத்தை இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைக்காதது மிகப் பெரும் தவறு ஆகும்.
அரியலூர் பகுதிகளில் 70 சதவிகித மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நதிநீர் மூலம் தா.பழூர், திருமானூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் 10,389 ஹெக்டேர் (25,671 ஏக்கர்) அளவுக்கு விவசாயம் நடைபெறுகிறது என்று அரியலூர் மாவட்ட அரசு இணையதளம் கூறுகிறது.
அதாவது கொள்ளிடம் கரையோரம் அமைந்துள்ள திருமானூர், தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கொள்ளிடம் நீராதாரத்தைக் கொண்டே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
புள்ளம்பாடி வாய்க்காலின் மூலம் திருமானூர் பகுதியிலுள்ள 6,000 ஹெக்டேர் நிலமும், நந்தியாறு மூலமாக 2,000 ஹெக்டேரும், பொன்னாறு மூலமாக 1,877 ஹெக்டேரும், வடவாறு மூலமாக 463 ஹெக்டேரும் பாசன வசதி பெறுகின்றன.
இந்தப் பகுதிகளில் நெல் பெருமளவில் விளைவிக்கப் படுகிறது. இப்போது இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காததால் பல பாதிப்புகள் வரும்.
ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டங்கள் அடிப்படையில், ஐந்து இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து பணிகளை துவங்கியுள்ளது. இந்த சட்ட மசோதாவில் அரியலூர் மாவட்டத்தை இணைக்காததால் அவர்கள் இனி முழுவீச்சில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள்.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவேகமாகக் குறையும். ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என்ற புகார் விவசாயிகளால் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்முறைக்கு வந்தால், அரியலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வை முழுவதுமாகச் சீரழித்துவிடும்.
அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்காததற்கு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ளன என்ற காரணத்தை கூறுகிறார்கள். சிமெண்ட் ஆலைகள் அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களிலேயே அமைந்துள்ளன. சுண்ணாம்புக்கல் சுரங்கங்களும் இந்த ஒன்றியங்களிலேயே அமைந்துள்ளன. எனவே இது ஒரு ஏமாற்றுக் காரணமே ஆகும்.
மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்திற்கு இணங்கி பல திட்டங்களை அமல்படுத்தும் அ.தி.மு.க அரசு என்ற பெயரை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த அறிவிப்பும் உள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு இல்லை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட மசோதாவை தாக்கல் செய்த உடனேயே இதன் பாதிப்பு அரியலூர் மாவட்டத்தில் தெரிய ஆரம்பித்துவிட்டது. விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகைக்கு வழங்கப்பட்டு வந்த நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காது என்றும், அடுத்தகட்டமாக அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் என்றும் செய்திகள் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடக்கரை ஓரம் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல மறைந்த முதல்வர் ஜெயலலிதா திட்டம் தீட்டியபோது, டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்தார். அதில் இணைப்பு பெற்றோரும் உண்டு, விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளும் ஏராளம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்த டெல்டா பகுதி, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் போனது வேதனை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, மறைந்த தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றபோது இந்தப் பகுதி விவசாயிகள் டெல்டா பகுதிக்கான பயன்களை பெற்று வந்தனர். அவை திடீரென இப்போது பாதிக்கப்படுவது விவசாயிகளுக்கு வேதனை தருவதாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைவாசலில் "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்" அறிவிப்பை வெளியிட்ட அன்று, அதனை நம்பி அ.தி.மு.கவினர் பச்சை துண்டை அணிந்துகொண்டு விவசாயிகளாக நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தி விட்டனர். இப்போது சட்ட மசோதாவில் அரியலூர் மாவட்டம் இடம்பெறாதது அ.தி.மு.கவினருக்கே வருத்தமாக உள்ளது. பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர் மாவட்டத்தை இணைக்க வலியுறுத்தி உரையாற்றியுள்ளார்.
எனவே உடனடியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள செம்பியக்குடி துவங்கி அணைக்கரை வரையிலான திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்" இணைக்க அரியலூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அரியலூர் மாவட்ட பொதுமக்கள் சார்பிலும் வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!