DMK
"சொன்ன பொய்யை விழுங்கவும் முடியாமல், நிரூபிக்கவும் முடியாமல் தவிக்கிறார் ராமதாஸ்” : டி.கே.எஸ்.இளங்கோவன்
“முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாகக் கூறிய பொய்க் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்த ராமதாஸ், பிரச்னையைத் திசை திருப்புவதை விடுத்து, புகார்களுக்கு ஆதாரங்களை அளிக்கவேண்டும், அல்லது பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்”என தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
“முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வெற்று சவடால்தானா” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவரய்யா டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது, பந்தயம் கட்டி படுதோல்வி அடைந்தவரின் பரிதாபத்தை பிரதிபலிக்கிறது.
பாட்டாளிகளுக்காக இயக்கம் என்று துவங்கி, வன்னியர் சங்க அறக்கட்டளையைத் தன் பெயருக்கே மாற்றிக் கொண்டதைப் போன்றது முரசொலி அலுவலக விவகாரம் என்று அய்யா “பகல் கனவு” கண்டுவிட்டார் என்று கருதுகிறேன். அதனால்தான் “பஞ்சமி நிலம்” என்று வீண் பழி சுமத்தி முரசொலியின் மூலப்பத்திரம் கேட்டவருக்கு, முரசொலி பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கு ஆதாரமாக அதற்குரிய பட்டாவை வெளியிட்டோம்; முணுமுணுப்பே இல்லாமல் சில வாரங்கள் அமைதி காத்தார். இப்போது “பழையபடி” வாடகைக் கட்டிடம் என்று ஒரு புதிய “பல்லவியை” தொடங்கி, தி.மு.க.வை வம்புக்கு இழுக்கிறார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மருத்துவர் ராமதாசால் நிரூபிக்க முடியவில்லை. அவரைத் தூண்டிவிட்ட பா.ஜ.கவாலும் நிரூபிக்க முடியவில்லை. தேசிய பட்டியலின-பழங்குடியின ஆணையம் சார்பில் நடைபெற்ற விசாரணைகளிலும் புகாரளித்தவர்கள் புறமுதுகிட்டு, “காலஅவகாசம்” கேட்டு கலைந்து சென்ற பிறகும் கூட, இத்தனை வருடங்களாக அரசியலில் இருக்கும் மருத்துவர் ராமதாஸ் தான் சொன்ன பொய்யை விழுங்கவும் முடியாமல், நிரூபிக்கவும் முடியாமல் தவிக்கிறார். மீண்டும் மீண்டும் ஏதாவது ஒருவகையில் தி.மு.க.வை சீண்டி, அ.தி.மு.கவின் ஊழல்களை திசைதிருப்ப இரவு பகலாக பணியாற்றுகிறாரோ என்று சந்தேகிக்கிறேன்.
பஞ்சமி நிலத்திற்கான ஆதாரத்தை மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருந்தால் அவரது நேர்மையைப் பாராட்டியிருக்கலாம். இல்லையென்றால் தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று மன்னிப்புக் கேட்டிருந்தால் பெருந்தன்மை என்று விட்டிருக்கலாம். ஆனால் இரண்டும் இல்லாமல், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டிய மருத்துவர் ராமாதாஸ் அவர்கள் இப்போதும் கூட தனது தவறை உணருவதாகத் தெரியவில்லை என்றால், யாருக்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்? தி.மு.கவை விமர்சித்தால் பா.ஜ.க மகிழ்ச்சியடையும். தன் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதுள்ள மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு விசாரணை தடைபடும்; மத்திய அமைச்சரவையில் தன் மகன் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்ற நப்பாசை காரணமோ என்ற சந்தேகமே எழுந்திருக்கிறது.
எங்கள் கழகத் தலைவரைப் பொறுத்தமட்டில் “பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க தயாரா” என்று மருத்துவர் ராமதாசுக்கு விட்ட சவால் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அவர் சார்பில் “தேசிய பட்டியலின- பழங்குடியின ஆணையம்”, “ நீதிமன்றம்” உள்பட எங்கெங்கு ஆதாரங்களைக் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் ஆதாரங்களை நாங்கள் கொடுத்து விட்டோம். இனி, தான் சுமத்திய பொய்க் குற்றச்சாட்டிற்குப் பொறுப்பேற்று நிரூபிக்க வேண்டியது மருத்துவர் ராமதாஸ் கையில் தான் இருக்கிறது. அதை தட்டிக் கழித்து விட்டு, மீண்டும் “வாடகை கட்டிடம்” என்று கூறி அவர் ஏன் தன்னைத்தானே திட்டமிட்டு தரம் தாழ்த்திக் கொள்கிறார்? என்பது அவருக்கு மட்டுமே புரிந்த புதிராக இருக்கிறது.
எழுப்பப்பட்ட பிரச்னை முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பது தானே தவிர, முரசொலி அலுவலகம் அங்கு வாடகைக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல. முரசொலி சார்பில் பட்டாவை வெளியிட்டது முரசொலி இயங்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்கவும், பொய்யையே தனது அரசியலுக்கு அஸ்திவாரமாக்கி, பொய்யிலே வாழ்ந்து வரும் மருத்துவர் ராமதாஸின் "பொய்" முகமூடியைக் கிழிப்பதற்காகவும் தான்.
பாவம்; தன் குற்றச்சாட்டு ஆதாரமற்று பல் இளிப்பதைக் கண்டு, ராமதாஸ் அந்தர்பல்டி அடித்துவிட்டு பிரச்னையைத் திசைதிருப்ப நினைக்கிறார். ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்தர்பல்டி; ஆகாச பல்டி எல்லாம் ராமதாஸ் அடித்துக் காட்டுவார் என்பதை நாடறியும். அதில் அவர் கில்லாடி என்பதற்கு, அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவர் அடித்துள்ள பல்டிகளையெல்லாம் பட்டியலிட ஏடு கொள்ளாது.
பத்தம்சத் திட்டத்தை ஏற்றதால் பா.ஜ.க-அ.தி.மு.கவோடு கூட்டணி என்று கூறியதும்; இப்போது 5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்த்துப் போராட்டம் என அறிவித்துவிட்டு, இதுகுறித்து இந்த ஆண்டு கூட அல்ல, "அடுத்த ஆண்டு பரிசீலிக்கலாம்" என மழுப்பி, அமைச்சர் கூறியதை ஏற்று, போராட்டத்தைக் கைவிட்ட சம்பவமும் சமீபத்திய ‘பல்டிகள்’.
முடிவாக இந்தச் சவடால் விடும் வேலைகளை தி.மு.கழகத்திடம் வைத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, “பஞ்சமி நிலம்” என்று சொன்ன குற்றச்சாட்டிற்கு முடிந்தால் ஆதாரத்தைக் கொடுங்கள். அப்படி முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு, சமூக நீதிக் குரலை தொடர்ந்து ஒலித்து வரும் முரசொலி நாளிதழ் பற்றி அபாண்டமாக பழி சுமத்தி விட்டோமே என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு பிராயச்சித்தம் தேடப் பாருங்கள்.
எதுவுமே இல்லாமல், “வாடகைக் கட்டிடம்” “அது இது” என்றெல்லாம் தொடர்ந்து தி.மு.கவை வம்புக்கு இழுப்பதால், “அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணிக்காக தைலாபுரத்தில் நடந்த ரகசியப் பேரம் மறந்து போகும்”, “அ.தி.மு.க ஊழல்களை திசை திருப்பலாம்” “மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு வாக்களித்து சிறுபான்மை மற்றும் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை எளிதில் மக்கள் மனதிலிருந்து அகற்றி விடலாம்” என்றெல்லாம் நினைத்தால்- தயவு செய்து அப்படிப்பட்ட ஒரு கனவைக் காண வேண்டாம் என்று இப்போதும் கூட மருத்துவர் ராமதாஸ் மீது தனிப்பட்ட முறையில் வைத்துள்ள மரியாதையின் காரணமாகக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.,
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!