DMK
"நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்துப் பேசவேண்டும்” - மு.க.ஸ்டாலின் பேட்டி!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டம் நிறைவுற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது, “தி.மு.க செயற்குழுவில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம். மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும். மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்ற அ.தி.மு.க அரசின் வஞ்சக நாடகத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம். இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி தீர்மானம்.
அ.தி.மு.க அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை, அக்கிரமங்களை மக்கள் மன்றத்தில் சுட்டிக்காட்டி அ.தி.மு.கவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்கவேண்டும் எனத் தீர்மானம் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், வரும் ஜனவரி 24ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கட்தொகை பதிவேடு ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் கே.சி.கருப்பணன் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என பிரதமருக்கு கடிதம் எழுதியதாக அவரே சொல்லியிருக்கிறார். ஆனால், மத்திய அரசின் புதிய அறிவிப்புக்குப் பிறகு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆக, ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் அ.தி.மு.க அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறதே தவிர, தைரியமாக எதிர்க்கும் வலிமை அவர்களுக்கு இல்லை” எனத் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தந்தை பெரியார் பற்றிப் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல அவர் ஒரு நடிகர். அவரிடம் நான் விரும்பிக் கேட்டுக்கொள்வது தமிழினத்துக்காகவே போராடி வாழ்ந்து மறைந்த தந்தை பெரியார் பற்றிப் பேசும் போது நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து பேச வேண்டும் என்பதைத்தான்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!