DMK
“உரிமைகள் நசுக்கப்படுவதை தொழிலாளர் வர்க்கம் ஏற்றுக்கொள்ளாது” : ஜனவரி 8 போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு!
கடந்த ஆறு வருடங்களாக நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வழங்க மறுத்து, தொழிலாளர்களை, மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதற்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 8 ம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவற்றை பறிப்பதிலேயே மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் அனைவரும் ஒருமுகமாக ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.
குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு, அளவு கடந்த எண்ணிக்கையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனங்கள், தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிப் பெற்ற 44 சட்டங்களை அடியோடு நீக்கி விட்டு வெறும் 4 சட்டங்களை- அதுவும் கார்ப்பரேட்டுகளின் நலன் கருதி கொண்டு வருவது, புதிய ஓய்வூதியத் திட்டம், 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு முத்தரப்பு சர்வதேச தொழிலாளர் மாநாட்டை நடத்தாதது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சி-87, சி-98 ஆகிய கன்வென்ஷன்களுக்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட தொழிலாளர் விரோத கொள்கைகள் உழைக்கும் வர்க்கத்தினர் மீது தொடுக்கப்பட்ட போராகவே பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்று வருவது மிகுந்த வேதனை தருகிறது.
மத்தியில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவது என்ற மரபு பா.ஜ.க. ஆட்சியில் பிசுபிசுக்க வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, முழுக்க முழுக்க தொழிலாளர் விரோத கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் மத்திய பா.ஜ.க. அரசு முனைப்புக் காட்டி வருவது மிகக் கொடுமையானது.
“ஆட்சிக்கு வந்தால் ஆண்டொன்றுக்கு 5 கோடி பேருக்கு வேலை தருவோம்” என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க. ஆட்சியில் அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தனியார் மயப்படுத்தப்பட்டு - தொழிலாளர்களின் எதிர்காலத்தின் மீது மிகப் பெரிய கேள்விக்குறி விழுந்திருக்கிறது.
ஆண்டொன்றுக்கு 2 கோடி பேர் வேலையிழந்து வரும் சூழலை வஞ்சகமாக திணித்துள்ள பா.ஜ.க. அரசு- தொழிலாளர்களின் வயிற்றில் ஈவு இரக்கமின்றி அடித்து வருவது கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் ஆபத்தாக மாறியிருக்கிறது. தொழிலாளர் சங்கங்களுக்குள் பகையை உருவாக்கி- பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய பா.ஜ.க. அரசு கடைப்பிடிப்பது கவலையளிக்கிறது.
பல முறை தொழிலாளர்கள் தரப்பில் முறையிட்டும், பல கட்டங்களில் முன் அறிவிப்பு போராட்டங்களை நடத்தியும், கடந்த ஆறு வருடங்களாக அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வழங்க மறுத்து- தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருவது கண்டனத்திற்குரியது. ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு மருந்துக்கும் இந்த அரசு மதிப்பளிப்பதில்லை என்பது தொழிலாளர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி, அவர்களுக்கான சலுகைகளைப் பறித்து- அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளி- முதலாளிகளின் அரசாக மட்டுமே திகழ வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு விரும்புவது மன்னிக்க முடியாத துரோகம்! இதை தொழிலாளர் வர்க்கம் என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
ஆகவே காலம் இப்போதும் கூடக் கடந்து போய் விடவில்லை. போராட்டம் அறிவித்துள்ள பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகளை, மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு சந்தோஷ்குமார் கங்குவார் உடனடியாக அழைத்துப் பேசி- தொழிலாளர்கள் முன்வைத்துள்ள 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி ஒரு சுமூகத் தீர்வுகாண பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!