DMK

’கவுரவம் பார்க்காமல் தவறுக்கு ராமதாஸ் மன்னிப்பு கேட்டால் முரசொலி வழக்கு வாபஸ்’ : ஆர்.எஸ் பாரதி

முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என பா.ம.க நிறுவனம் ராமதாசும், பா.ஜ.கவின் சீனிவாசனும் அவதூறாக செய்தி பரப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சம்மந்தமாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என அவதூறாக பேசியதற்கு எதிராக தி.மு.க.,வின் அமைப்புச் செயலாளர் என்ற முறையிலும், முரசொலியின் அறங்காவலர் என்ற முறையிலும் பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கும், பா.ஜ.கவின் சீனிவாசனுக்கும் நோட்டீஸ் அனுப்பினோம்.

அதற்கு இருவருமே பதிலளிக்காத காரணத்தினால், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். 83 ஆண்டுகளுக்கான விவரங்கள் மற்றும் மூலப்பத்திரங்கள் தொடர்பாக முரசொலி அறக்கட்டளை சார்பாக தாக்கல் செய்துள்ளோம். ஜனவரி 24ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களின் நகலை சம்மந்தப்பட்ட இரு குற்றவாளிகளுக்கும் நீதிமன்றத்தில் இருந்து அனுப்புவார்கள். அதற்குள் கவுரவம் பார்க்காமல், ஆணவமாக, திமிராக இருக்காமல் முரசொலி குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று வழக்கை வாபஸ் பெற்றுவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.