DMK

“ஒற்றுமைக் குரலால் வெற்றியை ஈட்டுவோம்” - மாபெரும் பேரணிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று (18-12-2019) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்” - திராவிடர் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு இஸ்லாமியர் - ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த பா.ஜ.க. - அ.தி.மு.க. அரசுகளை கண்டித்து, சென்னையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி” நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினையொட்டி, பொதுப் பிரச்சினைக்காக நடத்தப்படும் இந்தப் பேரணிக்கு அரசியல் கட்சிகள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தந்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், இப்பேரணியில் பங்கேற்க, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், திரைத்துறையைச் சார்ந்த சங்கங்கள், ஆசிரியர் அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கும் வண்ணம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதம் பின்வருமாறு :

“அன்புடையீர், வணக்கம்.

இந்திய நாடே பற்றி எரியக் காரணம் ஆகிவிட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த பிரச்னை குறித்து தங்களது கவனம் ஈர்க்கவே இக்கடிதம் எழுதுகிறேன். இந்திய அரசும் மக்களும் இதுகாலம் வரையில் காப்பாற்றிவந்த சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஒற்றுமை ஆகிய உன்னதத் தத்துவங்களுக்கு முரணான வகையில் மத்திய பா.ஜ.க அரசு இந்தக் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

அனைத்து மதத்தவரும் வரலாம் என்றால் ஏன் இஸ்லாமியர் புறக்கணிக்கப்படுகிறார்கள், அண்டை நாட்டவர் வரலாம் என்றால் அதில் ஈழத்தமிழர் புறக்கணிக்கப்பட்டது எதனால் என்ற கேள்வியை நாம் எழுப்பி வருகிறோம்.

மக்களை மதரீதியாக, இனப்பாகுபாட்டுடன் பார்க்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து இந்தியாவே போராடி வருகிறது. தமிழகமும் கனலாகிக் கொண்டு இருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 23.12.2019ம் நாள் சென்னையில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. குடிபறிக்கும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் நமது போராட்டம் தொடர வேண்டும்.

கட்சி எல்லைகளைக் கடந்து, மதம், சாதி, மாநிலப் பாகுபாடுகள் கடந்து இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இச்சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியும். எனவே, தாங்களும், தங்கள் அமைப்பும் இப்பேரணியிலும் அதைத் தொடர்ந்து நடக்க இருக்கும் போராட்டங்களிலும் பங்கெடுத்து தங்களது ஜனநாயக் குரலை எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறேன்.

ஒற்றைக் குரலில் ஒற்றுமை காட்டுவோம்.

ஒற்றுமைக் குரலால் வெற்றியை ஈட்டுவோம்.”

இவ்வாறு அந்த அழைப்புக் கடிதத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: #CAA : "அவர்கள் தமிழின துரோகிகள் என்றே அடையாளம் காணப்படுவார்கள்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!