DMK

'’மோடிக்கு பயந்து குடியுரிமை சட்டத்தை ஆதரித்துள்ளது அ.தி.மு.க கூட்டணி’ - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க இளைஞரணியினர் மாநிலம் முழுவதும் இன்று காலை போராட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

சட்ட நகலைக் கிழித்தெரிந்து போராட்டத்தில் ஈடுபட்ட, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை போலிஸார் கைது செய்து சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் சிறை வைத்தது காவல் துறை.

இந்நிலையில், மாலை 6 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், '’ இளைஞரணி செயலாளராக பதவியேற்ற பின் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டமே என் முதல் போராட்டமாக அமைந்திருக்கிறது.

சென்னை மட்டுமல்ல தி.மு.க இளைஞரணியினர், மாணவரணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 17ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திலும் தி.மு.க இளைஞரணி கலந்துகொள்ளும்.

அ.தி.மு.க-வினர் நினைத்திருந்தால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாமல் தடுத்திருக்கலாம். அடிமை அ.தி.மு.க-விற்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் நலன் கருதியாவது அ.தி.மு.க இச்சட்ட திருத்தத்தை ஆதரிக்காமல் தவிர்த்திருக்க வேண்டும். மோடிக்கு பயந்து தான் அ.தி.மு.க இவ்வாறு செய்திருக்கிறது. இனியாவது இதை திருத்திக் கொள்வார்கள் என்று நம்பிக்கையில் தான் போராட்டம் நடத்தியிருக்கிறோம்.

அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் பதவி வாங்க வேண்டும் என்பதால் தான் இந்த மசோதாவை பா.ம.க ஆதரித்துள்ளது. கூட்டணி தர்மத்துக்காக ஆதரித்ததாக மருத்துவர் ராமதாஸ் கூறுகிறார். அந்த கூட்டணி என்பது ஒரு கொள்கையில்லாத மட்டமான கூட்டணி.” என்றார்.

உள்ளாட்சி தேர்தலில் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று நம்புவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை தி.மு.க நிறுத்த முயற்சிப்பதாக தொடர்ந்து தவறாக பரப்பப்பட்டு வரும் தகவலை மறுத்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

“ உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தக் கோரி தி.மு.க வழக்கு தொடரவில்லை. முறையாக நடத்தக்கோரி தான் தி.மு.க நீதிமன்றம் சென்றது. தேர்தலைச் சந்திக்க தி.மு.க எப்போதும் தயாராக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரையில் அ.தி.மு.க-வும் தேர்தல் ஆணையமுமே ஒரே கூட்டணியாக உள்ளனர்” என தெரிவித்தார்.