DMK

''தவறு செய்த பா.ஜ.க-வினரை என்கவுண்டர் செய்வார்களா?” - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

தி.மு.க மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி, "பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வன்கொடுமைகள் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை தடுக்க சட்டம் மட்டும் போதாது. பெண்கள் மீதான சமூக பார்வையும் மாற வேண்டும்.

பெண்களுக்கான நிர்பயா நிதியான 160 கோடியை அ.தி.மு.க ஆட்சியில் பயன்படுத்தவில்லை. இது பெண்கள் மீது அதிமுக அரசு கொண்டுள்ள அக்கரையை எடுத்துகாட்டுகிறது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மனநிலையில் இருந்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பேச்சு ஒடுக்கப்பட்ட, நடுத்தர வர்க்க மக்கள் மீது அவர்களுக்கு உள்ள கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுகிது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆட்கள் மீதே என்கவுண்டர் நடைபெறுகிறது. பி.ஜே.பி-யில் இருந்து கொண்டு தவறு செய்பவர்கள் மீது, என்கவுண்டர் நடவடிக்கை எடுப்பார்களா?. பாலியல் குற்றம் செய்த குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு சட்டமாக இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்த தி.மு.க. நடவடிக்கை எடுக்கும்.

பொள்ளாச்சி விவகாரத்தில் இதுவரையிலும் அ.தி.மு.க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வரும்பொழுது பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்.” எனத் தெரிவித்தார்.