DMK

தி.மு.க தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் : மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏ-க்கள், எ.ம்.பி-க்களுக்கு அழைப்பு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சமீபத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது பற்றி ஆலோசிப்பதற்காக தி.மு.க மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றும் கூட்டத்தை நடத்த தி.மு.க முடிவு செய்துள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் டிசம்பர் 8ம் தேதி மாலை 5 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.

அதில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி” - மு.க.ஸ்டாலின் வரவேற்பு!