DMK
"தமிழ்நாட்டின் இருள் விலகும்; சூரிய ஒளி பரவும்!" - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!
தமிழ்நாட்டில் நல்லாட்சி என்பது தி.மு.கழகத்தினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுங்கள் எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
அந்த மடல் பின்வருமாறு :
''நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
ஆட்சியில் இருந்தால் மட்டும் போதும் என்ற நினைப்பில் இருக்கிறது ஆளுங்கட்சி. மக்கள் நலனுக்கான எந்தத் திட்டம் பற்றியும் சிந்திக்காமல், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவற்றாமல், மத்திய பா.ஜ.க. அரசின் கண்ணசைவில் மிச்சமிருக்கும் காலத்தைத் தள்ளி, அதுவரை கஜானாவிலிருந்து கல்லா கட்டலாம் என்பது மட்டுமே அ.தி.மு.க ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது.
குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் அகற்றம் போன்ற அத்தியாவசியப் பணிகளைச் செய்யவேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல், கடந்த மூன்றாண்டுகளைக் கடத்தியவர்கள்தான், சிரிப்பாய் சிரிக்கும் இந்த ஆட்சியாளர்கள். ஆனால், பழியையோ ஆட்சியில் இல்லாத தி.மு.க மீது போட்டார்கள். நியாயமாக இடவரையறையுடன் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் தி.மு.க.,வின் கோரிக்கை.
அதைச் செய்ய வக்கின்றி, தேர்தலைக் கண்டு தொடைநடுங்கி, தள்ளிப்போட்டுக் கொண்டே போனார்கள். இப்போதுகூட, மறைமுகத் தேர்தல் என்ற பெயரில் உள்ளாட்சித் தேர்தலை, சர்வாதிகார முறையிலே நடத்தப் பார்க்கிறார்களே தவிர, நியாயமாக - நேர்மையாக நடத்திட அ.தி.மு.க. அச்சப்படுகிறது.
அந்த அளவிற்குத் தோல்வி பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் முதல்வர்!
மறைமுகத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பினால், இது பற்றி மு.க.ஸ்டாலினே கேட்பது விந்தையாக இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார். தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையை சுட்டிக்காட்டுகிறார்.
தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பலவற்றை அம்மையார் ஜெயலலிதா மாற்றியதும்; ஜெயலலிதா அம்மையார் நடைமுறைப்படுத்திய சிலவற்றை தலைவர் கலைஞர் ஆட்சியில் மாற்றி அமைத்ததும் உண்டு! நிர்வாக வசதிக்காக அப்படி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் என அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தேர்தலைக் கொண்டு வருவது ஏன் என்பதுதான் கழகம் எழுப்புகிற கேள்வி.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம்தள்ளிவிடலாம் என்ற எண்ணத்தில் நேரடித் தேர்தல் முறையை அறிவித்துவிட்டு, உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் குட்டுகள் வாங்கியதும் இனி தேர்தலை தள்ளிப்போடும் சூழல் இருக்காது என நினைத்து, தேர்தலை எதிர்கொள்ளப் பயந்து, அதிகார அத்துமீறலுக்காக, தனது முடிவையே மாற்றிக்கொண்டு மறைமுகத் தேர்தல் என அவசர சட்டம் பிறப்பித்தாரா?
தேர்தல் என்றால் மக்களைச் சந்திக்க வேண்டும். அதை அப்படியே தவிர்த்துவிட்டு, அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அத்துமீறல் செய்யலாம் என்பதுதான் ஆளுந்தரப்பின் மனக்கணக்கு. அதனை மகத்தான மக்கள் சக்தியுடன் முறித்துப்போடும் ஆற்றல் தி.மு.கழகத்திற்கு உண்டு!
ஏனென்றால் நாம் எப்போதும் மக்கள் பக்கம் நிற்கிறோம். தூத்துக்குடியில் அப்பாவி மக்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியது அ.தி.மு.க அரசு. அந்த நேரத்தில் ஆறுதலும் நம்பிக்கையும் தெரிவிக்க நாம்தான் அவர்கள் பக்கம் நின்றோம். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சிதிலமடைந்தன.
ஆட்சியில் இருப்பவர்கள் ஆசுவாசமாக பல நாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் மேற்பார்வையிட்டார்கள். உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து, கழகத்தின் சார்பில் உடனடி நிவாரண உதவிகள் கிடைக்கச் செய்தவன் உங்களில் ஒருவனான நான்தான். என் அன்புக் கட்டளையை ஏற்று கழகத்தினர் பல பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்களை அனுப்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள்.
மக்களைச் சந்திக்கவே அஞ்சுகிறார்கள் ஆளுங்கட்சியினர்; நாம் மக்களுக்காக நாளும் உழைக்கிறோம் - வலிமையாகக் குரல் கொடுக்கிறோம் - தேவையான கோரிக்கை வைக்கிறோம் - தொடர்ந்து போராடுகிறோம்!
இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்ற இன்றைய நாளில் (நவம்பர் 21) இந்த நேரத்தில்கூட, கழகத்தின் சார்பில் இரண்டு முக்கியமான போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. தென்பெண்ணையாற்றில் நமக்குள்ள உரிமையைக் காப்பதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களின் சார்பில் தி.மு.கழகம் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் பங்கேற்புடன் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
தென்பெண்ணையாற்றின் நீர் ஆதாரத்தைப் பாழடிக்கும் வகையில், அதன் கிளை நதியான மார்கண்டேயா நதியில் கர்நாடக அரசு 50 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலத்தில் அணை கட்டுவதற்கு ஆயத்தமாகியிருக்கிறது.
அதற்கு மத்திய நீர்வளத்துறையும் அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு காட்டிய அலட்சியத்தின் காரணமாக, கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தி.மு.கழகத்தின் சார்பில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாதிக்கப்படும் ஐந்து மாவட்டத்திற்குட்பட்ட கழகத்தின் சார்பில் உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களின் தலைமையில், ஒருங்கிணைந்த மாவட்ட தலைநகரங்களில் கழக உடன்பிறப்புகளுடன் தோழமைக் கட்சியினரையும் விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் அதிகமான பொதுமக்களும் பங்கேற்று, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
அதுபோலவே, கரூர் நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, மாவட்ட கழகப் பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கழகத்தினருடன் 3000த்துக்கும் அதிகமான பொதுமக்களும் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.
தி.மு.கழகத்தின் சார்பில் நடந்த இந்த இரண்டு போராட்டங்களிலும் பேரார்வம் காட்டி, பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். ஏறத்தாழ 8 ஆண்டுகளாக நாம் ஆளுங்கட்சியாக இல்லை. ஆனால், மக்கள் நம்மை எதிர்க்கட்சியாக நினைக்கவில்லை.
அவர்களின் மனதை ஆளும் கட்சியாக, தங்களின் கோரிக்கைகளுக்காகத் தவறாமல் பாடுபடுகிற கட்சியாக, தங்கள் உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுக்கிற கட்சியாகப் பார்க்கிறார்கள். மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மனதில் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து நின்று உழைப்போம்; உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம்!
நவம்பர் 10ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பேசும்போது, மக்களை நாடி நாம் சென்றால், மக்கள் நம்முடன் வருவார்கள் என்பதை எடுத்துக் காட்டினேன். ‘நமக்கு நாமே’ பயணத்தில் அதனை நாம் நேரடியாகப் பார்த்தோம்.
இப்போதும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அதனால், கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக்கழக நிர்வாகிகள் அவரவர் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளை முன்னெடுங்கள்; அவர்களின் பக்கம் நின்று குரல் கொடுங்கள்!
பேரெழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திய வரலாறு தி.மு.கழகத்திற்கு உண்டு. அந்த உணர்வுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் களம் காணுங்கள். மக்களுடன் நாம், நம்முடன் மக்கள் என்பதற்கேற்ப, மக்களுக்காக எப்போதும் குரல் கொடுங்கள். மாற்றம் காண ஓயாது உழைத்திடுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை தில்லுமுல்லுகள் வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கும்.
ஆனால், தமிழ்நாட்டில் நல்லாட்சி என்பது தி.மு.கழகத்தினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுங்கள்; மக்களுடன் இணைந்து போராடுங்கள். தமிழ்நாட்டின் இருள் விலகும்; சூரிய ஒளி பரவும்!''
இவ்வாறு தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!