DMK
''தி.மு.க-வை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்'' - பொன். ராதாகிருஷ்ணன் மீது சீறிய ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,
அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர தி.மு.க.வை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சொந்தத் தொகுதியில் செல்வாக்கை இழந்து திண்ணையில் அமர்ந்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முரசொலி பத்திரிகை அலுவலகம் “பஞ்சமி” நிலத்தில் உள்ளது என்று திரும்ப திரும்ப பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
’நாடாளுமன்றத்திற்கே போகக்கூடாது’ என்று கன்னியாகுமரி மக்களால் நிராகரித்து தூக்கியெறியப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் கற்பனையான “பஞ்சமி” நிலக் குற்றச்சாட்டை வைப்பது வெட்கக்கேடானது.
முரசொலி அலுவலக விவகாரம் குறித்து எங்கள் கழக தலைவர் ஏற்கனவே ’உரிய இடத்தில் ஆதாரங்களை காட்டத் தயார்’ என்று உரிய விளக்கத்தை கொடுத்து விட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியும், தங்கள் சொந்த அரிப்புகளை சொரிந்து கொள்வதற்காகவும் குற்றம்சாட்டுபவர்கள் தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கலாம் என்றும் கூறிவிட்டார்.
தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை தட்டினாலும் எழுப்ப முடியாது என்பதற்கிணங்க - “ஓய்வு அரசியலில்” ஒய்யாரமாக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதற்கு வக்கில்லை என்றால் வேறு வழிகளில் தனது கட்சிக்குள் விரும்பும் தலைவர் பதவியை பெற முயற்சிக்க வேண்டும்.
அதை விடுத்து “தி.மு.க. என்றதும் பத்திரிகைகள் பாய்ந்து செய்தி வெளியிடுகின்றன” என்ற ஒரே காரணத்திற்காக உதவாக்கரை குற்றச்சாட்டுகளைக் கூற முன் வரக்கூடாது. முன்னாள் மத்திய அமைச்சர் என்ற முறையில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தைரியம் இருந்தால் தனது கட்சியின் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இன்றைக்கு தாறுமாறாக நிலைகுலைந்து நிற்கும் பொருளாதாரத்தை பற்றி பேசட்டும்.
பொருளாதாரச் சீரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பதில் சொல்லட்டும். ஒவ்வொரு ஐ.டி கம்பெனியாக இளைஞர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறார்களே, அதற்கு காரணமான பா.ஜ.க. அரசின் கொள்கைகளை விமர்சிக்கட்டும்.
தன் கட்சியை விமர்சிக்க முடியாவிட்டால்- ஊழலின் உறைவிடமாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளாரே- அந்த கூட்டணிக் கட்சி பற்றி விமர்சிக்கட்டும். அ.தி.மு.க. ஆட்சியால் வியாபாரிகளும், வணிகர்களும் பாதிக்கப்பட்டு - தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்களே, அதுபற்றி விமர்சிக்கட்டும்.
இதை எல்லாம் விடுத்து விட்டு “கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டை” “கதைக்கு உதவாத புகாரை” பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுகிறது என்பதற்காக பொன் ராதாகிருஷ்ணன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தி.மு.க.,வின் சார்பில் எங்கள் தலைவரும், நேற்றைய தினம் கூட, “நானும் விளக்கங்கள் அளித்த பிறகும், “பஞ்சமி” நிலம் என்ற வீண் புகாரை முன்வைத்து அதிமுக அரசின் ஊழல்கள் மற்றும் பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் மீதான விமர்சனங்களை திசைதிருப்பும் முயற்சியில் பத்திரிகைகளும் தயவு செய்து ஈடுபட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பத்திரிகை தர்மத்தில் நம்பிக்கையுள்ள பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முடிந்தால் குற்றம் சாட்டுவோரிடம் “உங்கள் ஆதாரங்களைக் கொடுங்கள்” என்று கேட்கலாம். அதுவும் இல்லையென்றால், ‘தி.மு.க. தலைவர் ஏற்கனவே ஆதாரம் இருந்தால் நீங்கள் கொடுக்கலாம் என்று கூறிவிட்டார். அதை வெளியிட வேண்டியதுதானே’ என்று கேட்கலாம்.
ஆளுங்கட்சியை - குறிப்பாக அ.தி.மு.க.,வையும், பா.ஜ.க.,வையும் விமர்சிக்க மாட்டோம். ஆனால் தி.மு.க.,வை பற்றி வரும் செய்திகளை “பேனை பெருமாள் ஆக்குவது” போல் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்பது பத்திரிகா தர்மத்திற்கு செய்யும் துரோகம் என்று இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஊதிப் பெரிதாக்கும் பத்திரிக்கை நண்பர்களையும், தொலைக்காட்சி நண்பர்களையும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
பொன். ராதாகிருஷ்ணனுக்கு நான் விடுக்கும் ஒரேயொரு அறைகூவல் இதுதான். ஊழல் அ.தி.மு.க.,வுடன் இருக்கும் பழக்க தோஷத்தால் 'பொய்களை உணமைகளாக்க' புலம்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
முடிந்தால் பஞ்சமி நிலம் குறித்த ஆதாரத்தை வெளியிடுங்கள். அதற்கு “நாம் லாயக்குப்பட மாட்டோம்” என்று நீங்கள் கருதினால், தேர்தல் வெற்றியில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி - அரசியலிலும் ஓய்வு எடுங்கள்.
அதை விடுத்து வீணாக தி.மு.க. பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என்று கணக்குப் போட்டு - தி.மு.க.,வை வீண் வம்புக்கு இழுக்காதீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!