DMK
''திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றை வீரபாண்டியார் இல்லாமல் எழுத முடியாது'' - மு.க.ஸ்டாலின் புகழாரம்!
மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் எழுதிய, ‘திராவிட இயக்கத்தில் என் பயணம்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலினை இன்று (17-11-2019) காலை, தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சேலத்தில் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், " 'திராவிட இயக்கத்தில் என் பயணம்' என்ற வரலாற்றுக் கருவூலமான நூலை வெளியிட்டு உரையாற்றுகின்ற மகத்தான வாய்ப்பை வழங்கியமைக்காக தம்பி வீரபாண்டி ராஜாவை வாழ்த்துகிறேன்; அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்ற மாவட்டங்கள் எல்லாம் அரசாங்கம் சூட்டிய பெயரால் வழங்கி வரும்போது, சேலம் மட்டும் “வீரபாண்டியார் மாவட்டம்” என்று சொல்லக்கூடிய அளவுக்கு, இந்த மாவட்டத்தையே தன்னுடைய கைக்குள் வைத்திருந்தவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள்.
அவர் எழுதிய ‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’ என்ற நூல் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிற வீரபாண்டி ராஜா அவர்கள் குறிப்பிட்டதைப் போல, அண்ணன் வீரபாண்டியார் இருக்கும்போதே இந்நூல் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அவர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு இந்நூல் வெளிவருவது உண்மையில் வருத்தம் தருவதாக உள்ளது.
இந்நூலை வாசிக்கின்றபோது அந்த வருத்தம் விலகி, மகிழ்ச்சியும் பெருமையும் பூரிப்பும் புளகாங்கித உணர்வும், ஏன், நம்மையே அறியாமல் ஒரு வீரமும் பிறக்கிறது. அதுகண்டு பெருமை அடைந்தேன். வீரபாண்டியார் அவர்கள் எத்தகைய தியாகத்தைச் செய்துள்ளார் என்பது பெருமைக்குரியதாக இருந்தது. அத்தகைய வீரபாண்டியாரை, கழகம் உயரத்தில் வைத்து அழகு பார்த்தது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருந்தது.
“திராவிட இயக்கத்தில என் பயணம்” என்பது இந்தப் புத்தகத்தின் பெயர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றை வீரபாண்டியார் இல்லாமல் எழுத முடியாது. வீரபாண்டியாரின் வரலாறே திராவிட இயக்க வரலாறுதான்!
வீரபாண்டியாரைப் பொறுத்த வரையில் அவரது பயணம் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தடம் மாறாமல் இருந்த பயணம் ஆகும். 1956ஆம் ஆண்டு பூலாவரி கிராமத்தில் கிளைக்கழகம் தொடங்கியது முதல் 2013ஆம் ஆண்டு மறைகின்ற வரை ஒரே இயக்கம், ஒரே கொடி, ஒரே சின்னம் என்று இலட்சியத்தோடு வாழ்ந்தார்.
பூலாவரி கிளைக் கழகச் செயலாளராக வட்டக் கழகப் பிரதிநிதியாக, மாவட்டக் கழகப் பிரதிநிதியாக, பின்னர் மாவட்டச் செயலாளராக வளர்ந்தவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள்.
கழகப் பொறுப்புகள் மட்டுமல்ல, ஊராட்சி மன்றத் தலைவராக, கூட்டுறவு சங்கத் தலைவராக, ஒன்றியப பெருந்தலைவராக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, சட்டமன்ற மேலவை உறுப்பினராக, தமிழக அமைச்சராக வளர்ந்தவர், அண்ணன் வீரபாண்டியார்.
வெளியில் இருந்து மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இத்தனை பதவிகள் வகித்துள்ளாரே என்று கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கும். ஆனால் இந்தப் பதவிகள் எல்லாம் அவருக்கு சும்மா கிடைத்து விடவில்லை. அவரது உழைப்புக்கு, தியாகத்துக்குக் கிடைத்தவை இந்தப் பொறுப்புகள் என்பதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.
இந்தப் புத்தகம் 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட மிகப் பெரிய புத்தகம். இதனை முழுமையாக என்னால் சொல்ல இயலாது. நீங்கள் அனைவரும் வாங்கிப் படித்தால்தான் வீரபாண்டியாரின் தியாகத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைக்கு மிகப் பெரிய சர்ச்சையாகிக் கொண்டு இருக்கிறது மிசா. நான் மிசாவில் இருந்தேனா இல்லையா என்பது இந்த நாட்டில் விவாதம் ஆகிக் கொண்டு இருக்கிறது. எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே இந்த நாட்டில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நான் சிறையில் இருந்தேனா இல்லையா என்பது, விவாதிக்க வேண்டிய தலைப்பா?
ஸ்டாலின் தி.மு.க.,வைச் சேர்ந்தவரா இல்லையா என்பது எவ்வளவு முட்டாள்தனமான விவாதமோ, அத்தகைய முட்டாள்தனமான விவாதம்தான், நான் மிசாவில் சிறையில் இருந்தேனா இல்லையா என்பது! அதனால்தான் பொதுக்குழுவிலே சொன்னேன். "மிசாவில் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று சொன்னேன்.
இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நான மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டோம். நாங்கள் சென்னை சிறையில் இருந்தோம் என்றால், வீரபாண்டியார் அவர்கள் சேலம் சிறையிலும், பின்னர் மாற்றலாகி மதுரை சிறையிலும் இருந்துள்ளார்கள்.
1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள பல தலைவர்கள் காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டார்கள். அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தலைவர் கலைஞர் அவர்கள் தான் முதன் முதலில் எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
டெல்லியில் இருந்து சில தூதுவர்கள் வந்தார்கள். “அன்னை இந்திரா காந்தி கொண்டுவந்திருக்கும் நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக் கூடாது, ஆதரிக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை; ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் ஆதரித்தால் மகிழ்ச்சி; ஆதரிக்கவில்லை என்றால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம்.
ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் உங்கள் ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும். நீங்கள் எதிர்த்தால், உங்கள் ஆட்சியை அடுத்த விநாடியே கவிழ்த்துவிடுவோம்.” என்று, வந்த தூதுவர்கள் சொன்னார்கள்.
அவர்களிடத்தில், "தந்தை பெரியார் அவர்களால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்டவன் நான். ஆட்சியென்ன? எங்கள் உயிரே போனாலும் நாங்கள் என்றைக்கும் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்கமாட்டோம் – ஜனநாயகத்தின் பக்கம்தான் நிற்போம்" என்று தலைவர் கலைஞர் அவர்கள், வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்.
அதற்குப்பிறகு, சென்னை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். " அம்மையார் இந்திரா காந்தி அவர்களே ! நீங்கள் கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் - என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிகிறேன்" என்று படித்துவிட்டு, வந்திருந்த மக்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து, அதனை வழிமொழிய வைத்தார்.
அதனையடுத்து, 1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்படுகிறது. கழகத்தைச் சேர்ந்த எங்களைப் போன்ற பலரும் கைது செய்யப்படுகிறார்கள். நான் பிப்ரவரி 2ஆம் தேதி கைது செய்யப்படுகிறேன். தமிழகம் முழுவதும் நம்முடைய தோழர்கள் பல்வேறு மத்திய சிறைகளில் அடைக்கப் படுகிறார்கள்.
பிப்ரவரி மாதம் 6ஆம் நாள் வீரபாண்டியாரின் மூத்த மகள் மகேஸ்வரி - காசி ஆகியோர் திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைக்க வேண்டும். அதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டு நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டோம்.
யாரெல்லாம் முன்னணியினரோ அவர்களை எல்லாம் கைது செய்கிறார்கள். கலைஞரைப் பார்க்க கோபாலபுரம் வந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் வீரபாண்டியாரை அழைத்து தலைவர் கலைஞர் அவர்கள் சொல்கிறார். "இந்தத் திருமணத்தை நான் நடத்தி வைக்க வந்தால், உடனே உன்னைக் கைது செய்து விடுவார்கள். அதனால் முன்னணியினரை வைத்து, நீயே நடத்தி விடு" என்று தலைவர் சொல்கிறார்.
இதனை ஏற்றுக் கொள்ளக்கூடியவரா வீரபாண்டியார்? "எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வந்துதான் நடத்த வேண்டும்" என்கிறார் வீரபாண்டியார். ஆனால் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறும்போது, தன்னால் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதால், தலைவர் கலைஞர் அவர்கள், அதில் கலந்து கொள்ளவில்லை.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் சொந்த ஊருக்கு மறுவீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் வழிமறிக்கப்பட்டு, வீரபாண்டியார் கைது செய்யப்பட்ட காட்சியை இந்த வேளையில் நினைவு கூரும்போது, அது நமக்குக் கண்ணீரை வரவழைக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கலைஞரின் தளபதி என்பதற்காக வீரபாண்டியார் கைது செய்யப்படுகிறார். அரசியல் கைதியாக, ஆனால் அதற்காக அவரது குடும்பத்தினர் அனுபவித்த சித்ரவதைகள் சொல்லி மாளாதவை! அதனால்தான் சொல்கிறேன், ஒவ்வொரு தொண்டனும் இந்த நூலினைக் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும்!
வீரபாண்டியாரின் அம்மா சின்னம்மாள் அவர்கள். அவர் எழுபது வயதில் கைது செய்யப்பட்டு பொய் வழக்குப் போடப்பட்டு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரை நடந்தே அழைத்து வந்துள்ளது போலீஸ். வீரபாண்டியாரின் மனைவி ரெங்கநாயகியைக் கைது செய்து, உடலில் சூடு வைத்துள்ளது போலீஸ்.
மூத்த மகள் மகேஸ்வரியையும் அவரது கணவர் காசியையும் கைது செய்தது போலீஸ். கல்யாண விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த உறவினர்களை அடித்து விரட்டியது போலீஸ். வீரபாண்டியாரின் சகோதரி பாப்பம்மாளை கைது செய்தது போலீஸ். சென்னையில் படித்துக்கொண்டு இருந்த வீரபாண்டியாரின் பிள்ளைகள் நெடுஞ்செழியன், நிர்மலா, ராஜா ஆகியோரை அவர்கள் படித்த பள்ளியில் நெருக்கடி கொடுத்து கடத்த முயற்சி செய்தது போலீஸ்.
வீரபாண்டியாரின் கார் ஓட்டுநர் கருப்பண்ணன் கைது செய்யப்பட்டு நிர்வாணமாக ஐஸ் கட்டியில் படுக்க வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டார். வீரபாண்டியார் தோட்டத்தில் இருந்த தோட்டக்காரர்கள் அனைவரும் அடித்து விரட்டப்பட்டார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடந்தன. அவரது தோட்டத்தில் இருந்த மாடுகளை அவிழ்த்து விட்டது போலீஸ். வீரபாண்டியார் மீது மட்டும் 50 பொய் வழக்குகள் போடப்பட்டன.
Also Read: “ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை” - மு.க.ஸ்டாலின் சாடல்!
மதுரைச் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரபாண்டியாரை கையில் விலங்கு போட்டு ரயில் கம்பியில் பிணைத்து, உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். இவ்வளவையும் படிக்கும்போது வீரபாண்டியார் மீது மட்டுமல்ல; அவரது குடும்பத்தினர் மீதே பெரிய மரியாதை ஏற்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், குடும்ப அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால், குடும்பம் குடும்பமாக இக்கட்சிக்கு உழைத்தார்கள். குடும்பம் குடும்பமாக பாடுபட்டார்கள். குடும்பம் குடும்பமாக சிறைக்குச் சென்றார்கள்!
அந்தக் காலக் கட்டத்தில் சேலம் மாவட்டத்துக்குள் வீரபாண்டியார் நுழையத் தடை விதித்தும் ஓர் உத்தரவு போட்டார்கள். இதனால் மூன்றாண்டு காலம் சேலத்துக்குள் வர முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. அப்படி மாவட்டத்துக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்ட வீரபாண்டியார்தான் சேலம் மாவட்டத்தையே வீரபாண்டியார் மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த இயக்கத்தை வளர்த்தார்கள்.
இதனை முழுமையாக நீங்கள் அறியவேண்டும். அதற்கு இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும்! இது வீரபாண்டியார் வரலாறு மட்டுமல்ல; கழகத்தின் வரலாறு; கலைஞரின் வரலாறும் இருக்கிறது!
வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு வழங்குவதில் தலைவர் கலைஞர் காட்டிய உறுதியும் அதற்காக வீரபாண்டியார் எடுத்த முயற்சியும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
கழகத்தின் கொடிக்கும் சின்னத்துக்கும் சோதனை வந்து தீர்ப்பு தேதி அன்று காலையில் கலைஞர் என்ன சொன்னார் என்று வீரபாண்டியார் எழுதியதை படிக்கும்போது உடம்பு சிலிர்க்கிறது.
முகச்சவரம் செய்யாமல் இருந்துள்ளார் கலைஞர். வீரபாண்டியாரைப் பார்த்ததும், சின்னமும் கொடியும் நம் கையை விட்டுப் போனால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை. தற்கொலை செய்து கொள்வேன் என்று கலைஞர் அழுதுள்ளார்.
அன்று காலை உணவு சாப்பிடவில்லை தலைவர். சின்னமும், கொடியும் நமக்குத்தான் என்று தீர்ப்பு வந்ததும், சிறுகுழந்தையைப் போல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாராம் தலைவர். ‘சேலத்து சிங்கம்’ என்று சொல்கிறோம். இந்த சேலத்துக்கு எத்தனையோ பெருமைகளை அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் தேடித் தந்திருக்கிறார்.
சேலத்தில் கழகத்திற்கு மாளிகை கட்டியது அவர். சேலத்தில் மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடுகளை நடத்தி கழகத்துக்கு பெருமையைத் தேடித் தந்திருக்கிறார். ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது எத்தனையோ சாதனைகள், திட்டங்கள், மக்கள் நலப் பணிகளை நிறைவேற்றியிருக்கிறார்.
கழகத் தோழர்களின் இல்லத் திருமணங்களை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். உள்ளாட்சித் துறை அமைச்சராக, பின்னர் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து பல்வேறு பெருமைகளைச் சேர்த்திருக்கிறார்.
2011 காலக்கட்டத்தில ஜெயலலிதா அரசு செய்த சித்ரவதைகள் உட்பட அனைத்தையும் மறக்காமல் பதிவு செய்துள்ளார். இதனைப் படிக்கும்போது கழகத்தின் முன்னணி வீரர்கள் 100 பேர் இதுபோன்ற வரலாற்றை எழுதினால் அதுதான் திமுக வரலாறு! என்பது திண்ணமாகிறது.
இந்த இயக்கத்தின் வரலாறு, திமுக எத்தகைய தியாக இயக்கம், எத்தகைய சாதனைகளை செய்த இயக்கம் என்பதை இதுபோன்ற புத்தகங்கள் தான் நாட்டுக்கும், மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் மறைந்த போது “மரணத்துக்கு வெற்றியை கொடுத்துவிட்டு சிங்கம் சாய்ந்தது”என்று கலைஞர் அவர்கள் கதறினார்கள். அவர் சேலத்துக்கு மட்டும் சிங்கம் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே சிங்கம் என்று நான் குறிப்பிட்டேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் தன்னை வளர்த்த ஊர் என்பதற்காக மட்டுமல்ல; வீரபாண்டியார் இருந்த ஊர் என்பதாலும், அதிகமான பாசம் சேலத்தின் மீது வைத்திருந்தார். திமுக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இரண்டு மாபெரும் மாநாடுகளை சேலத்தில்தான் கலைஞர் நடத்தினார். 1996ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, 1997ஆம் ஆண்டு நடந்த சேலம் மாநாடு மூன்று நாட்கள் நடந்தது.
அந்த மாநாட்டில் எனக்கு மிகப்பெரிய பெருமை ஒன்றை வீரபாண்டியார் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அணிவகுக்கும் ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நடத்திச்செல்லும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது.
மாலை 5 மணிக்குத் தொடங்கிய பேரணி விடிய விடிய நடந்தது. மாலை 5 மணிக்கு மேடையில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்த தலைவர் கலைஞர் அவர்கள் மறுநாள் காலை 8 மணி வரைக்கும் பார்வையிட்டார். 8 மணிக்கு மாநாட்டு பந்தலில் கொடியேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கலைஞர் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்படிப்பட்ட மாபெரும் பேரணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதேபோல் மூன்று நாள் மாநாட்டில முதல் நாள் முழுக்கவே இளைஞரணி மாநாடாக நடத்திக் கொள்ளவும் வீரபாண்டியார் அவர்கள் அனுமதித்திருந்தார்கள்.
1997ஆம் ஆண்டு நடந்த சேலம் மாநாட்டில் பேரணிக்கு தலைமை வகித்து வந்த நான் 2004 மாநாட்டில் 50 அடி உயரத்தில் கழகக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை அண்ணன் வீரபாண்டியார் அவர்களால் பெற்றேன். ‘வீரபாண்டியார் அழைக்கிறார்’ என்று கலைஞரே அழைப்பு விடுத்து உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய மாநாடு அது.
தலைவர் கலைஞர் அவர்களை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வைத்து சாரதியாக வீரபாண்டியார் ஓட்டிச் சென்ற மாநாடு அது. 1975ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாவட்ட மாநாட்டுக்கு வருகை தந்த கலைஞரை சாரட் வண்டியில் உட்காரச் சொன்ன போது கலைஞர் அவர்கள் மறுத்துவிட்டதாக இந்த புத்தகத்தில் ஒரு தகவல் இருக்கிறது. அப்படி மறுத்த கலைஞரை 2004ஆம் ஆண்டு மறக்காமல் உட்கார வைத்தவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள்.
அதனால்தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கிடைத்த ஊமைத்துரையைப் போல எனக்குக் கிடைத்த தம்பி வீரபாண்டி ஆறுமுகம் என்று சொன்னார் கலைஞர் அவர்கள். வீரபாண்டியாரைப் போல ஏராளமான வீரபாண்டியார்கள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். அப்படி உருவாக்குவதற்கான பாடப்புத்தகமாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்த படைக் கருவியை உருவாக்கிக் கொடுத்திருக்கும் சகோதரர் வீரபாண்டி ராஜா அவர்களைப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். அதேநேரம் இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலைகளை எண்ணிப் பார்த்திட வேண்டும். கடந்த 10ஆம் தேதி சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இதயமாய் விளங்கும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினோம்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் வகையில், வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய வகையில், நம்முடைய மாநில உரிமைகளை இழந்து கொண்டிருக்கும் கொடுமையில் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற ஒரு சிறப்புத் தீர்மானம்.
அந்தத் தீர்மானத்தோடு இணைத்து 20 தீர்மானங்களை நம்முடைய பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கிறோம். அவற்றை விளக்கிச் சொல்லும் வகையில் நேற்று முதல் ‘கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை’ தமிழகம் முழுவதும் நடத்த தொடங்கியிருக்கிறோம்.
அது தொடரப் போகிறது! இன்று தமிழகத்தில் இருக்கும் அநியாய ஆட்சியை விரட்டுகிற வரையில் அந்தப் போராட்டத்தை நாம் தொடருவோம்! அது அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் மீது நாம் எடுக்கின்ற உறுதியாக சபதமாக இருக்க வேண்டும்''இவ்வாறு தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!