DMK

அடிப்படைப் பண்புகளுக்கு ஊறு நேராமல் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்-தி.மு.க தலைவர் தீர்மானம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. தி.மு.க எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த தி.மு.க நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மறைவுக்கும், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கும், நெல் ஜெயராமனுக்கும் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தி.மு.க சட்டத் திருத்த விதிகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனிச் சிறப்புத் தீர்மானத்தை கொண்டுவந்து பேசினார். அதில்,” மத்திய அரசே! அடிப்படை பண்புகளுக்கு ஊறு நேராமல் அரசியல் சட்டத்தை திருத்திட முன் வருக.

இந்திய அரசியல் சட்டம் 70-ஆண்டு நிறைவுக்கு கழகத்தின் வாழ்த்து:

அரசியல் சட்டம் 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 70ம் ஆண்டு நிறைவடையும் நாளை எதிர்வரும் நவம்பர் 26ம் நாள் நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் அரசு கொண்டாடுகிறது.

இந்நிகழ்வுக்குக் கழகப் பொதுக்குழு தனது மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் தருணத்தில் கழகப் பொதுக்குழு அரசியல் சட்டம் தொடர்பான தனது கருத்துகளை மத்திய அரசின் முன் வைக்க விரும்புகின்றது.

கழகத்தின் முதல் தேர்தல் அறிக்கை:

அரசியல் சட்டம் இதுவரை 100 முறைக்கு மேல் திருத்தப்பட்டு இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை, தி.மு.க. அவ்வப்போது எடுத்து வைத்து நாட்டின் கவனத்தை ஈர்த்து வந்திருக்கிறது.

1957ம் ஆண்டு முதன் முதலாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையிலேயே, “மத்திய அரசுக்குத் தரப்பட்ட ஆட்சி அதிகாரங்களையும், வரி விதிப்பு அதிகாரங்களையும் குறைத்து அவற்றிற்கு வரம்பு கட்ட வேண்டும்” என்று அறிவித்தது.

மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா: கூட்டாட்சியா, ஒற்றை ஆட்சியா?:

மாநிலங்களவையில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், “நாம் ஒரு கூட்டாட்சியமைப்பை (Federal Form) ஏற்றிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்பு (Unitary Form) கூடாது; கூட்டாட்சி அமைப்பு முறைதான் வேண்டுமென்று விரும்பினார்கள்.

உண்மையில் இந்தியா ஒரு துணைக் கண்டம் என அழைக்கப்படக் கூடிய அளவிற்கு பரந்து விரிந்து கிடக்கின்றது. எஃகால் செய்யப்பட்டதைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சி அமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறுபட்ட வரலாறுகளையும், பலதிறப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் கலைஞர்: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி முழக்கம் :

1974ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் கலைஞர், முதல்முறையாக “மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” எனும் முழக்கத்தினை முன்வைத்தார்.

அடிப்படை உரிமைகளைத் திருத்தவோ, அடிப்படைப் பண்புகளைச் சிதைக்கவோ கூடாது:

மேற்கண்ட இருபெரும் தலைவர்களின் கருத்துக்களை அரசியல் சட்டம் தோன்றி 70ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடப்பட இருக்கின்ற இந்நேரத்தில் நினைவுகூர்ந்து இப்பொதுக்குழு மத்திய அரசுக்கு சில கருத்துகளை முன்வைக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனது முகப்புரையில் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசாகவே கட்டமைத்துள்ளது.

இவற்றோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) உள்ளிட்ட கூறுகளை எப்போதும் திருத்த இயலாது என்று உச்ச நீதிமன்றத்தின் பெரு அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதை மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துவதோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்வடிப்படை பண்புகளை (Basic Structures) சிதைத்திட திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்பதை இந்தப் பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.

இராசமன்னார் குழுவின் பரிந்துரைகளை நினைவில் கொள்க:

அதே வேளையில் கடந்த 70 ஆண்டுகளாக நமது அனுபவத்தின் வாயிலாகப் பார்க்கிற போது மத்திய அரசு பல அதிகாரங்களை இன்று வரை மாநிலங்களிடமிருந்து எடுத்து தன்வசம் குவித்து வைத்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் தலையாய கொள்கைகளில் மாநில சுயாட்சியும் ஒன்றாகும்.

மாநில சுயாட்சிக்காக தலைவர் கலைஞர் அவர்கள் அமைத்த இராசமன்னார் குழுவில் தமிழ்நாடு அரசின் கருத்துரையாக” உண்மையான கூட்டாட்சி அமைப்பில், நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை குறித்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.

ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் எஞ்சிய அதிகாரங்களுடன் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதை இப்பொதுக் குழு மீண்டும் நினைவுகூர்கிறது.

ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை நிறைவேற்றிட அனுமதியோம்:

மாநிலங்களுக்குத் தரப்பட்டிருக்கிற 18 அதிகாரங்களின் இன்றைய நிலையை கழகம் மிகக் கவலையோடு பார்க்கிறது. மேலும் பாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கமான மாநிலங்கள், மாவட்டப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டு இந்தியா முழுவதும்

200 ஜன்பத்கள் என்று பிரித்து ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்தை நோக்கி பா.ஜ.க அரசு இந்த நேரத்தில் பயணிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த முறையைக் கொண்டு வர எத்தனிப்பதற்கு கழகம் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இம்முயற்சியை கைவிட வேண்டுமென்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

அரசியல் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்கள் :

மேலும்,

  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது;
  • நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை (Proportional Representation) கொண்டுவருவது ;
  • அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers) அனைத்தும் தற்போது மத்திய அரசுக்கே உள்ள நிலையை மாற்றி, மாநில அரசுகள் சட்டங்களை இயற்றிக் கொள்ள வழிவகை செய்வது;
  • நிதி, கல்வி, மான்யம், கடன் வழங்குதல் போன்றவற்றில் மத்திய அரசு கையாண்டு வரும் “பெரிய அண்ணன்” மனோபாவம் தவிர்க்கப்பட்டு, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவது;

உள்ளிட்டவற்றை நிறைவேற்றிடும் வகையில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கழகப் பொதுக்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

எது சமூகநீதியின் சரியான பாதை?:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மற்றொரு தலையாய கொள்கை “சமூக நீதி” யாகும். சமூகநீதியைப் பெறுவதிலும், பெற்ற சமூக நீதியைக் காப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனித்த, தொடர்ச்சியான அரசியல் போராட்ட வரலாறு உண்டு.

சமூக நிலையிலும், கல்வியிலும், பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் “பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர்’’ என்று புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்கின்ற செயலை மத்திய அரசு அண்மையில் அரசியல் சட்டத்திருத்த வாயிலாக மேற்கொண்டுள்ளதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

பிற்படுத்தப்பட்டோர்க்கு வழங்கப்பட வேண்டிய 27 சதவிகித ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர்க்கான 22.5 சதவிகித ஒதுக்கீடும் மத்திய அரசு முழுமையாகச் செயல்படத்திடவில்லை.

எனவே, சமூகநீதியின் இந்தக் குறைபாடு துடைக்கப்பட வேண்டும் என்றும்; நிரப்பப்படாத சதவிகிதப் பணி இடங்களை முன்கொணர்ந்து நிரப்பவும் (Carry Forward) கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும்; நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தி நியாயம் வழங்கிட வேண்டும் என்றும்; இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேலும், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அளித்திடும் வேலைவாய்ப்புகள் இன்றைய நிலையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. பொதுத்துறை நிறுவனங்களும் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு செய்திட வேண்டியது கட்டாயமாகிறது.

அதுவே, சமூகநீதியின் சரியான பாதையாக இருக்கும். இதுபோன்ற உறுதியான செயல்திட்டம் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த ஏதுவாக அரசியல் சட்டப்பிரிவுகளில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து சமூகநீதியைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' எனத் தெரிவித்தார்.