DMK
“தமிழினத் தலைவரின் ஓய்விடத்தில் தன்மான மணவிழா!” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!
இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தின் முன்பு சுயமரியாதைத் திருமணம் ஒன்றை நடத்திவைத்து நெகிழ்ந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அதுகுறித்து உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார். அவர் எழுதிய மடல் பின்வருமாறு :
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்!
கழக வரலாற்றில் எத்தனையோ நாட்கள், இனிமையான நாட்களாக அமைந்திருக்கின்றன. எத்தனையோ நாட்கள், நெருக்கடியான நாட்களாக அமைந்திருக்கின்றன. எத்தனையோ நாட்கள், சோதனையான நாட்களாக இருந்திருக்கின்றன. இன்னும் எத்தனையோ நாட்கள், வெற்றிகரமான நாட்களாக அமைந்திருக்கின்றன. இன்றைய நாள் என்பது மகிழ்ச்சியும், மனநிறைவும் தரக்கூடிய நாளாக, பொழுதாகத் தொடங்கி இருப்பதை, தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளான உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
"அப்படி என்ன மகிழ்ச்சி?" என்று கேட்பீர்கள். நம்முடைய கழகத்தினரைப் பொறுத்தவரை; அவர்களுக்குத் தனி வாழ்வு, பொது வாழ்வு இரண்டுமே, எப்படி கழகத்தின் இருவண்ணக்கொடியில் கருப்பும், சிவப்பும் பிரிக்க முடியாமல் சேர்ந்தே இருக்கிறதோ, அப்படித்தான் இணைந்தே இருக்கிறது.
கழகத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ்பவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அந்தக் கொள்கை வழியே நடக்கிறார்கள்.
"தங்கள் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள், தங்களைச் சார்ந்தவர்கள் எல்லோருமே கழகத்தினரே!" என்று பெருமையோடு சொல்லிக்கொள்வதை ஒவ்வொரு கழகத்தொண்டனும் உரிமையாக நினைப்பதை, நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
தலைவர் கலைஞரில் தொடங்கி கடைசித் தொண்டன் வரை, அந்த உணர்வு பொங்கிப் பெருகி இருக்கின்ற ஒரு பேரியக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
கழகம் நடத்துகின்ற சுயமரியாதைத் திருமணங்கள் என்பவை, தமிழ்ப் பண்பாட்டை மீட்கின்ற ஒரு சிறப்பான நிகழ்வாகும். தந்தை பெரியாரில் தொடங்கி பலரும் போற்றி வந்த அந்தத் தன்மானம் மிக்க திருமண முறையை சட்டபூர்வமாக்கியவர், பேரறிஞர் பெருந்தகை அண்ணா. பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த பொழுது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமண சீர்திருத்தச் சட்டம் என்பது தன்மானத்துடன், தமிழ்மணத்துடன் நடைபெற்ற, நடைபெறுகிற, நடைபெற இருக்கின்ற அனைத்துத் திருமணங்களுக்கும் அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அந்த வழியில், இன்று தலைமுறை தலைமுறையாக, தன்மான உணர்வுடன் சுயமரியாதை சீர்திருத்தத் திருமணத்தை பலரும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கழக நிர்வாகிகளை எல்லாம் அழைத்து, மாநில அளவில், மாவட்ட அளவில், கிளைக்கழக அளவில் உள்ள எல்லோரும் பங்கேற்கும்படி மிக விரிவான, பிரம்மாண்டமான திருமணங்கள் நடைபெறுவதும் உண்டு. அதே நேரத்தில், மிக எளிமையாக உற்றார், உறவினர், நண்பர்கள், கழகத்தொண்டர்கள் இவர்களை அழைத்து நடைபெறுகின்ற திருமணங்களும் உண்டு.
"பராசக்தி" படத்திலே, தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு வசனம் எழுதியிருப்பார்கள் ! சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன என்பதற்கான இலக்கணமாக அந்த வசனம் இருக்கும்!
“இரண்டு மாலை, ஒரு சொற்பொழிவாளர், அது போதும்; அவ்வளவு தான் திருமணம்!" என்று, அதிலே கதாநாயகன் பாத்திரத்திலே குணசேகரனாக நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலைஞர் அவர்களின் வசனத்தைச் சொல்வார்கள். அது ஒரு எளிமையான இலக்கணம், சுயமரியாதைத் திருமணத்திற்கு!
நம்முடைய பொருளாதாரப் பின்புலத்திற்கேற்ப திருமண முறைகளை நடத்திக்கொள்வது இயல்புதான். அந்த வகையில், நம்முடைய கழகத்தொண்டர்கள் சிலர், தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் காத்திருந்து, அவர்கள் வெளியே வரும்போது, அவர்கள் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டது உண்டு. ஏன்? உங்களில் ஒருவனான என்னுடைய வீட்டிற்கும் வந்து பல தொண்டர்கள் அப்படித் திருமணம் செய்து கொண்டு சென்றிருக்கிறார்கள்.
எளிமையான அந்தத் திருமணங்களை நடத்தி வைக்கும்பொழுது, மனதில் மகிழ்ச்சியும் ஒருவகைக் கிளர்ச்சியும் ஏற்படும். ஏனென்றால், தங்களுக்கான எத்தனையோ சொந்தங்கள், ரத்த பந்தங்கள் எல்லாம் இருக்கும் பொழுது, அவர்கள் தங்கள் கழகத் தலைமையின் வாழ்த்துகளுடன் அந்தத் திருமணம் நடைபெற வேண்டும், அவர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்களே, அந்தப் பந்த பாச உணர்வுதான்; கழகத்தை யாராலும் அசைக்க முடியாமல் கட்டிக் காத்து வருகிறது.
இன்றைக்கு (8.11.2019) நடைபெற்ற அந்த எளிமையான, சுயமரியாதைத் திருமணம் என்பது, மேலும் மகிழ்ச்சி கூட்டிடும் ஒரு விழாவாக நடைபெற்றது. காரணம் அது நடைபெற்ற இடம், வீடோ மண்டபமோ அல்ல. ஆலயம் என்று சொல்லலாம். ஏனென்றால், வங்கக்கடற்கரையில், தன்னுடைய தங்கத்தலைவர் பேரறிஞர் அண்ணா உறங்குகின்ற இடத்திற்குப் பக்கத்திலே ஓய்வு கொள்ளா நம் தலைவர் ஒய்வு கொள்கிறாரே, அந்த இடத்திலேதான்,
இன்றைக்கு நம் கழகத்தொண்டரின் திருமணத்தை நடத்தி வைக்கின்ற ஒரு பெரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சி, 13-வது வார்டு, அண்ணா நகர், சொசைட்டி தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியர் திரு. எஸ்.கருப்பையன் - துவாக்குடி நகரக் கழக மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி.ராணி ஆகியோரின் மகன் கே.கதிரவன் மற்றும் மேற்கண்ட முகவரியிலேயே வசிக்கும் 13-வது வார்டு கழக அவைத்தலைவர் எஸ். ராஜு - திருமதி. ராஜம்மாள் ஆகியோரின் பேத்தி ஆர். வளர்மதி அவர்களின் மகள் என்.ஷியாம்லி, பி.ஏ., எம்.பி.ஏ., ஆகியோரின் திருமணத்தைத்தான் இன்று, தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில், திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் முன்னிலை வகிக்க, திரு.பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., பகுதிச் செயலாளர் திரு. மதன் மோகன் ஆகியோர் கலந்துகொள்ள, நான் தலைமை ஏற்று நடத்தி வைத்தேன்.
அடடா... என் சொல்வேன்!
தலைவர் கலைஞர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட மணமகன் கதிரவன் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களின் கையால் மாலை பெற்று, அவருடைய வாழ்த்துகளுடன் அறிவாலயத்தில் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசை கொண்டிருந்ததாகவும், காலச் சூழ்நிலை காரணமாக, அது நடைபெற வாய்ப்பில்லாமல் போனதால், தனக்கு உயிர் ஆலயமாகக் காட்சியளிக்கும் தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில், எனது கையால் மங்கல நாண் பெற்று தனது திருமணத்தை நடத்திக்கொள்ளப் பெரிதும் விரும்பி, அதற்கான முயற்சியில் வெற்றி பெற்றது பெரும் நெகிழ்ச்சியாக இருப்பதாக மணமகன் கூறியபோது, நானும் பெருமிதம் அடைந்தேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் மீது அன்பும், பாசமும், மரியாதையும் கொண்ட இப்படிப்பட்ட ஒரு தொண்டரின் திருமணத்தை, தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுக்கிற அந்த இடத்தில், நடத்தி வைக்கின்றபொழுது, என்றென்றும் நம் இதயத்தில் வாழ்கின்ற அந்தத் தலைவரின் வாழ்த்துரை கேட்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு, எதிரொலித்தது. அதே உணர்வுதான் அந்த மணவிழா இணையருக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.
அவர்களுடன் இணைந்து வந்திருந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழகத்தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞர் எத்தகைய திருமணத்தை விரும்புவாரோ, அத்தகைய திருமணம், அவருடைய நினைவிடத்தில் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற என் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்ற, அந்தக் கழகக் குடும்பத்தினரின் விருப்பமும், திருமண முறையில் அவர்கள் காட்டிய எளிமையும், அதற்காக முன்கூட்டியே என்னிடம் அனுமதி பெற்று, தேதியும், நேரமும் வாங்கி இந்த மணவிழாவினை மிகச்சிறப்பான முறையில் நடத்தி இருப்பதும், மனதிற்கு மட்டிலா மகிழ்ச்சியை அளிக்கிறது.
கழக வரலாற்றில் பல திருமணங்கள் இப்படி புரட்சிகரமாக, மனதை கவரக்கூடிய வகையிலே, மாற்றாருக்கும் வழிகாட்டக்கூடிய வகையிலே, புதிய முறையிலே, புதுமைச் சிந்தனையுடன் நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையிலே, இன்று நடைபெற்ற இந்தத் திருமணமும் மரபுகளைக் கடந்து, புதுமையை அணுகி நடைபெற்ற திருமணம் ஆகும்.
தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வுகொள்ளும் நினைவிடத்தில், அவரவர், தங்களின் மனதிற்கு ஏற்றவாறு தலைவர் கலைஞர் அவர்களை வணங்கிச் செல்வதைப் பார்க்கிறோம். தொண்டர்கள் வருகிறார்கள். பெண்கள் வருகிறார்கள். பிறந்த குழந்தையைக் கொண்டு வந்து தாலாட்டிச் செல்பவர்கள் இருக்கிறார்கள். படிக்கின்ற மாணவர்கள், தேர்வுக்கு முன்னதாக வந்து செல்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்கள், அந்தச் சமூகநீதிக் கொள்கைக்கு நன்றி செலுத்தும்வண்ணம் வந்து செல்கிறார்கள்.
அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், திருநங்கைகள், தமிழ் ஆர்வலர்கள், முதியவர்கள் என தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பயன் பெற்றவர்கள் எல்லாம் யார் யாரோ, அவர்கள் எல்லாம், தங்களுடைய நன்றியறிதலை நேரில் வந்து தெரிவிக்கும் இடமாக தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடம் அமைந்திருக்கிறது.
கடல்காற்று தாலாட்டும் அந்த இடத்தில், இன்றைக்கு ஒரு திருமண விழா, ஓர் இளைய இணையர் இல்லறத்தொடக்க விழாவாக நடைபெற்றிருக்கிறது.
தொட்ட துறைகள் அனைத்தையும் துலங்கிடச் செய்தவர், தலைவர் கலைஞர் அவர்கள். அவர்கள் விரும்பிய திருமண முறையில், அவர்களின் ஓய்விடத்தில், திருமணம் செய்துகொண்ட இந்த மணமக்கள் பல்லாண்டு வாழ்க!
வாழும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளமோடும், நலமோடும் வாழ்க என மனமார வாழ்த்துகிறேன்.
இனமான உணர்வுடன் சுயமரியாதைத் திருமணங்கள் நாடெங்கும் பெருகட்டும்; நற்றமிழர் சிறக்கட்டும்!”
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!