DMK
“அத்தைக்கு மீசை முளைத்தது போல் பேசுவது யார்?” - ராமதாஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் திமுக ஒ.செ பதிலடி!
தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், "ஏஜி" என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும். ஏற்கனவே கலைஞர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து தி.மு.க அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கு செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வெற்று வாக்குறுதிகள் எனக் கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘மருத்துவர் ராமதாஸ் அறிக்கையும் - ஒரு இட ஒதுக்கீட்டுப் போராளியின் குரலும்...’ என்ற தலைப்பில் செந்துறை வடக்கு தி.மு.க ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி ராமதாஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்துள்ளார்.
மு.ஞானமூர்த்தி பா.ம.கவில் மாநில தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு, 1991ல் ஆண்டிமடம் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டவர். பா.ம.க தலைமையிடம் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.கவில் இணைந்தார்.
ராமதாஸ் : தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?
போராளி : பாமக கூட்டங்களில் வன்னியர்களை பற்றி நீங்களும் உங்கள் மகனும் பேசி பல ஆண்டுகள் ஆகிறதே மறந்துவிட்டீர்களா?
ராமதாஸ் : தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.
போராளி : இது வெற்று வாக்குறுதிகள் அல்ல. சொன்னதைத்தான் செய்வார்! செய்வதைத்தான் சொல்வார் மு.க. ஸ்டாலின்.
ராமதாஸ் : விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.
போராளி : வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்றவுடன் அதிமுகவினரை திருப்திப்படுத்த இரவு முழுதும் தூங்காமல் அறிக்கை தயாரித்தவர் நீங்கள்தான்.
ராமதாஸ் : மக்களவைத் தேர்தலில் நகைக் கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.
போராளி : திமுக ஆட்சிக்கு வரும்போது கண்டிப்பாக நகைக்கடன் தள்ளுபடி செய்வார் மு. க. ஸ்டாலின். உங்களைப்போல் ஒவ்வொரு தேர்தலிலேயும் வன்னியர்களை வைத்து வியாபாரம் செய்தவரில்லை.
ராமதாஸ் : ஆனால் பாவம்.... அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன நடக்கும்? என்று கற்பனையாக எழுதப் பட்ட கட்டுரையைப் படித்தால் எத்தகைய உணர்வு ஏற்படுமோ, அதேபோன்ற உணர்வு தான் ஸ்டாலின் அவர்களின் அறிக்கையை படிக்கும் போதும் ஏற்படுகிறது.
போராளி : ஒவ்வொரு தேர்தலிலேயும் அடுத்த முதல்வர் அன்புமணிதான் என கற்பனைக் குதிரையை கட்டவிழ்த்து விட்டு இன்று ஒரு எம்எல்ஏவுக்கு கூட வக்கில்லாத நீங்கள் பேசுவதுதான் அத்தைக்கு மீசை.
ராமதாஸ் : வேலூர் தொகுதி தேர்தலின் போதே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்பதைக் கூட உணராமல் கற்பனையில் மிதக்கிறார் மு.க.ஸ்டாலின்.
போராளி : வேலூர் தொகுதியில் ஓட்டுக்கு ரூ. 800 முதல் ரூ. 1000 வரை கொடுத்தும், உங்கள் கூட்டணி பலம் இருந்தும், ஆளும் கட்சி என்கிற அதிகார பலம் இருந்தும் அதிமுக தோற்றதே அது தெரியவில்லையா? உங்களுக்கு.
ராமதாஸ் : வன்னியர் ஒருவரை -திண்டிவனம் வெங்கட்ராமன் - முதன்முதலில் மத்திய அமைச்சராக்கியது திமுக தான் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவருக்குப் பிறகு திமுக மொத்தம் 15 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போது வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையாவது கேபினட் அமைச்சராக்கியது உண்டா?
போராளி : பாமக ஆரம்பித்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதே. உங்களோடு போராடி தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஆயரக்கணக்கில் உள்ளதே அதில் உழைத்த இளைஞர்களுக்கு நீங்கள் எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளாக்கியதுண்டா? எந்த முதன்மை பொறுப்பானாலும் உங்கள் மகன் அன்புமணியை முன்னிறுத்துகிறீர்களே இவரை விட தியாகம் செய்தவர்கள், திறமையானவர்கள் உங்கள் கட்சியில் இல்லையா?
ராமதாஸ் : திமுக மாவட்ட செயலாளர்கள் நியமனத்திலாவது வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதா?
போராளி : கூட்டணி தர்மத்தையும் மீறி வன்னியர் என்கிற உணர்வையும் தாண்டி, வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களை சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் தோற்கடித்தது உங்கள் கூட்டம்தானே. அப்போது எங்கே போனது உங்கள் ஜாதி உணர்வு.
ராமதாஸ் : 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளாக ‘ஏ.ஜி’ அவர்களின் குடும்பத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தராமல் ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம் வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்புணர்வு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
போராளி : வன்னியர் சங்க கூட்டத்தில் உங்கள் உங்கள் பேச்சைக்கேட்டு கத்திக் கத்தி தன் உயிரையே விட்ட காடுவெட்டி குரு, மருத்துவத் தொழிலையும் மறந்து உங்களுக்காக உழைக்கும் விருத்தாசலம் டாக்டர் ஆர். கோவிந்தசாமி, இளமையை பலியிட்டு இனத்திற்காக உழைக்கும் புதா. அருள்மொழி, மக்கள் பிரச்சனையை ஊடகத்தின் முன்நிறுத்தும் நீதியின் குரல் சிஆர் பாஸ்கரன், பாட்டாளி தொழிற்சங்க சங்கத் தலைவர் இராம. முத்துக்குமார் , வழக்கறிஞர் குபேந்திரகுணபாலன், மாயவரம் கொற்றவமூர்த்தி, விருத்தாசலம் தச்சினாமூர்த்தி, சேத்தியாதோப்பு இமையவரம்பன், சிட்டிபாபு, சிதம்பரம் மணிவண்ணன் , நெய்வேலி வாழைச்செல்வன், பாசிக்குளம் திருஞானம், அரியலூர் அறிவழகன், இப்படி பல ஆண்டுகாலம் எந்தப் பலனையும் அனுபவிக்காத இவர்களுக்கு நீங்கள் வாங்கி கொடுத்த பதவிகள்தான் என்ன?”
இவ்வாறு சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் மு.ஞானமூர்த்தி.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?