DMK

அதிமுகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை அணைகள் கட்டியுள்ளீர்கள்? - எடப்பாடி பேச்சுக்கு துரைமுருகன் கண்டனம்

"காவிரியில் மாயனூர் தடுப்பணை கட்டியது திமுக அரசு. கடந்த எட்டு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகள் எத்தனை? அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட அணை என்று ஒன்றையாவது காட்ட முடியுமா?" என கேள்வி எழுப்பி திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

சேலம் மாவட்டம் - வீரபாண்டி தொகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரிப் பிரச்னை குறித்து முழு விவரம் தெரியாது உளறிக் கொட்டியிருக்கிறார். காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர், அ.தி.மு.க அரசின் அக்கறையின்மையாலும், நிர்வாகத் திறமைக் குறைவினாலும் வீணாகக் கடலில் கலக்கிறது. காவிரி கடந்து வரும் வழியில், அதனைத் தடுத்து சேமித்து வைக்க அ.தி.மு.க. அரசிடம் உருப்படியான திட்டமேதும் இல்லை என எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்புக்கே உரிய அக்கறையில் தமது கவலையை வெளியிட்டிருந்தார்.

அதற்குப் பதில் கூறுவதாக எண்ணிக் கொண்டு, நேற்று சேலம் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "எங்களைக் குறை கூறும் தி.மு.க.வினர், தங்கள் ஆட்சியில், காவிரியில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" - எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது; “தி.மு.க ஆட்சியில் காவிரியில் மாயனூர் எனும் இடத்தில் திமுக ஆட்சியில் நாங்கள் தடுப்பணை கட்டியுள்ளோம். அந்த விபரம் கூடத் தெரியாமல், பொதுப் பணித்துறையையும் தன் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பாகப் பேசலாமா?”

“மாயனூரில் கட்டப்பட்ட அந்தத் தடுப்பணையால், அந்தப் பகுதியில் பூமியின் நீர்வளம் பெருகியது. அதனால் விவசாயம் செழித்தது. அதனால் இன்றைக்கும் பயனுறும் அந்த வட்டாரத்து விவசாயப் பெருங்குடி மக்கள் ஆயிரக்கணக்கானோர், கழக அரசுக்கு எந்நாளும் நன்றி தெரிவித்து மகிழுவதைக் காணலாம்”.

“அந்தக் கால கட்டத் தேவைக்கேற்ப மாயனூரில் திமுக அரசால் தடுப்பணை கட்டப்பட்டது. அப்போது, மேலும் தடுப்பணைகள் கட்டுவதற்கான தேவை ஏற்படவில்லை. தேவை இருந்திருப்பின், அப்போதைய முதலமைச்சராக இருந்த எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள், அதற்கு உடனே அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கி, பணியினை முடுக்கி விட்டிருப்பார்கள். எனவே, காவிரியின் நலம் பேணியதில் திமுக அரசைக் குறைகூற எடப்பாடிக்கு எள்ளளவும் அருகதை இல்லை”.

“நான் கேட்கிறேன்; அ.தி.மு.க ஆட்சி நடைபெறும் கடந்த எட்டாண்டுகளில் காவிரியில் எத்தனை தடுப்பணைகள் நீங்கள் கட்டியுள்ளீர்கள்? மற்றுமோர் கேள்வி; திமுக ஆட்சிக் காலங்களின் போது தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட அணைகளை நாங்கள் கட்டியுள்ளோம். இதுகாறும் நடந்த அ.தி.மு.க ஆட்சிகளில் கட்டப்பட்ட அணை என, ஒரே ஒரு அணையையாவது உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா?”

“எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு, பதிலேதுமிருந்தால் - இன்னின்ன இடங்களில் நாங்கள் தடுப்பணை கட்டி வருகிறோம் அல்லது கட்டத் திட்டமிட்டுள்ளோம் என, ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.”

அதை விடுத்து, “தி.மு.க ஆட்சியில் காவிரியில் தடுப்பணையே கட்டப்படவில்லை என்று உண்மைக்குப் புறம்பாகப் பேசுவது, தனிப்பட்ட எடப்பாடிக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம், அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு, அது நாகரிகமான செயலும் அல்ல, அழகுமல்ல என்பதை, தமிழகப் பொதுப்பணித் துறையின் அமைச்சராக தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவன் எனும் முறையில் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.