DMK

“பேனர் வைப்பதை தவிர்த்தது போலவே பட்டாசு வெடிப்பதையும் நிறுத்திவிடுங்கள்” : உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாமை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சில நாட்களுக்கு முன் பேனர் விழுந்து ஒரு இளம்பெண் உயிரிழந்ததையடுத்து நம் தலைவர் தி.மு.க நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 3 நாட்களாக நான் சென்ற இடங்களில் எங்கும் பேனர் வைப்பதில்லை. இது சிறப்பான விஷயம்.”

அதேபோல நம் விழாக்களில் இனி யாரும் பட்டாசுகள் வெடிக்கவேண்டாம். பட்டாசு வெடித்தால்தான் ஆட்கள் வருவார்கள் என்றால் அப்படி யாரும் வரத் தேவையில்லை” என்று கூறினார்.

மேலும், “30 லட்சம் பேரை இளைஞரணியில் உறுப்பினர்களாகச் சேர்க்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல எழுச்சியும் வரவேற்பும் காணப்படுகிறது.

எனக்கு எந்தப் பட்டபெயரும் வேண்டாம். என் பெயரைச் சொல்லியே கூப்பிடுங்கள், நான் கலைஞரின் பேரன், தலைவரின் மகன் அதைவிட தி.மு.க-வின் கடைக்கோடித் தொண்டன். இதைவிட எனக்கு பெருமை என்ன இருக்கிறது?

தமிழகத்தில் ஒரு கேடுகெட்ட அடிமை ஆட்சி நடைபெறுகிறது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவார். அப்போது இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்” என்று பேசினார்.

முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.