DMK

தி.மு.க-வில் இணைய ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : பெரும் பாய்ச்சலில் உறுப்பினர் சேர்க்கை - உதயநிதி உற்சாகம்

செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை ட்தி.மு.க இளைஞர் அணியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முகாம்கள் தொடங்கப்பட்டன. இதுகுறித்து, தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக ஈர்க்க வேண்டும். செப்டம்பர் 14ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதிக்குள்ளான இரண்டு மாத கால இடைவெளிக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், தி.மு.க இளைஞர் அணிக்கான உறுப்பினர் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைக்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் வட்ட வாரியாக வரிசையில் நின்ற இளைஞர்களைப் பார்க்கையில், ‘இது உறுப்பினர் சேர்ப்பு முகாமா அல்லது வாக்குச்சாவடியா’ என்று எண்ணும் அளவுக்கு அவர்களுக்குள் ஓர் உற்சாகம், ஓர் ஒழுங்கு.

வரிசையில் நின்றவர்களில் முதல் நான்கு இளைஞர்களின் தகவல்களை மட்டும் கேட்டறிந்து உறுப்பினர் படிவத்தைக் கைப்பட நிரப்பி, முகாமை தொடங்கி வைத்தேன். உறுப்பினர் சேர்ப்பு படிவத்தில், ‘முன்பு உறுப்பினரா’ என்ற கேள்விக்கு ‘ஆம்... இல்லை’ என்று பதிலளிக்கும் ஒரு பகுதி உள்ளது. நான் உறுப்பினராகச் சேர்த்த அந்த நால்வரில் மூவர், ‘இல்லை’ என்று பதிலளித்தனர். இதன் மூலம், ‘தி.மு.க-வில் புதிய இளைஞர்களின் வரவு என்றும் குறைந்ததில்லை’ என்ற உண்மை புலப்படும்.

நான் பள்ளி, கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் அன்பை அறிவேன். ஏனெனில் தேர்தல் பிரச்சார சமயங்களில் தலைவருக்காக இங்கு வாக்கு கேட்டு வீடுவீடாக ஏறி இறங்கியிருக்கிறேன்.

அதனால் ஆயிரம் விளக்குக்கும் எனக்கும் அணையா அன்பு எப்போதும் உண்டு. இதை நன்குணர்ந்த சென்னை மேற்கு மாவட்டக்கழகச் செயலாளர் அண்ணன் ஜெ.அன்பழகன் மேடையில் பேசும்போது, ‘வரும் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் இளைஞரணிச் செயலாளர் நிற்க வேண்டும்’ என்றார்.

அடுத்து நான் பேசும்போது, ‘ஆயிரம் விளக்கின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கு.க.செல்வம் அவர்களை வைத்துக்கொண்டே அண்ணன் இப்படிச் சொல்கிறார்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டேன்.

இருவருமே சிரித்துவிட்டனர். இந்த அன்பும், உரிமையும்தான் மற்றவர்களிடம் இருந்து நம்மைத் தனித்து அடையாளப்படுத்துவதாக நினைக்கிறேன். அண்ணன்களுக்கு நன்றிகள். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிற்றரசு உள்ளிட்ட இளைஞரணித் தோழர்களுக்கு வாழ்த்துகள்.

அடுத்து சைதாப்பேட்டை தேரடித் தெரு. ‘இங்கும் வந்து முகாமை தொடங்கிவைக்க வேண்டும்’ என்பது மாவட்டச் செயலாளர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களின் அன்பு கட்டளை. தொகுதி வாரியாக தனித்தனி கவுன்டர்கள். மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்துத் தொகுதி இளைஞர்களையும் அங்கு வரவைத்திருந்தனர்.

அவர்களும் தூரத்தை மறந்து பயணித்து வந்து தங்களை இளைஞர் அணியில் இணைத்துக்கொள்ள வரிசையில் காத்திருந்தனர். முகாமை சிறப்பான திட்டமிடலுடன் ஒருங்கிணைத்திருந்த அண்ணன் மா.சு உள்ளிட்ட மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி, அமைப்பாளர் பிரபாகர், ராஜா உள்ளிட்ட இளைஞர் அணித் தோழர்களுக்கு வாழ்த்துகள்.

அடுத்து இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டேன். 17 வயது நிரம்பிய பள்ளி படிக்கும் தம்பி ஒருவர், ‘என்னை இளைஞர் அணியில் சேர்த்தாலே போச்சு’ என்று நம் நிர்வாகிகளுடன் விடாப்பிடியாக மல்லுக்கு நின்றார். அவருடன் பேசி, சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தேன். இந்த சம்பவம், அடுத்த தலைமுறை இளைஞர்களின் எழுச்சியை உள்வாங்கிக்கொள்வதாக அமைந்திருந்தது.

அடுத்து தி.மு.கழகத்தின் முதல் தலைமையகமான ராயபுரம் அறிவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமை பார்வையிட்டேன். அப்போது இளைஞர் அணியின் வளர்ச்சிக்காக மாவட்டச் செயலாளர் அண்ணன் சுதர்சனம் அவர்கள் நிதி அளித்தார். அவர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி. மாவட்ட அமைப்பாளர் எபிநேசர் உள்ளிட்ட இளைஞர் அணி தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

அதைத்தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் இல்லமான கோபாலபுரத்தில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டேன். ‘இன்றைய தலைவரால் அன்றைக்கு, இந்த இடத்தில்தான் அன்று இளைஞர் மன்றம் தொடங்கப்பட்டது’ என்று கழக மூத்த நிர்வாகி ஒருவர் நினைவுபடுத்தினார்.

இந்த இளைஞர் அணி, எத்தனை பேரின் உழைப்பின் வழி பயணித்து வந்துள்ளது என்பதை இந்தநேரத்தில் தோழர்களுக்கு நினைவுபடுத்துவது என் கடமை. அடுத்து, கழக தலைமையகமான அறிவாலயம், தொடர்ந்து தலைவரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தின் அருகே நடந்த முகாம்களையும் பார்வையிட்டேன்.

இதற்கு முன்பாக, நேற்று காலையில் நான் முகாமை தொடங்கிவைத்த அதே நேரத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், இளைஞர் அணியின் துணைச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, பகுதி, வட்ட நிர்வாகிகள், இளைஞர் அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் தமிழகம் - புதுவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களைத் தொடங்கிவைத்துச் சிறப்பாக நடத்தினர்.

‘புதிய இளைஞர்களின் எழுச்சிமிகு வருகை’ மணிக்கொரு முறை வந்து குவிந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை’... இப்படி முகாம்கள் பற்றி ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் வரும் செய்திகள் மகிழ்வைத் தருகின்றன. ‘இளைஞர்கள் நம் மீது வைத்துள்ள இந்த நம்பிக்கைக்கு நாம் தகுதியானவர்கள்தான்’ என்பதை நிரூபிக்கும் வகையில் நம் அடுத்தடுத்த செயல்பாடுகள் இருக்கவேண்டும்.

தவிர, ‘இது இளைஞர் அணியின் இலக்கு மட்டுமே’ என்று தாய்க் கழக நிர்வாகிகள் ஒதுங்கிவிடாமல், ‘இது இயக்கத்தினுடைய இலக்கின் ஒரு பகுதி’ என்று கருதி அவர்கள் உழைத்த காரணத்தினால்தான் இந்தளவுக்கு வெற்றிபெற்றுள்ளது. ‘முதல்நாளிலேயே, எதிர்பார்த்ததைவிட அதிக உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டோம்’என்று அடுத்தடுத்த நாள்களில் சொகுசாகச் சோர்ந்து அமர்ந்துவிடக்கூடாது.

‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்று இந்தியைத் திணிக்க முயல்பவர்களும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிப்பவர்களுமே பரபரப்பாக குறுக்கு மறுக்காக ஓடிக்கொண்டிருக்கையில், இந்த மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டிய இடத்தில் உள்ள நாம் அவர்களைவிடக் கடுமையாக உழைக்கவேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். காலக்கெடுவில் ஒருநாள் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்து தொடர்ந்து பயணப்படுவோம், இணைந்திருப்போம்'' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.