DMK

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புறக்கணிக்கப்படுகிறதா கரூர் - செந்தில் பாலாஜி சொல்லும் காரணம் என்ன ?

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் தலைமையில் ஜல் சக்தி அபியான் திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்பாலாஜி, ''அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது அது திருப்பூர் மாவட்டம் வரையிலான பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படும் வகையில் திறக்கப்படுகிறது. இதனால் அமராவதி ஆற்றை நம்பியிருக்கும் கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது அணையின் நீர்மட்டம் போதிய அளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் 2 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் மட்டுமே கரூர் மாவட்டத்தை அமராவதி ஆற்று நீர் வந்து சேரும். ஆனால், தற்போது ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளதால் இது திருப்பூர் மாவட்டம் வரையிலான தேவைக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்ட அதிகாரிகளிடமும் முறையிட்டு உள்ளோம். இன்னும் மூன்று நாட்களில் 2 ஆயிரம் கனஅடி நீர் அமராவதி அணையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மாபெரும் அறப்போராட்டம் நடைபெறும்'' என தெரிவித்தார்.