DMK

“தமிழர்களின் நெஞ்சச் சிம்மாசனத்தில் நிரந்தரமாய் நிறைந்த தலைவன்!” #ThankYouMK

‘கலைஞர் புகழ்’ என்கிற தலைப்பில் கவிஞரும், ஆசிரியருமான கரிகாலன் கலைஞருக்கு இயற்றிய புகழாஞ்சலி பின்வருமாறு :

“எளிய மனிதர்கள் உழைப்பால் திறமையால் ஏற்றம்காண முடியும் என நம் கண்முன்னே இருந்த எடுத்துக்காட்டை காலம்
தன் கரங்களில் ஏந்திக் கொண்டது.

திருக்குவளையிலிருந்து லட்சியத்தை நோக்கி நடந்த சிறுவனொருவன் நாடகம், திரை, தி.க, தி.மு.க எனப் பல நாற்காலிகளில் அமர்ந்தும் திருப்தியடையாமல் தமிழர்களின் நெஞ்சச் சிம்மாசனத்தில் நிரந்தரமாய் நிறைந்துவிட்டான்.

அந்த இளைஞன் எழுதினால் வாசித்த விழிகள் சிவந்தன; பேசினால் கேட்ட செவிகள் கொதித்தன;
கலைஞர் என்கிற தீ வளர்ந்து வளர்ந்து விளக்கானது;
தமிழர்க்கு கிழக்கானது!

கலைஞர் ஒரு கையால் பேனாவைப் பற்றியிருந்தார்.
இன்னொரு கையால் வாளைப் பற்றியிருந்தார்.
இரண்டாலுமே யுத்தம்மட்டுமே செய்த போராளி!

அவர் முத்தமிழை யுத்தத் தமிழாக ஆக்கினார். முத்தமிழறிஞர் அல்லவா, முத்தத் தமிழாகவும் மாற்றினார்.

கலைஞருக்கு மார்க்சியம் தெரியும். அம்பேத்கரியமும் அறிவார். ஆனாலும் அண்ணா எதிர்க்க ராஜாஜி இருந்தார்;
காமராசர் இருந்தார்.
கலைஞருக்கு எதிர்க்கக் கிடைத்த எதிரிகளோ எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்.
இதனால் கலைஞர் என்கிற யானை பலநேரங்களில் தமிழக அரசியல் சர்க்கஸில் சைக்கிள் விட வேண்டியிருந்தது.

சத்துணவு கொடுப்பவர்களோடு சமத்துவபுரம் தந்து போட்டியிட முடியாதல்லவா? தன் பங்குக்கு தமிழகப் பிள்ளைகளின் தட்டுகளில் முட்டையும் வைக்க வேண்டிதாயிற்று.

ஏழைகளுக்கு ஜெயலலிதா எருமை மாடு கொடுத்தால் என்ன செய்வதென்று தன் பங்குக்கு கலர் டி.வி கொடுத்தார் கலைஞர்.

பெண்களுக்கு சொத்துரிமை தந்தால் மட்டும் இங்கு அரசியல் செய்யமுடியாது என்பதை அறிந்தவர். கண்ணகிக்கு சிலை எழுப்பினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் திருமண உதவித் திட்டமும் கொண்டு வந்தார்.

ஒரு பக்கம் பெரியாரியல் தத்துவம்.
மறுபக்கம் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம். இரண்டையும் எதிர்கொண்டு தி.மு.க-வைப் பாதுகாத்த அரசியல் தந்திரி கலைஞர்.

அவரது தமிழ் எதிரிகளையும் கைத்தட்ட வைத்தது. அவரது நகைச்சுவை பகைவர்களையும் சிரிக்கவைத்தது. அவரது ராஜதந்திரம் மாற்று முகாமை நிலைகுலையச் செய்தது.

ஊருக்கு உபதேசம் என்பதோடு நின்று விடுவதில்லை கலைஞர். சமத்துவபுரத்தை கோபாலபுரத்திலிருந்தே தொடங்கிய புரட்சியாளர். தலித்துகள் தங்கள் சம்மந்தி என இன்றளவும் கலைஞரைக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பெருமையை தமிழக அரசியலில் பெற்ற ஒரே தலைவர் கலைஞர்.

ஈழத்தைச் சொல்லி கலைஞர் என்கிற வேழத்தின் புகழைச் சாய்த்துவிட முனையும் மூடரும் உளர்.

ஆனால் ஈழம் அழித்த இந்திய அமைதிப்படையை வரவேற்காமல் சுயமரியாதை, இனமரியாதை காத்தவர் கலைஞர். அதற்காக ஆட்சியை இழந்தவர் - என்பதெல்லாம் மாற்றி எழுத முடியாத வரலாற்றுக் கல்வெட்டுகள்.

கலைஞரின் சாதனைகள் ஒரு அஞ்சலிக் குறிப்பில் அடங்கிவிடக் கூடியவை அல்ல. அது எழுத எழுத நீளும் சரித்திரப் புத்தகம்.

கலைஞரைப்போல் தோல்வியைக் கண்டிருந்தால் ஒருவர் துறவியாகியிருப்பார். கலைஞரைப்போல் ஒருவர் வெற்றியை அனுபவித்திருந்தால் தலைகனம் பெற்றிருப்பார். கலைஞரோ வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவித்த
ஒரு அரசியல் ஞானி.

கடைசிவரை ஒரு போராட்டக்காரராகவே இனம் காணப்பட்டவர் கலைஞர். மறைந்த அன்றும் தன் தொண்டனை போராட வைத்தவர்.

எல்லாத் திசைகளிலும் கிளைவிரித்து மலர்ந்து, காய்த்து, கனிந்த விருட்சம் மெரினாவில் உறங்குகிறது, விதைகளோடு.!

மீண்டும் மீண்டும் அவ்விருட்சம் தமிழ் நிலத்தில் நிமிரும். தமிழர்க்கு நிழல் தரும்.”

- கரிகாலன்