DMK

அஞ்சல் துறை தேர்வு விவகாரம் : மத்திய அரசு பணிந்ததைத் தொடர்ந்து தி.மு.க தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு!

அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு புதிய அறிவிப்பாணை தாக்கல் செய்ததை அடுத்து, தி.மு.க தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

அஞ்சல் துறை பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தொடர்பாக மே 10ம் தேதி வெளியிடப்பட்ட அஞ்சல் துறை அறிவிப்பில் ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்து தேர்வையும் நடத்தி முடித்தது. மத்திய அரசின் இந்த சூழ்ச்சிக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

இதற்கிடையே, அஞ்சல் துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால், அஞ்சல் துறை தேர்வுகளை மாநில மொழிகளிலும் எழுதலாம் என புதிய அறிவிப்பை வெளியிட்டு, முன்னதாக நடைபெற்ற தேர்வையும் ரத்து செய்தது மத்திய அரசு.

இந்நிலையில், தி.மு.க தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கும் மே 10ம் தேதியிட்ட அறிவிப்பு தொடரும் என அறிவித்து ஜூலை 23ம் தேதி மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறி, அதன் நகலை மத்திய அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக அஞ்சல் துறை தேர்வுகளை பழைய முறைப்படி தமிழிலும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.