DMK
நமது தமிழ் மொழியையும்,சமூக நீதியையும் யாராலும் தொடமுடியாது என்பதை உணர்த்த வேண்டும் - உதயநிதி வேண்டுகோள்
இந்தி மொழியை திணிப்பதற்காக அம்மொழி பேசாத மாநிலங்களை குறிவைத்து புதிய வரைவு தேசியக் கல்விக் கொள்கை என்பதை அமல்படுத்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மாபெரும் எதிர்ப்புகள் எழுந்ததால் தன்னுடைய முடிவில் இருந்து சற்று மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கருத்துகளும் கண்டனங்களும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மலைபோல் குவிய வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி உறுப்பினர்களுக்கும், தி.மு.கவினருக்கு இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது,
இந்தியாவின் பன்முகத்தன்மையை, ஒவ்வொரு இனத்தின் தனி கலாசார சிறப்புகளை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுதொடர்ந்து சிதைத்து வருகிறது. அதற்கு மாநிலத்தில் ஆட்சிபுரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாநில அரசோ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பதவியில் நீடித்தால் போதும் என்று பயபக்தியுடன் காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கிறது.
இதற்கு நீட் தேர்வு, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு போன்ற ஏகப்பட்ட மக்கள் விரோதத் திட்டங்கள், சட்டங்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.
அந்த வகையில், மும்மொழித் திட்டத்தை திணிக்கும் வகையில் “வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019” ஒன்றை வெளியிட்டு செம்மொழியான தமிழ் மொழிக்கு எதிரான மறைமுக யுத்தத்தை பா.ஜ.க. அரசு தொடுத்துள்ளது. வழக்கம் போல் அதனை தட்டிக்கேட்கும் தைரியம் இல்லாமல் அமைதி காக்கிறது இங்குள்ள மாநில அரசு.
மூன்று வயதிலேயே மும்மொழித் திட்டம், பல்வேறு நிலைகளில் தேர்வுகள், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை மூடுவது உட்பட இந்த வரைவு கல்விக்கொள்கையில் உள்ள ஒவ்வொரு பரிந்துரையுமே மாணவர்களின் மனதினை நிலைகுலைய வைக்கும் திட்டமிட்ட சதி.
மேலும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை சீர்குலைக்கும் குறுகிய மனப்பான்மையின் வடிவமாகவே இந்த கல்விக்கொள்கை தெரிகிறது. எந்த ஒரு அரசும், இதனைப் படித்ததும் இது “ஜனநாயகத்துக்கு எதிரான கல்விக்கொள்கை” என எதிர்ப்புத் தெரிவித்து புறக்கணித்திருக்கும்.
ஆனால், இங்குள் அ.தி.மு.க அரசோ இதனை சிவப்பு கம்பளமிட்டு வரவேற்காத குறையாக வரவேற்கிறது. மேலும், கல்விக் கொள்கை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் முன்னறிவிப்பு ஏதுமின்றி இந்தக் கொள்கை மீது கருத்துக்கேட்பு கண்துடைப்பு நாடகங்களை நடத்தி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இந்தியாவிலேயே முதல் முறையாக வரைவு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பை தெரிவித்த கழகத் தலைவர் அவர்கள், அக்கொள்கை பற்றி ஆய்வு செய்ய கல்வியாளர்களைக் கொண்ட ஆக்கப்பூர்வமான ஒரு குழுவையும் அமைத்தார். அந்த குழுவின் அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் அளிக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.கவின் கடும் எதிர்ப்புக்கு பணிந்து புதிய கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம் குறித்த பரிந்துரைகளில் திருத்தங்களை மேற்கொண்ட மத்திய அரசு தற்போது அடுத்தகட்டமாக இந்த கல்விக் கொள்கை குறித்து ஜூலை 30ம் தேதிக்குள் மக்களிடம் கருத்துக் கேட்கவும் முன்வந்துள்ளது.
இந்தச் சூழலில் நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான கடமை ஒன்று உள்ளது. இந்த வரைவு கல்விக் கொள்கைக்கு எதிரான நம் இளைஞர்களின் கொந்தளிப்பை, குலக் கல்வி முறையை இந்தியாவை நகர்த்திடும் மத்திய பா.ஜ.க அரசின் சூழ்ச்சியை பொது சமூகத்துக்கு உணர்த்திட இதைவிட அரிய சந்தர்ப்பம் வேறு கிடைக்காது.
ஆகவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்நாடியாக இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் வரைவு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான கருத்துகளையும், கண்டனங்களையும் nep.edu@nic.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும், @DrRPNishank, @PMOindia, @HRDMinistry, @ugc_india ஆகிய ட்விட்டர் பக்கங்களில் பதிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
கண்டனங்களை ட்விட்டர் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்வதுடன், மனிதவள மேம்பாட்டுத்துறையின் முகவரிக்கு (Ministry of Human Resources Development, 127-c, Shasthri Bhavan, New Delhi) கல்விக்கொள்கைக்கு எதிரான கருத்துகள் மற்றும் கண்டனங்களை அடங்கிய அஞ்சல் அட்டைகளை லட்சக்கணக்கில் அனுப்பி வைத்து கழக அணிகளிலேயே இளைஞரணியின் கருத்துகளும், கண்டனங்களும்தான் முதலிடத்தை பிடித்தது என்பதை மத்திய - மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்கள் உணரும்படியும், நமக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கும் தலைவர் அவர்கள் மகிழும்படியும் செய்திட வேண்டும்.
துடிப்பு மிகுந்த, துணிச்சல் மிகுந்த தமிழக இளைஞர்களைத் தாண்டி, தமிழ் மொழியை நாம் பேணிக்காக்கும் சமூக நீதியைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது, இந்தி மொழியை திணிக்கவே முடியாது என்ற எச்சரிக்கையை உணர்த்தும் வகையில் கண்டனங்களும், கருத்துகளும் மலைபோல் மனிதவள மேம்பாட்டுத்துறையின் மின்னஞ்சலில் குவிய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !