DMK

எட்டு வழிச்சாலை திட்டம் : வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது - எடப்பாடியை கடுமையாகச் சாடிய டி.ஆர் பாலு !

எந்த வகையிலாவது எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என, முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு. காவல்துறை துணையோடு போராடும் மக்களை கைதுசெய்து சிறையில் அடைத்து சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி விரும்புவதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்பு மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகள் நிலத்தை எடுத்து சாலை போடவில்லையா?” என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தில் முதலமைச்சருக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி அவ்வளவு என்ன ஆர்வமோ என்ற சந்தேகம் இயற்கையாகவே எழுகிறது. நான் மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சராக பணியாற்றய போது தமிழகத்தில் 734 கி.மீ., நீளத்துக்கு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட மாபெரும் சாதனையை முதல் அமைச்சர் பழனிச்சாமி தனது வாயாலேயே பாராட்டி உள்ளதற்கு நன்றி.

திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியில் ஆட்சியில் பங்கேற்ற நேரத்தில் போடப்பட்ட 734 கி.மீ., சாலைகள் அனைத்தும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டவை என்பதை முதலமைச்சர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தவரை மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு கிலோ மீட்டர் சாலை கூட அமைக்கப்படவில்லை என்பதையும் இந்த நேரத்தில் முதலமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.விளை நிலங்களை பாதுகாப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்போதுமே முக்கியத்துவம் அளித்திருக்கிறது.

வளமான விளைநிலங்கள் பாழ்படும் என்ற ஒரே காரணத்துக்காக மிகவும் முக்கியமான சாலைகள் நான்கு வழி சாலையாக மாற்றப்படாமல் இருவழி சாலையாகவே மேம்படுத்தப்பட்டன என்பதை நெடுஞ்சாலைத்துறையையும் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அதிகாரிகளிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு 45 கி.மீ., நீளம் கொண்ட திருச்சி- கிருஷ்ணராயபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதி. இந்த சாலைப் பகுதி நாகை-திருச்சி-கரூர்- கூடலூர்-மைசூர் நெடுஞ்சாலையின் மிக முக்கியமான மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஆனால், 40 கிலோமீட்டர் தொலைவுக்கும் தற்போது உள்ளது போல் சாலையின் இரு புறமும் அகண்ட காவேரி பாசனப் பகுதியில் உள்ள வளமான விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் - இன்றியமையா தேவை இருந்த போதிலும் இருவழி சாலைதான் உருவாக்க பட்டுள்ளது.

எனது காலத்தில் செயல் படுத்த பட்ட எந்த சாலைத் திட்டத்தையும் மக்கள் எதிர்க்கவில்லை. போலீஸாரின் துணையோடு அராஜகமாக சாலை போட தி.மு.க ஆட்சி முற்பட்டதுமில்லை. மக்களின் கருத்துக்களுக்கு எதிராக தலைவர் கலைஞர் ஆட்சியில் ஒரு துரும்பு கூட எடுத்துப் போட்டதாக வரலாறும் இல்லை.

ஆனால், சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத திட்டம். தாய்மார்கள் குடும்பம் குடும்பமாகவும், விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரோடும் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் திட்டம். போலீஸாரை வைத்து போராட்டக்காரர்களை அடக்கியதை உயர்நீதிமன்றமே கண்டித்த திட்டம்.

பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட ஏஜென்ஸியை வைத்து நேரில் செல்லாமல் கூகுள் மேப் மூலம் ஆய்வு செய்யப்பட்ட திட்டம். இறுதியாக உயர்நீதிமன்றமே தலையிட்டு ரத்து செய்த திட்டம். தேர்தல் வரை, பயத்தின் காரணமாக திட்டம் செயல்படுத்தப்படாது என்று பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல மீண்டும் எட்டு வழி சாலை பற்றி திரு பழனிச்சாமி பிதற்ற ஆரம்பித்து விட்டார்.

ஆனால், அவரது கனவு ஒரு நாளும் நிறைவேற போவதில்லை.காரணம் , ஐந்து மாவட்ட மக்கள் மட்டும் அல்ல அதிமுக கூட்டணி கட்சியினரே இந்த சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை ஏற்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆகவே காவல்துறை துணையோடு - போராடும் மக்களை கைது செய்து சிறையில் அடைத்து சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி விரும்புவது போல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களும் விரும்பியதில்லை. மத்திய அமைச்சராக இருந்த நானும் விரும்பியதில்லை என்பதை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்து, முதலில் மக்களின் உணர்வுகளை மதிக்க அதிமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறுத் தெரிவித்துள்ளார்.