DMK

எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுக : சிறப்பான சம்பவம் செய்த தி.மு.க எம்.பி.,க்கள்! - குவியும் பாராட்டுகள்

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.இந்த திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிலம் கையகப்படுத்த தடை விதித்தது.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணை வந்தபோது, 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுமாறு டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், கவுதம சிகாமணி, செந்தில்குமார், அண்ணாதுரை ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த திட்டத்தால் 40 கி.மீ தூரம் மட்டுமே குறையும். அதற்காக பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கையையும் சிதைத்து 10 ஆயிரம் கோடி செலவழித்து கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் மூன்று சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதற்குக் காரணம் எட்டு வழிச்சாலை திட்டம் சேலம், விழுப்புரம், தர்மபுரி, திருவண்ணாமலை வழியாக அமைக்கப்பட உள்ளது. தற்போது அந்த தொகுதி எம்.பி.,க்களே அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருப்பதால், பா.ஜ.க அதிர்ச்சி அடைந்துள்ளது.