DMK
“உளவுத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது; முடிந்தால் வழக்கு போடுங்கள்” : ஆ.ராசா முழக்கம்!
வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் மற்றும் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் ஆ.ராசா எம்.பி., அப்போது அவர் பேசியதாவது :
“தலைவர் கலைஞர் இன்று நம்மிடையே இல்லை எனும் கலக்கம் ஒருபக்கம்; தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கும் முதல்வரும் துணை முதல்வரும் நமக்கு வாய்த்திருக்கிறார்கள் எனும் கவலை ஒருபக்கம், இந்த கலக்கத்திற்கும் - வேதனைக்கும் இடையே இருக்கும் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்று நம் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழக, கேரள எம்.பி-களை நாடாளுமன்றத்தில் வினோதமாகப் பார்க்கிறார்கள். மோடி அலை வீசியதாக மொத்த இந்தியாவும் வாக்களிக்க, தமிழகத்தில் மட்டும் ஒன்றுமே செய்ய முடியவில்லையே எனக் கேட்கிறார்கள்.
நாங்கள் திரும்பக் கேட்கிறோம். மோடி ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றினாரே அதற்கு வாக்களித்தீர்களா? ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும் என்றாரே அதற்காக வாக்களித்தீர்களா ?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்களே.. ஆனால், பொருளாதாரம் நசிவடைந்ததே... அதற்காக வாக்களித்தீர்களா எனக் கேட்கிறோம். அவர்களுக்கு எதுவும் நினைவிலில்லை. இவற்றையெல்லாம் நினைவுபடுத்தத்தான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் எங்களுக்கு இருக்கிறார்கள்.
ஆட்சியில் இல்லாத நாங்கள், வென்றால் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னோம். நீட்டுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி, எதிர்க்கட்சியான தி.மு.க முன்னின்றது. தமிழக மாணவர்களின் நலன் காக்க நீட்டை எதிர்த்து நிற்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு என வழக்கப்போட்டு 2011ல் என்னை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்கள். அன்றைய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு, நான் என் மனைவி பெயரில் வெளிநாட்டில் 3,000 கோடி டாலர் வைத்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் சிபிஐ-யிடம் சிக்கியதாகவும் எழுதியது.
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டியது இந்த ஆளா என்பது போலப் பார்த்தார் நீதிபதி. திகார் சிறைக்கு அனுப்பப்போகிறேன். என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டார்.
ஒருபோதும் ஜாமின் கேட்கப்போவதில்லை. இங்கிருக்கும் சிபிஐ-க்கும், அமலாக்கத்துறைக்கும், வருமான வருமான வரித்துறைக்கும் அறைகூவல் விடுகிறேன். என் மனைவி பெயரில் நான் வெளிநாட்டில் பதுக்கியிருப்பதாகச் சொல்லும் தொகையில் ஒரு டாலரையாவது கண்டுபிடித்துக் காட்டுங்கள். இந்த வழக்கை நான் நடத்தவில்லை. சாகும்வரை சிறையில் இருக்கத் தயார்.” என்றேன்.
2017-ல் இந்த வழக்கில் “ராஜாவிடம் ஒன்றுமில்லை. விடுதலை செய்கிறோம்” எனத் தீர்ப்பு வருகிறது. ஆனால், இதை ஊழல் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. ஒரு பொய்யான குற்றச்சாட்டால் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விளைவை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்திய அரசியலமைப்பின் முக்கியப் பொருளான மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைக்கும் மோடி, பதவியேற்றபிறகு அரசியல் சாசனத்தை வணங்குகிறார். இதுதான் ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்’. உளவுத்துறை இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முடிந்தால் வழக்கு போடுங்கள்” எனப் பேசினார் ஆ.ராசா.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு