DMK
‘சேலம் வேங்கடசாமி’ மறைவு: அன்பு மலரை இழந்துவிட்டது எங்கள் குடும்பம் - ஸ்டாலின் இரங்கல்!
எழுத்தாளர் சேலம் வேங்கடசாமியின் மறைவு நட்புக்கும், எழுத்துலகுக்கும், பேரிழப்பு என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் இரங்கல் செய்திக் குறிப்பு பின்வருமாறு,
“சேலம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் வேங்கடசாமி” என்று தலைவர் கலைஞர் அவர்களின் பேரன்புக்கும் வற்றாத பாசத்திற்கும் என்றென்றைக்கும் பாத்திரமான எழுத்தாளர் சேலம் திரு.வேங்கடசாமி அவர்கள், திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அறிமுகமாகி, சேலத்தில் உள்ள கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 50 ரூபாய்க்கு வாடகை வீடு பிடித்துக் கொடுத்து அமர்த்தியது முதல், தலைவர் கலைஞர் அவர்கள் சென்ற பாதையில் தொய்வின்றிப் பயணித்தவர் திரு. வெங்கடசாமி.
தலைவர் கலைஞர் அவர்களின் திரை உலக- இலக்கிய வாழ்விலும், சொந்த வாழ்விலும் திரு வேங்கடசாமிக்குத் தனிச் சிறப்பான இடமுண்டு என்பதை நானும், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்கு அறிவோம். தலைவர் அவர்களின் குடும்பத்துடன் கொட்டியும் ஆம்பலும் போல ஒட்டி உறவாடியதால், தலைவர் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராகவே கருதப்பட்டுப் போற்றப்பட்டவர் அவர்.
பல கட்டுரைகளையும் நூல்களையும் இயற்றி வெளியிட்டு, தன்னை ஒரு ஆக்கபூர்வமான எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொண்டவர் அவர். அப்படிப்பட்ட தலைசிறந்த நண்பர்- தலைவரின் குடும்பத்தார் அனைவர் மீதும் பாசமழை பொழிந்தவர் அவர். தலைவர் கலைஞர் அவர்கள் மறைவிற்குப் பிறகு, ஆனந்த விகடனுக்கு திரு வேங்கடசாமி அளித்த பேட்டியில், “எப்போது போனாலும் நேரடியாகக் கலைஞரைச் சந்திக்கும் நபர்களில் நானும் ஒருவன் என்று என்னும் போது அடுத்த பிறவியிலும் கலைஞர்தான் என் நண்பராகப் பிறக்க வேண்டும்” என்ற ஆழமான நட்புக்கு எடுத்துக்காட்டான, உணர்வுப்பூர்வமான வரிகள் என் நினைவுக்கு வருகிறது.
எங்கள் குடும்பம் ஒரு அன்பு மலரை இழந்து விட்டது. இலக்கிய உலகம் ஒரு இனிமையான எழுத்தாளரைப் பறிகொடுத்து விட்டு நிற்கிறது. “நட்புக்கும்” “எழுத்துலகத்திற்கும்” பேரிழப்பான திரு. வேங்கடசாமி அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், திராவிட இயக்கத்தின் தொடக்க காலப் பெரியவர்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!