DMK
23 ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பு ஆக்கிரமிக்கப்பட்டதல்ல - மா.சுப்பிரமணியன் விளக்கம்!
23 ஆண்டுகளாக வசித்து வரும் கிண்டி தொழிலாளர் குடியிருப்பு ஆக்கிரமிக்கப்பட்டதல்ல என, தி.மு.க எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மா.சுப்பிரமணியன் இன்று (26.05.2019) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் 1996 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் கிண்டி தொழிலாளர் குடியிருப்பு வீட்டை சிட்கோ நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கில் நீதிமன்றம் வழக்கின் உண்மைத் தன்மைகளுக்கு உள்செல்லாமல் சட்டப்படி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரதிவாதி சிட்கோ மேலாண்மை இயக்குநர் மற்றும் சிட்கோ அதிகாரிகள்தான். இதற்கான சட்டப்பூர்வமான பதிலையும், விளக்கத்தையும் முதல் ஐந்து பிரதிவாதிகளாகிய அரசு அதிகாரிகள் விசாரணையில் தெரிவிப்பார்கள். விசாரணை முடிவை மற்றவர்களைப்போல் நாங்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
தமிழகத்தில் மொத்தம் பத்து மாவட்ட தொழிற்பேட்டைகளில் பணிபுரிந்துவரும் நலிந்த தொழிலாளர்களுக்கு கட்டப்பட்ட மொத்தக் குடியிருப்புகள் 1,079. இவையனைத்தும் 21-8-1957ம் ஆண்டு தொழிலாளர்களுக்கான மலிவு விலை வீட்டு வசதித் திட்டம் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளாகும். இவையனைத்தும் அந்தந்த தொழிற்பேட்டையில் அமைந்திருந்த தொழிற்சாலைகளின் மூலமாக மாத வாடகை ரூ.5 என்றும், பின்னர் ரூ.11 என்றும் வசூலிக்கப்பட்டு வந்தது.
1972ம் ஆண்டு வரை சிட்கோ நிர்வாகம் அந்தக் குடியிருப்புகளை எல்லாவிதமான பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வந்தது. பின்னர் எந்தவிதமான பராமரிப்புமின்றி இக்குடியிருப்புகள் அனைத்தும் 1974 முதல் சிட்கோ நிர்வாகம் பராமரிப்பை கைவிட்டுவிட்டது. 1974 முதல் இக்குடியிருப்புகள் அனைத்தையும் குடியிருப்பவர்களுக்கே உரிமையாக்கி தரவேண்டுமென்ற கோரிக்கையை கிண்டி தொழிற்பேட்டை, தொழிலாளர் குடியிருப்பு பொதுநலச் சங்கத்தின் வாயிலாக அந்தந்த ஆட்சிக் காலங்களில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாயிலாக சட்டப்பேரவையிலும் எடுத்துரைக்கப்பட்டு வந்தது. அதுமுதல் பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
அரசாணைகளின் விவரம்
1) அரசு ஆணை நிலை எண்.971 வி.வ. (ம) ந.வ. நாள் : 15-07-1987
2) அரசு ஆணை நிலை எண்.1611, வி.வி. (ம) ந.வ. நாள் : 9-12-1988
3) அரசு ஆணை நிலை எண்.1074, வி.வ. (ம) ந.வ. நாள் : 9-11-1989
4) அரசு ஆணை நிலை எண்.249, வி.வ. (ம) ந.வ. நாள் : 22-2-1991
5) அரசு ஆணை நிலை எண்.691, வி.வ. (ம) ந.வ. நாள்: 10-08-1993
பின்னர் தலைவர் கருணாநிதி முதல்வரானதும் அரசு ஆணை நிலை எண்.128 நாள்: 24-3-1997 அன்று சட்டப்பேரவையில் தாயுள்ளத்துடன் தொழிலாளர் குடியிருப்புத்தாரர்களின் கோரிக்கைகளை பரிசீலனைச் செய்து ஒரு குடியிருப்பின் விலை ரூ.9,600 என்ற மலிவு விலையில் வழங்கலாம் என்று ஆணைப் பிறப்பித்து விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கிண்டி தொழிற்பேட்டையில் மொத்தம் உள்ள வீடுகள் எண்ணிக்கை 406. இதில் டான்சி குடியிருப்புகள், மின்சார வாரிய குடியிருப்புகள், சிட்கோ தொழிலாளர்கள் குடியிருப்புகளும் அடங்கும். சிட்கோ நிலம் எங்கள் குடும்பத்தினர் பெயருக்குப் மாற்றப்படவில்லை. விற்பனைப் பத்திரம் சிட்கோவினால் வழங்கப்படும்வரை அந்நிலம் சிட்கோவுக்கு மட்டுமே சொந்தமானது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சொத்து விவர பிரமாணப் பத்திரத்திலும் இதையே தெரிவித்துள்ளேன்.
உண்மை இப்படியிருக்க, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற போதும் இதே வீட்டுப்பிரச்சினையை பூதாகரமாக்கி, வாரப் பத்திரிகைகளில் அட்டை செய்தியாக வெளியிட வைத்து ஆயிரக்கணக்கானப் பிரதிகளை இலவசமாகத் தொகுதி முழுவதும் வழங்கினார்கள். இதை தனிப்பட்ட சுயேட்சை வேட்பாளர் பார்த்திபன் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் எதிரிகளின் பொய்ப் பிரச்சாரத்தை பொதுமக்கள் புறம்தள்ளிவிட்டார்கள். வழக்கு தொடர்ந்த பார்த்திபன் பெற்ற வாக்குகள் 87 மட்டுமே.
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மட்டுமே தேவைப்படும்போது இந்த ஒரேப் பிரச்சினையை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இதேப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இதே பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கலையரசன் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையில் 2008 ம் ஆண்டு எங்களை போல் பத்தாண்டுகளுக்கு குடியிருப்பவர்களை முறைப்படுத்த, சிட்கோ விண்ணப்பங்களை கேட்டுப் பெற்றுள்ளது. இதே போன்ற விவரங்களை 2018 டிசம்பர் மாதமும் சிட்கோவால் அனைத்து குடியிருப்புத்தாரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. தலைவர் கருணாநிதியால் ரூ.9600 என்று வழங்கப்பட்ட மலிவு விலைக்கு மாறாக புதுத்தொகை ஒன்றினை நிர்ணயிக்க அரசு பரிசீலனையில் உள்ளது.
இதேபோல் கிண்டி தொழிலாளர் குடியிருப்பில் மட்டும் 94 குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களின் நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதென உயர் நீதிமன்ற வழக்கு எண்.10939/2018 இல் சிட்கோ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 94 குடியிருப்புத்தாரர்களையும் விசாரணை செய்து விவரங்களை தர வேண்டுமென்று சி.பி.சி.ஐ.டி.க்கு புகார் செய்யப்பட்டுள்ளதென சிட்கோ தனது மேற்படி பிராமணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. இது இப்படியிருக்க பார்த்திபன், எங்கள் மீது மட்டும் ஒரு புகார் மனுவை கிண்டி காவல் நிலையத்தில் அளித்து, அது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. என் மீது களங்கத்தை ஏற்படுத்தி, எப்படியாவது என்னை கைது செய்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுங்கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நாங்கள் இப்போதும், அடிமனைச் சொந்தமில்லாத தொழிலாளர் குடியிருப்பில்தான் வசித்து வருகிறோம். இதில் மோசடி செய்வதற்கோ, பொய் ஆவணங்களைத் தயாரிப்பதற்கோ, ஆக்கிரமிப்பு செய்வதற்கோக எந்தவிதனமான முகாந்திரமும் இல்லை. தொடர்ந்து அடிமனையைத் தவிர்த்து, அவரவர் குடியிருக்கின்ற குடியிருப்புகளுக்கு ஏற்றாற்போன்று மாநகராட்சி சொத்து வரி, குடிநீர் வரி முதலியவற்றை 2001 ஆம் ஆண்டு முதல் நாங்கள் அனைவரும் செலுத்தி வருகின்றோம்.
கிண்டி தொழிற்பேட்டை தொழிலாளர் குடியிருப்பைப் போல தமிழ்நாடு முழுவதும் மேற்கூரை உரிமையை ஆயிரக்கணக்கானார்கள் மாற்றிக் கொடுத்து உள்ளனர். இதே போன்ற கோரிக்கைகள் குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையில் குடியிருப்புகளில் வசிக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
உண்மைகள் இவ்வாறு இருக்க தொடர்ந்து அரசியல் ஆதாயத்திற்காக இச்செய்தியை பூதாகரமாக்கிக் கொண்டிருக்கின்றனர். பார்த்திபன் தொடுத்திருக்கிற இவ்வழக்கு சட்டரீதியான உண்மை நிலைகளை ஊருக்கு வெளிப்படுத்திட எனக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதற்காக பார்த்திபனுக்கும், அவருக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் ", இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!