DMK

இருமொழிக்கொள்கையா, மும்மொழிக்கொள்கையா என்பதை முதல்வர் விளக்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி !

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"தமிழகத்தில் 1938ல் இருந்தே இந்தி நுழையக்கூடாது என தொடர்ந்து போராடி வருகின்றோம் . இந்தியை திணிக்க ராஜாஜி முயன்றபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. கருணாநிதியின் அரசியல் நுழைவுக்கு காரணமாக இருந்தது இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938 ஆம் ஆண்டு, திருவாரூர் வீதிகளில் தமிழ் கொடியை ஏந்தியபடி, 14 வயது சிறுவனாக, இந்தியை எதிர்த்து வீதிகளில் குரல் எழுப்பிய கருணாநிதிதான் பிற்காலத்தில் திமுக தலைவராக ஐம்பதாண்டு காலம் பதவி வகித்தார். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வது வாடிக்கையாகிவிட்டது . இந்தியை தமிழகத்தில் நுழைக்க பாஜக முயற்சிக்கிறது .

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களும் குரல் எழுப்பியதன் விளைவாக, கஸ்தூரிரங்கன் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சொல்லி உள்ளது. ஆனால் இடையில் ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு, மீறுவது என்பது இவர்களின் வாடிக்கை.

1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கை திட்டம் தான் தமிழகத்தில் இருக்க வேண்டும். இதனால்தான் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இருமொழிக் கொள்கை தான் திமுகவின் கொள்கை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்து கூறியுள்ளார். இருமொழி கொள்கையினால் தான் தமிழகத்தை சேர்ந்த பலர் அயல்நாடுகளில் நல்ல பொறுப்புகளில் உள்ளனர்.

ஆனால், எடப்பாடி இந்த வரலாற்றையெல்லாம் மறைத்து விடும் வகையில், அடிமை சாசனத்தில் கையெழுத்திடும் வகையில், தமிழைப் பிற மாநிலங்களை பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டும் என்று மோடியை குறிப்பிட்டு சொல்லியுள்ளது, மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக பொருள். எனவே, முதல்வர் தெளிவாக பதில் சொல்ல வேண்டும். ஆணா, பெண்ணா என்று கேள்வி கேட்டால், ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டும். அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கை உங்கள் கொள்கையா? அல்லது மும்மொழி திட்டத்தை, நீங்கள் ஏற்கப் போகிறீர்களா என்ற கேள்விக்கு தெளிவான பதிலை முதல்வர் சொல்ல வேண்டும்.

சஜ்சய் தத் எந்த அடிப்படையில் விடுதலை செய்தார்களோ அதே போல பேரறிவாளன் உட்பட ஏழுபேரை விடுதலை செய்ய வழிவகை உள்ளது . தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறுக் கூறினார்.