DMK

தமிழுக்கு சோதனை வந்தால் கட்சிகள் கடந்து தமிழராக ஒரேகுரலில் ஒலிப்போம்! மு.க.ஸ்டாலின் சூளுரை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்ததின விழா மற்றும் தேர்தலில் மகத்தான வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டணிக் கட்சித் தலைவர்களால் மேடை நிறைய தொண்டர்களால் அரங்கம் நிறைய நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.

இந்த நிரைவுரையின் போது அவர் பேசியதாவது; "கடந்தாண்டு தலைவர் கலைஞர் 95வது பிறந்தநாளை திருவாரூரில் கொண்டாடினோம். அப்போது அந்த விழாவில் கலைஞர் அவர்களிடம் உங்களது சக்தியில் பாதியை எங்களுக்கு தாருங்கள் என்றேன். அவர் அளித்த அந்த பாதி சக்தியை பெற்று 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளோம். இந்திய அளவிலேயே 3வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அமரப்போகிறோம் என்றால் தலைவர் கலைஞர் அவர்களே இதற்கு யார் காரணம். உங்கள் சக்தி தான் காரணம்.

ஒற்றுமையோடு தேர்தல் பணியில் ஈடுபட்டு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அண்ணா மறைவுக்குப் பிறகு தலைவர் கலைஞர் தலைவராகப் பொறுப்பேற்றுச் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே, இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

தலைவர் கலைஞர் அவர்களே, தேர்தலில் பெருவெற்றி பெறச்செய்த மக்களுக்கு மட்டுமல்ல; எங்களை இன்றைக்கும் இயக்கிக்கொண்டிருக்கிற உங்களுக்கும் நன்றி சொல்கிற கூட்டம் என நெகிழ்ச்சியாகப் பேசினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர், இதற்கு முன்னதாக தேர்தல் நேரங்களில் தி.மு.க வின் கதை முடியப்போகிறது. இந்த தேர்தல் தான் திமுக சந்திக்கும் கடைசி தேர்தல், ஸ்டாலின் கனவில் இருக்கிறார் என்று ஏளனம் செய்தார்கள். ஆனால் ஏளனம் செய்த பெரிய தலைவர் நினைத்திருக்கமாட்டார்கள். திமுக கூட்டணி இவ்வளவு பெரிய்ய மகத்தான வெற்றியை பெரும் என்று, மக்கள் நம்மை அளித்த தீர்ப்பு அவர்கள் கற்பனையில் மண்ணை அள்ளி போட்டிருக்கிறார்கள்.

மேலும் வெற்றி பெற்ற பின்பு தி.மு.க வென்றதால் என்ன பயன் எனக் கேட்டார்கள். இந்த இடத்தில் நான் சொல்லறேன், இந்திய கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்த, கச்சத்தீவை மீட்க நாங்கள் போராடுவோம். மரண தண்டனையை ரத்து செய்ய, மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவல் மொழியாக நாங்கள் போராடுவோம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை, கேபிள் டிவி கட்டணம், ஜி.எஸ்.டி வரியை ஒழுங்குப்படுத்த, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தடுக்கும் முயற்சியிலும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கவும், மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்யவும் போராடுவோம். இந்த போராட்ட குணத்தை தி.மு.க என்றைக்கும் கைவிடாது.

சட்டசபை நாளுமன்ற உறுப்பினர்களிடம் மாதம்தோறும் பகுதி, பகுதியாக செல்ல வேண்டும். மக்கள் குறைகளை கேட்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் எடுத்து சொல்லி நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுள்ளேன். அதுமட்டுமின்றி, தி.மு.க எம்எல்ஏ, எம்.பிக்கள் தங்களது பணி என்ன என்பதை மாதம் ஒருமுறை என்னிடம் அறிக்கையாக தர வேண்டும். இதை சரியாக செய்தால் அடுத்து நம்முடைய ஆட்சி தான். ஆட்சி வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சிக்கு ஒன்றரை வருடம் தான். அதன்பிறகு மீண்டும் மக்களை போய் சந்திக்க வேண்டும்.

இடைதேர்தலை பொறுத்தவரையில் திருவாரூரை தவிர்த்து பார்த்தால் 12 தொகுதியை அதிமுகவிடம் இருந்து கைப்பற்றி இருக்கிறோம். 22 இடங்களில் அவர்கள் 12 இடத்தை பறிகொடுத்து இருக்கிறார். இது தான் இன்றைய நிலை. தி.மு.கவை தனித்து பார்த்தால் 101 எம்எல்ஏக்கள். இதுவரை வராலாற்றில் உண்டா. இவ்வளவு பெரிய எதிர்க்கட்சி சட்டசபையில் இருந்ததாக வரலாறு உண்டா என்று கேள்வியெழுப்பினார்.

கடந்த 1971ல் தலைவர் கலைஞர் வெற்றி பெற்ற 184 இடங்கள் தான் ஆளும் கட்சியாக அதிக இடம். எதிர்க்கட்சியிலும் நமக்கு தான் அதிக இடம். இரண்டிலும் நாம் தான் வென்று இருக்கிறோம். விரைவில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 பேர் மீதான வழக்கு தீர்ப்பு விரைவில் வரப்போகிறது. அது வருகிற போது இந்த ஆட்சி இருக்குமா, இருக்காதா என்பது கேள்விக்குறி. தானாக கவிழக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.

கடந்த 30ம் தேதி மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று 5 நாட்கள் கூட முடியவில்லை. அதற்குள்ளாக தமிழகத்திற்கு என்னென்ன கேடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 246 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட அனுமதி கொடுத்தார்கள். சேலம் 8 வழிச்சாலை திட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்து இருக்கிறது. மருத்துவ மாணவர்களுக்கு இருந்த, நீட் தேர்வை விரிவுப்படுத்தி, சித்தா ஆயுர்வேத படிப்புக்கு நீட்டித்து சட்டம் போட்டுள்ளது. உயர் வகுப்பிற்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மாநில அரசுகளுக்கு உத்தரவு போட்டுள்ளது.

இது, அனைத்திற்கும் மேலாக இந்தியை திணிக்கிற திட்டம். ஒரு காலத்தில் இந்தியை திணித்தவர் மூதறிஞர் ராஜாஜி. அவரே பிற்காலத்தில் அதை எதிர்த்தார். ஆனால், எதிர்த்தவர்கள் என்றைக்கும் மாறமாட்டார்கள். இந்தி பேசாத மாநிலத்து மக்களை பழிவாங்கக்கூடிய எண்ணத்தில் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பை பார்த்து பதுங்குவது போல் பதுங்கி ஒரு கபட நாடக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொழி கொள்கை விவகாரத்தில் ஒரு கபட நாடகத்தை மத்திய அரசு நடத்துகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் தி.மு.க கொள்கை. ஆதிக்க இந்தி திணிப்பை நாங்கள் என்றைக்கும் எதிர்த்தே தீருவோம். அதில் சமரசம் கிடையாது. தமிழுக்கு ஒரு சோதனை வரும் என்று சொன்னால் கட்சி எல்லையை கடந்து எல்லோரும் தமிழன் என்ற சிந்தனையோடு தமிழராக ஒரே குரலில் ஒலிப்போம்.

எங்களுக்கு பெரியார் வழியிலும் போராட தெரியும். அண்ணா வழியிலும் போராட தெரியும். நான் இந்த கூட்டத்தின் வாயிலாக பிரதமர் மோடிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். பெரியாரின் சுயமரியாதை, இன உணர்வு, கலைஞரின் மாநில சுயாட்சி ஆகிய 3 ஆயுதங்களை எங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.

தலைவர் கலைஞர் பள்ளி பருவத்திலே 14 வயதிலேயே தான் படித்து கொண்டிருக்கும் போது, மாணவர்களை ஒன்று திரட்டி திருவாரூர் வீதியிலேயே தமிழ் கொடி ஏந்தி போர் பேரணியை அன்றைக்கே தொடங்கியிருக்கிறார். அதே போன்ற போராட்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் வந்து கொண்டிருக்கிறது.

இப்போது அறிவித்து இருக்கிற, இப்படி ஏமாற்றுகிற அறிவிப்பிற்கு 2 முதல் 3 நாட்களுக்குள் உரிய விளக்கம் வர வேண்டும். இல்லையெனில் இந்த மேடையில் அமர்ந்திருக்கிற அத்தனை தலைவர்களும் ஒன்று சேருவோம். முடிவெடுப்போம். அதன்பிறகு மிகப்பெரிய போராட்டத்தை தமிழகம் சந்திக்கும். என உணர்ச்சிகரமாகப் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் மேடையில் பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள் இந்தியாவின் மதச்சார்பின்மையை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.